பெங்களூரில் உள்ள பிரெஸ்டீஜ் சன் ரைஸ் பார்க் என்னும் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் ஒருவர், அந்த அடுக்குமாடி குடியிருப்பின் நிர்வாகம் கூறிய விதிகளுக்கு இணங்காமல் தினமும் 100 ரூபாய் அபராதம் செலுத்தி வருகிறார். சுமார் 1046 வீடுகளைக் கொண்ட இந்தக் குடியிருப்பு வளாகத்தில் ஏராளமான குடும்பங்கள் வசிக்கிறது. இந்த குடும்பங்கள் தங்கள் வீட்டின் வெளியே ஷூ ரேக்குகள், பூச்செடிகளைக் கொண்ட பூ தொட்டிகள் போன்றவற்றை வைத்திருந்தனர்.
கிட்டத்தட்ட 50 சதவீத குடியிருப்பாளர்கள் தங்கள் பொருட்களை வீட்டின் வெளியே வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அந்தக் குடியிருப்பின் அசோசியேஷன், குடியிருப்பாளர்களுக்கு ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி மற்ற குடும்பங்களுக்கு இடையூறாக இருக்கும் பொருட்களை அகற்ற வேண்டும் என்று தெரிவித்தது. இதை செயல்படுத்த அந்த அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் நபர்களுக்கு 2 மாத கால அவகாசமும் வழங்கப்பட்டது.

ஆரம்பத்தில் இதற்கு குடியிருப்பவர்கள் எதிர்ப்பு தெரிவித்தாலும், பெரும்பாலான குடும்பங்கள் இந்த உத்தரவுக்கு இணங்கத் தொடங்கினர். அதிலிருந்து தொடர்ந்து நான்கு வாரங்களுக்கு பிறகு 2 குடும்பங்களை தவிர மற்ற அனைவரும் தங்கள் பொருட்களை தாழ்வாரங்களில் இருந்து அகற்றி வைக்கத் தொடங்கினர்.
ஆனால் ஒரே ஒருவர் மட்டும் இந்த விதிகளுக்கு இணங்கவில்லை. மற்றவர்கள் எல்லாம் குடியிருப்பு அசோசியேஷனின் விதியை கேட்டு அதற்கு ஏற்ப நடந்தாலும், இந்த குடியிருப்பாளர் மட்டும் 15,000 ரூபாயை முன்பணமாக செலுத்தி விட்டு, அதை எதிர்கால அபராதங்களுக்காக பயன்படுத்தும் படியும், தன்னை தொந்தரவு செய்ய வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
அந்தக் குடியிருப்பாளர் தனது ஷூ ரேக்கையை அகற்ற மறுத்து தொடர்ந்து அபராதம் செலுத்துகிறாரே தவிர மாற்றி வைக்கவில்லை. கடந்த 8 மாதங்களில் மட்டும் இவர் தொடர்ந்து 24,000 ரூபாயை அபராதமாக செலுத்தியுள்ளார் என்று அந்தக் குடியிருப்பு அசோசியேஷனின் தலைவரான அருண் பிரசாத் தெரிவித்திருக்கிறார்.
இதற்காக அபராத தொகையை 100 ரூபாயிலிருந்து 200 ரூபாயாக உயர்த்த அசோசியேஷன் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். குடியிருப்பு அசோசியேசன் உருவாக்கும் விதிகள் அனைத்தும் அங்கு குடியிருப்பவர்களின் பாதுகாப்பு மற்றும் வசதிக்காக என்பதை புரிந்து கொள்வது அவசியம். தனி நபரின் பிடிவாதம் ஒட்டுமொத்த குடியிருப்பாளர்களுக்கும் பிரச்சனையை ஏற்படுத்தக் கூடாது. அவசர காலங்களில் பாதுகாப்பான வெளியேற்றத்தை உறுதி செய்வதற்காக தான் இத்தகைய விதிமுறைகள் வகுக்கப்படுகிறது.
எனவே இது போன்ற பிரச்சனைகளை சரி செய்ய அந்தந்த குடியிருப்பின் அசோசியேஷன் தெளிவான வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும். அங்கு குடியிருப்பவர்களும் அதனை முறையாக பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும். அதேநேரம் கட்டுமான நிறுவனங்களும் மக்களின் வசதியை கருத்தில் கொண்டு இது போன்ற கட்டிடங்களை கட்ட வேண்டும்.


Click it and Unblock the Notifications