சென்னை: உலகின் முன்னணி ஸ்மார்ட்போன் பிராண்டான ஆப்பிள் நிறுவனம் இந்த ஆண்டு முதல் இந்தியாவில் தனது விலையுயர்ந்த ஐபோன் ப்ரோ மற்றும் ப்ரோ மேக்ஸ் மாடல்களை தயாரிக்க முடிவு செய்துள்ளது. இதுநாள் வரையில் இந்தியாவில் ஐபோன் சீரிஸ்-ல் மலிவான மாடல்களை மட்டுமே அசம்பிளி செய்து வந்த நிலையில் முதல் முறையாக ப்ரீமியம் மாடல்கள் தயாரிக்கப்பட உள்ளது.
சீனாவில் இருந்து இந்தியாவுக்குத் தனது உற்பத்தி தளத்தை மாற்றிய அமெரிக்க ஆப்பிள் நிறுவனத்திற்கும் மற்றும் இந்திய ஸ்மார்ட்போன் உற்பத்தித் துறைக்கும் இது முக்கிய மைல்கல் ஆக அமைந்துள்ளது.

சர்வதேச அளவில் இந்த இரண்டு புதிய ஐபோன் மாடல்களும் அடுத்த சில மாதங்களில் அறிமுகம் செய்யப்படும் வேளையில், இந்த மாடல்களை ஆப்பிளின் முக்கிய உற்பத்தி பார்ட்னர் நிறுவனமான பாக்ஸ்கான் டெக்னாலஜி குரூப் தமிழ்நாட்டில் அதன் தயாரிப்பு பணிகளைத் தொடங்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இதற்காகத் தமிழ்நாட்டில் உள்ள பாக்ஸ்கான் டெக்னாலஜி குரூப் தொழிற்சாலையில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த செயல்பாட்டின் மூலம் ஐபோன் 16 ப்ரோ மற்றும் ப்ரோ மேக்ஸ் மாடல்களை சர்வதேச அளவில் அறிமுகமானதும் உடனடியாக இந்தியாவிலும் தயாரிக்க முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் முழு ஐபோன் சீரியஸ்-ம் தயாரிப்பது என்பது, 2021 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் ஆப்பிள் மற்றும் அதன் உற்பத்தி பார்ட்னர் நிறுவனங்களின் ஒரு முக்கிய இலக்காகும். இது கிட்டத்தட்ட நிறைவேறியுள்ளது, அடுத்தகட்டமாக புதிய ஐபோன் அறிமுகம் செய்வதற்கு முன்பாக தமிழ்நாட்டில் அதை தயாரிப்பது தான்.
ஆப்பிள் சீனாவில் இருந்து வெளியேறுவதில் தீவிரமாக இருந்தாலும் இன்னும் பெரும்பாலான ஐபோன்களை சீனாவில் தயாரிக்கிறது இதில் முக்கியமாக ப்ரோ மற்றும் ப்ரோ மேக்ஸ் போன்ற ப்ரீமியம் மாடல்கள் அடங்கும். ஆனால் பெய்ஜிங் மற்றும் வாஷிங்டன் இடையிலான வர்த்தக போர் தொடர்பான பதற்றங்கள் நாளுக்கு நாள் மோசமாகி வரும் வேளையில் சீனாவுக்கு மாற்று இடத்தை உருவாக்க வேண்டும் என்ற இலக்குடன் தமிழ்நாட்டை மேம்படுத்தி வருகிறது ஆப்பிள் - பாக்ஸ்கான் கூட்டணி.
இந்த முயற்சியின் விளைவாக, மார்ச் 2024 வரையிலான நிதியாண்டில் இந்தியாவில் ஆப்பிள் 14 பில்லியன் டாலர் மதிப்பிலான ஐபோன்களை தயாரித்தது, இது உலகளாவிய மொத்த உற்பத்தியில் சுமார் 14 சதவீதமாகும். கடந்த ஆண்டைப் போலவே, இந்தியாவில் தயாரிக்கப்படும் ஐபோன் 16 ஸ்டாண்டர்ட் மாடலை, சர்வதேச அளவில் ஐபோன் 16 விற்பனை தொடங்கும் அதே நாளில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாக்ஸ்கான் நிறுவனத்தை தொடர்ந்து தமிழ்நாட்டில் இயங்கி வரும் மற்ற ஐபோன் உற்பத்தி நிறுவனங்களான பெகாட்ரான் கார்ப், டாடா குழுமம் ஆகியவையும் விரைவில் ப்ரோ மாடல்களை தயாரிக்கத் தொடங்கலாம் என்று தகவல் தெரிவிக்கிறது.


Click it and Unblock the Notifications