செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏஐ (AI) தொழில்நுட்பத்தின் அதீத வளர்ச்சி ஒரு புறம் ஆச்சர்யப்படுத்தினாலும் மறுபுறம் பல அச்சங்களையும் விதைத்து வருகிறது. திரைப்படங்களில் காட்டப்படுவதை போல இந்த எந்திரங்கள் மனிதர்களை மிஞ்சிவிடுமோ என்ற அச்சம் நிலவும் வேளையில் ஏஐ ஆய்வாளர் புது குண்டை தூக்கி போட்டுள்ளார்.
உலகின் முன்னணி ஏஐ நிறுவனமான ஆந்திராபிக் (Anthropic) நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர் ஜேக்கப் காக்சன் அண்மையில் தனது பதவியை ராஜினாமா செய்தார். ஏஐ நிறுவனங்கள் மனித குலத்தை அழிக்கக்கூடிய அமைப்புகளை உருவாக்கி வருவதாகவும், மனிதர்களின் உயிரோடு விளையாட தொடங்கி இருப்பதாகவும் அவர் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.

ஜேக்கப் காக்சன், சாட் ஜிபிடி உரிமையாளரான ஓபன் ஏஐ மற்றும் ஆந்திராபிக் ஆகிய இரண்டு முன்னணி ஏஐ நிறுவனங்களிலும் சேர்த்து கடந்த மூன்று ஆண்டுகளாக Pre-training எனப்படும் முன் பயிற்சி ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்தவர்.இவர் எக்ஸ் தளத்தில் தொடர்ச்சியான பதிவுகளை வெளியிட்டுள்ளார். அதில் இரண்டு ஏஐ நிறுவனங்களுமே பொறுப்பற்ற முறையில் நடந்து கொள்வதாக கூறியுள்ளார்.
தாமாகவே தன்னை மேம்படுத்தி கொள்ளும் Super intelligence ஏஐ தொழில்நுட்பத்தை நோக்கி இந்த நிறுவனங்கள் கண்மூடித்தனமாக ஓடுவதாகவும், இது மனிதகுலத்தின் உயிரோடு சூதாடுவதை போன்றது என்றும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
AI தொழில்நுட்பத்தின் சக்தியை யாரும் குறைத்து மதிப்பிடக் கூடாது என காக்சன் எச்சரித்துள்ளார். விரைவில் இந்த அமைப்புகள் எதையும் ஹேக் செய்யக்கூடிய, எந்தவொரு துறையையும் ஒரே இரவில் புரட்டி போடக்கூடிய மற்றும் உண்மையான அதிகாரத்தையும் வளங்களையும் பெறக்கூடிய Superhuman system-களாக மாறிவிடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த தொழில்நுட்பம் எந்தளவுக்கு ஆபத்தானது என்பதை இதனை உருவாக்குபவர்களே நன்றாக அறிவார்கள் என கூறியுள்ள அவர், இந்தத் தசாப்தத்திற்குள் அதாவது 2030-க்குள் ஏஐ தொழில்நுட்பம் நம் அனைவரையும் கொன்றுவிடக்கூடும் என அதை உருவாக்கும் நபர்களே தீவிரமாக நம்புகிறார்கள் என கூறி அதிர்ச்சி தந்துள்ளார்.
மனித வரலாற்றில் வேறு எந்த மனித நடவடிக்கையும் இந்த அளவுக்கு ஆபத்தை ஏற்படுத்தியதில்லை என்றும் அவர் எச்சரித்துள்ளார். பொதுவெளியில் பேசும் போது பல ஏஐ நிறுவன தலைவர்களும் மூத்த ஆராய்ச்சியாளர்களும் நிலைமையை சமாளிக்கும் வகையில் பக்குவமாக பேசினாலும், தனிப்பட்ட முறையில் பேசும்போது அவர்கள் இதே பயத்தை வெளிப்படுத்துவதாகவும் காக்சன் குறிப்பிட்டுள்ளார்.
ஏஐ தொழில்நுட்பத்தின் ஆபத்தை அறிந்திருந்தும் இந்த நிறுவனங்கள் அதனை கவனத்தில் கொள்ளாமல் யார் முதலில் இந்த ஆபத்தை விளைவிப்பது என்ற போட்டியில் உள்ளனர் என கூறியுள்ளார். ஏற்கனவே ஏஐ விவகாரத்தில் உலக நாடுகள் மற்றும் ஆய்வகங்கள் இணைந்து செயல்பட வேண்டும் ,ஏஐ மாடல்களின் திறன்களை மேலும் மேம்படுத்துவதற்கு தற்காலிகமாக தடை விதிக்க வேண்டும் என பலரும் கோரிக்கைகளை முன் வைக்க தொடங்கியுள்ளனர். இந்த நிலையில் ஏஐ துறையின் முக்கிய நிறுவனங்களில் இருந்த ஒரு உயர்மட்ட ஆராய்ச்சியாளரே, ஏஐ மிகப்பெரிய அழிவை ஏற்படுத்தும் என அச்சம் தெரிவித்திருப்பது விவாத பொருளாக மாறியுள்ளது.


Click it and Unblock the Notifications


