திருவனந்தபுரம்: பொதுவாக பிரபலங்கள் பொது இடங்களுக்கு வரும் போதெல்லாம் பவுன்சர்கள் எனப்படும் தனிப்பட்ட பாதுகாவலர்கள் அவர்கள் உடன் வருவார்கள். வாட்ட சாட்டமான உடல் வாகு, உடல் வலிமை, கூட்டத்தை கையாளும் திறன், எந்த ஒரு சூழலில் இருந்தும் பிரபலங்களை காப்பாற்றும் குணம் இதெல்லாம் அவர்களிடம் காணலாம்.
இந்த வேலையில் நாம் பெரும்பாலும் ஆண்களை தான் பார்த்திருப்போம், தற்போது பெண்களும் இதில் கால்பதிக்க தொடங்கியுள்ளனர். அப்படி அண்மையில் கேரளாவை சேர்ந்த அனு குஞ்சுமோன் என்ற பெண் பவுன்சர் நாடு முழுவதும் புகழ்பெற்றவராக மாறி இருக்கிறார். பிரபலங்களுக்கு பாதுகாப்பு பணிக்காக செல்லும் பவுன்சர் பணியில் கேரளாவை சேர்ந்த இவர் சாதித்து வருகிறார்.

ஆண்கள் மட்டுமே அதிக அளவு இருக்கும் பவுன்சர் எனப்படும் தனிநபருக்கான பாதுகாப்பு பணியில் ஒரு பெண் ஈடுபட்டு வருவது அனைவரையும் வியக்க வைக்கிறது. பிரபலமாக இருப்பவர்கள் பொது நிகழ்ச்சிக்கு செல்லும்போது அங்கு இருக்கும் கூட்டத்தை பராமரிப்பது, ரசிகர்களிடமிருந்து பிரபலத்தை பாதுகாப்பது, பிரச்சனை ஈடுபடக்கூடிய நபர்களை அப்புறப்படுத்துவது என உடல் ரீதியாக வலிமை கொண்ட நபர்களால் மட்டுமே இந்த வேலையில் ஈடுபட முடியும்.
இந்த பவுன்சர் பணியில் பெண்களும் ஈடுபடத் தொடங்கியுள்ளனர் அவர்களுக்கெல்லாம் முன் உதாரணமாக இருக்கிறார் அனு குஞ்சுமோன். கொச்சியை சேர்ந்த 37 வயதான இவர் பல ஆண்டுகளாக பவுன்சராக பணியாற்றி வருகிறார். அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் இவர் மலையாள நடிகர் மோகன்லாலுக்கு பவுன்சராக பணியாற்றி புகழ் பெற்றார். ரசிகர்களை திறமையான முறையில் கட்டுப்படுத்தி கவனம் பெற்றார்.
தான் அடிப்படையில் ஒரு புகைப்படக் கலைஞர் என கூறும் இவர், ஒரு நிகழ்ச்சியில் புகைப்படம் எடுக்க சென்றிருந்தாராம், அப்போது பவுன்சர் ஒருவர் இவரை தள்ளினாராம், பதிலுக்கு இவர் அவரை தள்ளி விட்டாராம். அந்த சம்பவம் தான் இவரை சிந்திக்க வைத்ததாம்.
அப்போது பெண் பவுன்சர்கள் இந்த பணியில் இல்லை என்பதை அறிந்தாராம். பெண் பிரபலங்களுக்காக பெண் பவுன்சர்கள் இல்லையே என எண்ணி இந்த தொழிலில் இறங்கியதாக கூறுகிறார். தற்போது பெண் பிரபலங்கள் மட்டுமின்றி ஆண்கள் கூட தன்னை பவுன்சராக அழைக்கிறார்கள் என்கிறார்.
இதுவரை இந்த பணியில் கூட்டத்தை கையாள்வதில் தனக்கு எந்த ஒரு பிரச்சனையும் இருந்ததில்லை, ஒரு பெண் என்பதாலேயே வரக்கூடிய எந்த பிரச்சனைகளையும் நான் சந்தித்ததில்லை என கூறுகிறார். ஆண்களுக்கு நிகரான சம்பளம் கிடைக்கும் ஒரு துறை என்றும் அவர் கூறுகிறார். முறையான பயிற்சி பெற்று வந்தால் பெண்கள் நிச்சயம் இதில் சாதிக்க முடியும் என அவர் தெரிவிக்கிறார்.


Click it and Unblock the Notifications