மாத சம்பளக்காரர்கள் அனைவருக்கும் அலுவலகத்தில் மகிழ்ச்சியான நாள் என்றால் அது சம்பள உயர்வு வரும் நாள் தான், வருடம் முழுவதும் கடுமையாக உழைத்த அனைவருக்கும் இந்த சம்பள உயர்வு என்பது எவ்வளவு முக்கியம் என்பது தெரியும். இப்படியிருக்கையில் 2024-25ஆம் நிதியாண்டுக்கான சம்பள உயர்வு எப்படியிருக்கும் என்பது குறித்து முக்கியமான ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது.
AON என்ற அமைப்பு சந்தை நிலவரத்தைக் கணக்கிட்டும், நிறுவனங்கள் மத்தியிலும் ஆய்வு செய்து ஒவ்வொரு வருடமும் சம்பள உயர்வு எப்படி இருக்கும் என்பது குறித்த அறிக்கையை வெளியிடும். இந்த அறிக்கையின் படி AON வருடாந்திர சம்பள உயர்வு மற்றும் டர்ன்ஓவர் சர்வே 2024-25 என்ற தலைப்பில் நடப்பு நிதியாண்டின் முதல் கட்ட ஆய்வறிக்கையை வெளியிட்டு உள்ளது.

இந்த சர்வேயின் படி இந்திய நிறுவனங்கள் 2024-25 நிதியாண்டில் சராசரியாக 9.5% சம்பள உயர்வை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது 2024ஆம் ஆண்டின் முதல் பாதியில் செய்யப்பட்ட காணக்கெடுப்பில் பதிவான 9.3% அளவை விட சற்று அதிகமாகும்.
AON நிறுவனம் அந்த ஆய்வை, 2024 ஆம் ஆண்டின் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களுக்கு மத்தியில் பல்வேறு துறை சார்ந்த 1,176 நிறுவனங்களிடம் பெற்ற பதில்களை அடிப்படையாக வைத்து ஆய்வு செய்து வெளியிட்டு உள்ளது.
இதில் முக்கியமாக இன்ஜினியரிங் மற்றும் உற்பத்தி, ரீடைல் துறையை சேர்ந்த நிறுவனங்கள் 10% என்ற இரட்டை இலக்க சம்பள உயர்வு அளிக்கும் நிலையில் உள்ளதாக இந்த ஆய்வின் முடிவுகள் கூறுகிறது. இதை தொடர்ந்து நிதியியல் நிறுவனங்கள் 9.9% வரையிலான சம்பள உயர்வை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Aon நிறுவனத்தின் இந்திய வெகுமதி தீர்வுகள் பிரிவின் தலைவர் மற்றும் பார்னரான ரூபங்க் சௌத்ரி இந்த ஆய்வின் முடிவுகள் குறித்து கூறுகையில், உலகளாவிய பொருளாதார சவால்கள் இருந்த போதிலும், இந்தியாவில் பல துறைகளுக்கான வளர்ச்சி கண்ணோட்டம் சாதகமாக உள்ளது என்று கூறினார்.
உற்பத்தி, லைப் சையின்ஸ் மற்றும் ரீடைல் துறைகளில் எதிர்பார்க்கப்படும் சம்பள உயர்வுகள் அனைத்தும் உள்நாட்டுச் சந்தையில் அதிகரிக்கும் வர்த்தகத்தை அடிப்படையில் அளிக்கப்படுகிறது. இந்த 3 துறைக்கும் இந்தியாவில் தற்போது அதிகப்படியான டிமாண்ட் மற்றும் அதிகப்படியான வளர்ச்சியைக் கொண்டுள்ளது எனவே தான் 10 சதவீதம் வரையிலான சம்பள உயர்வு அளிக்கப்படுகிறது.
இந்த சம்பள உயர்வு அளவீடுகள் சாரசரி மட்டுமே, இதேபோல் இந்த அளவீடு ஒவ்வொரு நிறுவனங்களில், ஊழியர்களின் திறன் அடிப்படையில் அதிகரிக்கவோ அல்லது குறையவோ செய்யும். அதேபோல் 2ஆம் பாதியில் நிறுவனங்களின் நிலவரத்தை பொறுத்தும் இந்த அளவீடுகள் மாறும்.


Click it and Unblock the Notifications