பெங்களூரு: உலகின் முன்னணி ஸ்மார்ட் போன் விற்பனை நிறுவனமாக ஆப்பிள் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. ஆப்பிள் நிறுவனம் தனக்கு தேவையான ஐபோன்கள் , ஐபேட்கள், கணினி உள்ளிட்டவற்றை பெருமளவில் சீனாவில் இருந்து தான் உற்பத்தி செய்து பயன்படுத்தி வந்தது .
தன்னுடைய உற்பத்தியை சீனாவை மட்டும் சார்ந்து இருக்காமல் இந்தியாவிலும் விரிவாக்கம் செய்ய முடிவு செய்தது. இதன் ஒரு பகுதியாக தான் இந்தியாவில் ஃபாக்ஸ்கான், டாடா உள்ளிட்ட நிறுவனங்கள் மூலம் ஐபோன்களை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்கிறது. அதேபோல இந்தியாவில் நேரடி ஆப்பிள் ஐபோன் விற்பனை நிலையங்களையும் தொடங்கி வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறது .

இந்த சூழலில் ஆப்பிள் நிறுவனம் பெங்களூருவில் 2.7 லட்சம் சதுர அடி பரப்பளவில் ஒரு அலுவலகத்தை வாடகைக்கு எடுத்திருக்கிறது . மாதத்திற்கு 6.3 கோடி ரூபாய் என மொத்தம் பத்து ஆண்டுகளுக்கு ஆப்பிள் நிறுவனம் இந்த பெங்களூரு அலுவலகத்தை வாடகைக்கு எடுத்திருப்பதாக ப்ராப்ஸ்டேக் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனம் வெளியிட்டு இருக்கும் தகவல் கூறுகிறது .
எம்பஸி குரூப் என்ற ரியல் எஸ்டேட் குழுமத்திற்கு சொந்தமான இந்த கட்டிடத்தை 10 ஆண்டு காலத்திற்கு ஆப்பிள் நிறுவனம் குத்தகைக்கு எடுத்து இருக்கிறது. மொத்தமாக 1000 கோடி ரூபாயை இந்த குத்தகை பணமாக ஆப்பிள் நிறுவனம் செலுத்த இருக்கிறது. ஏப்ரல் 3, 2025-ம் தேதி தொடங்கி அடுத்த 10 ஆண்டுகள் வரை இந்த கட்டிடம் ஆப்பிள் நிறுவனத்தின் வசம் இருக்கும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இதற்கான அட்வான்ஸ் தொகையாக 31 கோடி ரூபாயை ஆப்பிள் செலுத்தி இருக்கிறதாம். ஒவ்வொரு ஆண்டும் 4.5 சதவீதம் என வாடகை உயரும் என சொல்லப்படுகிறது. இதன் மூலம் ஆயிரம் கோடிக்கும் அதிகமான தொகையை ஆப்பிள் நிறுவனம் வாடகையாக மட்டுமே செலுத்த இருக்கிறது. எம்பஸி ஸெனித் கட்டிடத்தின் ஐந்தாவது முதல் 13ஆவது தளம் வரையிலான 9 தளங்களை இந்த நிறுவனம் குத்தகைக்கு எடுத்திருக்கிறது.
இந்தியாவிலேயே ஆப்பிள் நிறுவனம் குத்தகைக்கு எடுத்திருக்கும் மிகப்பெரிய அலுவலகம் இதுவாகும். இதன் மூலம் ஆப்பிள் நிறுவனம் ஐபோன் உற்பத்தி மட்டுமில்லாமல் வேறு சில பணிகளையும் விரிவாக்கம் செய்ய முடிவு செய்திருக்கிறதாம். இந்தியாவிலிருந்து அதிக அளவில் மொபைல் ஃபோன்களை ஏற்றுமதி செய்யக்கூடிய ஒரு நிறுவனமாக ஆப்பிள் நிறுவனம் மாறி இருக்கிறது. 2024-25 ஆம் ஆண்டில் ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் இருந்து மட்டும் 1.5 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான ஐபோன்களை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்திருக்கிறது.


Click it and Unblock the Notifications