உலகின் மிகப்பெரிய டெக்னாலஜி மற்றும் ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான ஆப்பிள், கடந்த வருடத்தை விடவும் இந்த வருடம் மிகவும் மோசமான நிதியியல் வளர்ச்சியைச் சந்தித்து இருக்கும் நிலையில் ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டிம் குக் அவர்களின் சம்பளத்தை ஆப்பிள் நிர்வாகக் குழு அதிரடியாய் குறைத்துள்ளது.
ஆப்பிள் நிறுவனத்தின் இந்த அறிவிப்பு முதலீட்டாளர்கள் மட்டும் அல்லாமல் இந்நிறுவன ஊழியர்கள் மத்தியில் கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்பிள் நிர்வாகம்
2019ஆம் ஆண்டுக்கான நிதி நிலவரத்தை ஆப்பிள் நிர்வாகம் ஆய்வு செய்த போது கடந்த வருடத்தை விடவும் அதாவது 2018ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் 2019இல் இந்நிறுவனத்தின் நிதியியல் மதிப்பில் பெரிய அளவிலான வளர்ச்சி இல்லை. எனவே ஆப்பிள் நிர்வாகம் இந்த நிலைக்குக் காரணமான ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான டிம் குக் அவர்களின் சம்பளத்தை அதிரடியாகக் குறைக்க உத்தரவிட்டுள்ளது.
சம்பள குறைப்பு
டிம் குக் கடந்த 2018ஆம் ஆண்டு 15.7 மில்லியன் டாலர் அதாவது 113 கோடி ரூபாய் அளவிலான சம்பளத்தைப் பெற்று இருந்தார். தற்போது ஆப்பிள் நிர்வாகக் குழுவின் ஆய்வுக்குப் பிந்தைய உத்தரவின் படி இவரது சம்பளம் சுமாரப் 26 சதவீதம் குறைக்கப்பட்டு உள்ளது.
இந்த அதிரடி சம்பள குறைப்பை தொடர்ந்து டிம் குக் 2019ஆம் ஆண்டுக்கு வெறும் 11.56 மில்லியன் டாலர் அதாவது 83 கோடி ரூபாயை சம்பளமாக வாங்குகிறார்.
அடிப்படை சம்பளம்
ஆப்பிள் நிறுவனத்தின் சீஇஓ டிம் குக் அவர்களின் அடிப்படை சம்பளம் 3 மில்லியன் டாலர் இந்தச் சம்பளத்தில் எதுவும் மாறபோவது இல்லை.
அவருக்கு அளிக்கப்படும் பிரைவேட் ஜெட் சேவை மற்றும் இதர சேவைக்காகக் கொடுக்கப்பட்ட 8, 85, 000 டாலர் தொகையிலும், கொடுக்கப்பட்ட போனஸ் அளவிலான 7.7 மில்லியன் டாலரில் தான் பெரிய அளவிலான மாற்றத்தை சந்தித்துள்ளார்.
விற்பனை அளவு
2019ஆம் ஆண்டுத் துவக்கத்தில் ஆப்பிள் நிர்வாகம் நிர்ணயம் செய்த விற்பனை இலக்கு-இல் வெறும் 28 சதவீத இலக்கை மட்டுமே அடைந்த காரணத்திற்காக இந்த அதிரடி குறைப்பு ஏற்பட்டு உள்ளது. இதன் வாயிலாகவே இவருக்கு 7.7 மில்லியன் டாலர் போனஸாகக் கிடைத்துள்ளது. இதனை ஆப்பிள் நிறுவனம் பங்குச்சந்தை அமைப்புக்கு சமர்ப்பித்த அறிக்கையிலிருந்து கிடைத்த தகவல் என்பது குறிப்பிடத்தக்கது.
டிம் குக் நிர்ணயம் செய்யப்பட்ட இலக்கில் 100 சதவீதத்தையும் அடைந்திருந்தால் இவருக்குப் போனஸ் தொகையாக 12 மில்லியன் டாலர் கிடைத்திருக்கும்.
பங்குகள்
இது ஒரு பக்கம் இருந்தாலும், டிம்குக் சீஇஓ பதவி ஏற்கும் முன்னரே அவருக்கு 113 மில்லியன் டாலர் மதிப்பிலான ஆப்பிள் நிறுவனப் பங்குகள் வருடத்தின் அடிப்படையில் பிரித்துக் கொடுக்க ஆப்பிள் நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications