டெல்லி: அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்பின் பதவியேற்பு விழா ஜனவரி 20-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அவருக்கு 1 மில்லியன் டாலர்களை நன்கொடையாக வழங்க ஆப்பிள் தலைமை நிர்வாக அதிகாரியான டிம் குக் முடிவு செய்துள்ளதாக ஆக்சியோஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. டிம் குக் இந்த பதவி ஏற்பு விழாவை அமெரிக்கா பாரம்பரியத்தின் முக்கிய நிகழ்வாகப் பார்ப்பதாகவும், ஒற்றுமைக்காக பங்களிப்பு செய்வதாகவும் பல்வேறு ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. அதோடு தனிப்பட்ட முறையில் இந்த நன்கொடையை வழங்குவதாகவும் கூறப்படுகிறது.
முன்னணி தொழில்நுட்ப மற்றும் கார்ப்பரேட் ஜாம்பவான்கள் பதவியேற்பு விழாவில் இணையுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அதோடு பெரு நிறுவனங்களின் நிர்வாகிகளும் ட்ரம்பின் குழுவிற்கு நிதி உதவி வழங்குவதாக உறுதியளித்துள்ளனர். அமேசான் நிறுவனம் 1 மில்லியன் டாலரை நன்கொடையாக வழங்க இருக்கிறது. அதோடு பதவியேற்பு விழாவை பிரைம் வீடியோவில் நேரடியாக ஒளிபரப்பவும் திட்டமிட்டுள்ளது.

டொயோட்டா மோட்டார்ஸ் நிறுவனம் 1 மில்லியன் டாலரை வழங்கவுள்ளது. அதோடு ஃபோர்டு மற்றும் ஜெனரல் மோட்டார்ஸ் போன்ற நிறுவனங்கள் பதவியேற்பு விழாவிற்கு தேவைப்படும் வாகனங்களை வழங்கவும் திட்டமிட்டுள்ளது. சிட்டாடல் எல்எல்சி நிறுவனத்தின் நிறுவனரான கேன் க்ரிஃபின் தேர்தலின் போது பிரச்சாரத்திற்கு எந்த வித பங்களிப்பையும் செய்யவில்லை என்றாலும் 1 மில்லியனை நன்கொடையாக வழங்கவுள்ளார்.
சில்லறை வர்த்தக தளமான ராபின் ஹுட் 2 மில்லியன் டாலரை நன்கொடை வழங்கியுள்ளது. அதே நேரம் ஊபர் டெக்னாலஜி நிறுவனம் மற்றும் அதன் CEO தலா 1 மல்லியன் டாலரை நன்கொடையாக வழங்கவுள்ளனர்.
ஆப்பிள் நிறுவனம் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தங்களுடைய விர்ச்சுவல் அசிஸ்டன்ட்டான சிரி மூலம் பயனர்களின் விவரங்களை உளவு பார்த்ததாக கூறும் வழக்கில் 95 மில்லியன் டாலரை செலுத்த ஒப்புக்கொண்ட நிலையில் இந்த நன்கொடை அறிவிப்பை கிம் வெளியிட்டுள்ளார்.
தனி உரிமையை "அடிப்படை மனித உரிமை" என்று வலியுறுத்தும் ஆப்பிள் இந்த வழக்கில் எந்தவித தவறும் செய்யவில்லை என்று கூறியுள்ளது. கலிபோர்னியா ஃபெடரல் நீதிமன்றத்தில் இந்த வழக்கு நிரூபிக்கப்பட்டால் மில்லியன் கணக்கான ஆப்பிள் பயனர்கள் ஒரு சாதனத்திற்கு 20 டாலர் வரை உரிமை கோர அனுமதிக்கும் என்றும் கூறப்படுகிறது. இருப்பினும் தகுதியான வாடிக்கையாளர்களில் மூன்று முதல் ஐந்து சதவீதம் வரை மட்டுமே உரிமை கோரல்களை தாக்கல் செய்வார்கள் என்றும் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications