ஆப்பிள் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக ஜான் டர்னஸ் பதவியேற்றிருக்கிறார். கடந்த 15 ஆண்டுகளாக சிஇஓ-வாக இருந்த டிம் குக்-இன் பதவிக்காலம் நிறைவடைந்ததை அடுத்து தற்போது புதிய சிஇஓ நியமிக்கப்பட்டுள்ளார். இந்த மாற்றத்தை தொடர்ந்து 2 தலைவர்களின் ஊதிய விபரங்களையும் ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டிருக்கிறது.
அமெரிக்காவின் பங்குச் சந்தை மற்றும் பரிவர்த்தனை ஆணையத்திடம் ஆப்பிள் நிறுவனம் தாக்கல் செய்த ஆவணத்தில் இந்த இரு தலைவர்களின் ஊதியம் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதை ப்ளூம்பெர்க் அறிக்கையாக தயாரித்து வெளியிட்டுள்ளது. தற்போது முன்னாள் சிஇஓ டிம் குக் எக்ஸிக்யூடிவ் சேர்மேனாக பதவி ஏற்றிருக்கிறார்.

புதிய சிஇஓ ஜான் டர்னஸின் ஊதிய விபரங்கள்: 2027-ஆம் நிதியாண்டிற்கு ஜான் டர்னஸ் சுமார் 58 மில்லியன் டாலர் ஊதியம் பெறவுள்ளார். இது இந்திய மதிப்புக்கு தோராயமாக ரூ.5,48,11,18,900. ஒவ்வொரு ஆண்டும் அடிப்படை சம்பளமாக 3 மில்லியன் டாலரும் (ரூ.28,35,06,150), 2027-ஆம் ஆண்டில் 55 மில்லியன் மதிப்பிலான பங்குகளும் வழங்கப்படவுள்ளது.
2026 ஆம் ஆண்டிற்கு 2.5 மில்லியன் மதிப்புள்ள பங்குகள் வழங்கப்படவுள்ளது. அதோடு ஆப்பிள் நிறுவனத்தின் செயல்பாட்டின் அடிப்படையிலும் 75% பங்குகளை பெறவுள்ளார் மீதமுள்ள 25 சதவீத பங்குகள் குறிப்பிட்ட கால இடைவெளியில் வழங்கப்படும் என்றும் ஆப்பிள் தெரிவித்துள்ளது.
எக்ஸிக்யூட்டிவ் சேர்மன் டிம் குக்கின் ஊதியம்: ஆப்பிள் நிறுவனத்தின் பங்குச்சந்தை செயல்பாடுகளுக்கு ஏற்ப 50% ஊதியம் வழங்கப்படும். இவருக்கு 2027-ஆம் ஆண்டில் வழங்கப்படவுள்ள பங்குகளின் மதிப்பு 45 மில்லியன் டாலர் ஆகும். இவருடைய ஆண்டு சம்பளம் 3 மில்லியன் டாலரில் இருந்து 2 மில்லியன் டாலராக குறைக்கப்பட்டுள்ளது.
அதேபோல 2027-ம் நிதியாண்டில் மொத்தமாக சுமார் 47 மில்லியன் டாலரை சம்பளமாக பெற இருக்கிறார். இந்த இரண்டு தலைவர்களுக்கும் வழங்கப்படும் பங்குகளின் மதிப்பு நிறுவனத்தின் செயல்பாட்டை பொருத்தும், பங்கு விலையை பொருத்தும் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. அதேபோல இவர்களுக்கு எவ்வளவு போனஸ் வழங்கப்படவுள்ளது என்ற விபரங்களை இன்னும் ஆப்பிள் நிறுவனம் வெளியிடவில்லை.
2025ஆம் ஆண்டில் டிம் குக் சுமார் 74.3 மில்லியன் டாலரை ஊதியமாக பெற்றார். தனது 15 ஆண்டு பணிக்காலம் நிறைவு பெற்றதையடுத்து தன்னுடைய அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் ஆப்பிள் நிறுவனத்திற்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.


Click it and Unblock the Notifications
