ஆப்பிள் நிறுவனத்திற்கு மிகப்பெரிய சந்தையாக இந்தியா உருவெடுத்து இருக்கிறது. தன்னுடைய ஐபோன்கள் உற்பத்தியை இந்தியாவில் அதிகரித்திருப்பது மட்டுமில்லாமல் ஐபோன்கள் விற்பனை மற்றும் விற்பனைக்கு பிந்தைய சேவைகளையும் இந்தியாவில் விரிவாக்கம் செய்து வருகிறது.
இந்தியாவில் ஃபாக்ஸ்கான் மற்றும் டாடா ஆகிய நிறுவனங்கள் தான் ஆப்பிள் நிறுவனத்திற்கு தேவையான ஐபோன்களை உற்பத்தி செய்கின்றன. இந்த நிறுவனங்கள் உற்பத்தி செய்யக்கூடிய ஐபோன்கள் இந்திய சந்தையிலும் ,வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. இந்த சூழலில் டாடா குழுமத்துடனான உறவை மேலும் மேம்படுத்தக்கூடிய வகையில் ஆப்பிள் நிறுவனம் புதிய ஒப்பந்தம் செய்திருப்பதாக எக்னாமிக் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

தன்னுடைய ஐபோன் மற்றும் மேக் புக் பழுது நீக்கும் தொழிலையும் டாடா நிறுவனத்திடமே ஆப்பிள் நிறுவனம் ஒப்படைக்க இருக்கிறது என எக்னாமிக் டைம்ஸ் செய்தி குறிப்பிடுகிறது. ஆப்பிள் நிறுவனத்தை பொருத்தவரை இந்திய சந்தையில் தங்களுடைய இருப்பை மேலும் வலுப்படுத்துவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாகத்தான் தன்னுடைய ஐபோன் மற்றும் மேக் புக் பழுது நீக்கும் சேவைகளை டாடா குழுமத்திடம் ஒப்படைத்துள்ளது.
இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் முக்கியமான ஐபோன் உற்பத்தியாளராகவும் மற்ற உபகரணங்களுக்கான ஒரு சப்ளையராகவும் டாடா நிறுவனம் இருக்கிறது. டாடா நிறுவனம் இந்தியாவில் மூன்று இடங்களில் ஆலைகளை நிறுவி ஐபோன் மற்றும் ஐபோனுக்கு தேவையான மற்ற உபகரணங்களை உற்பத்தி செய்து வருகிறது. தற்போது பழுது நீக்கும் தொழிலையும் டாடா கைப்பற்றியுள்ளது.
டாடா நிறுவனம் கர்நாடகாவில் செயல்படக்கூடிய தங்களுடைய ஐபோன் ஆலையிலேயே இந்த பழுது நீக்கும் சேவைகளையும் கையாளும் என்றும் , விற்பனைக்கு பிந்தைய சேவைகளை வழங்கும் என்றும் எக்னாமிக் டைம்ஸ் வெளியிட்ட செய்தி குறிப்பிடுகிறது. இந்தியாவில் ஐபோன்களின் விற்பனை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. கடந்த ஆண்டில் மட்டும் இந்தியாவில் 11 மில்லியன் ஐபோன்கள் விற்பனை செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. 2020இல் இந்திய ஸ்மார்ட் போன் விற்பனையில் ஐபோன்கள் பங்களிப்பு 1 சதவீதமாக மட்டுமே இருந்தது, அது கடந்த ஆண்டு 7 சதவீதமாக உயர்ந்து இருக்கிறது.
எனவே விற்பனைக்கு பிந்தைய சேவைகளையும் தரமாக வழங்கினால் இன்னும் மக்கள் நம்பிக்கையோடு தங்கள் ஐபோன்களை வாங்குவார்கள் என ஆப்பிள் நிறுவனம் நம்புகிறது. எனவேதான் இந்தியாவில் அவர்களின் நம்பிக்கையான கூட்டாளியான டாடாவிடம் இந்த பழுது நீக்கும் தொழிலையும் வழங்கி இருக்கிறது. தற்போதைக்கு ஆப்பிள் நிறுவனம் அமெரிக்காவில் தங்களுடைய ஐபோன்களை பழுது நீக்கி Refurbished போன்களாக விற்பனை செய்கிறது. இதற்கு அமெரிக்காவில் தனி சந்தையே இருக்கிறது.
டாடா நிறுவனத்துடன் தற்போது இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதன் மூலம் இந்தியாவிலும் Refurbished போன்கள் விற்பனையை கொண்டு வர ஆப்பிள் திட்டமிடுவதாகவே தெரிகிறது என சைபர் மீடியா ரிசர்ச் நிறுவனத்தின் தலைவர் பிரபு ராம் தெரிவித்திருக்கிறார்.


Click it and Unblock the Notifications