உலகின் மிகப்பெரிய ஸ்மார்ட்போன் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் கருவிகள் விற்பனை நிறுவனமான ஆப்பிள் இதுநாள் வரையில் சீனாவை நம்பி மட்டுமே தனது உலகளாவிய வர்த்தகத்தை நடத்தி வந்த நிலையில் அமெரிக்கா - சீனா மத்தியிலான வர்த்தக போர் பிரச்சனைக்கு பின்பு, ஆப்பிள் தனது உற்பத்தி தளத்தை இந்தியா மற்றும் பிற தென்கிழக்கு நாடுகளுக்கு திருப்பியுள்ளது.
இன்றளவும் இந்தியாவில் தயாரிக்கப்படும் ஆப்பிள் ஐபோன் மற்றும் இதர கருவிகளுக்கான உதிரிபாகங்கள் சீனாவில் தயாரிக்கப்பட்டு இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஆப்பிள் இந்திய உற்பத்தியை வலிமையாக்க முக்கியமான முடிவை எடுத்துள்ளது.

ஆப்பிள் இந்தியாவின் உற்பத்தி கட்டமைப்பை பெரிய அளவில் மேம்படுத்த முக்கியமான திட்டத்தை கையில் எடுத்துள்ளது. இந்தியாவில் பல ஆப்பிள் தொழிற்சாலைகள் இருந்தாலும், அவை பெரும்பாலும் அசம்பிளி தொழிற்சாலையாகவே உள்ளது, இதை மாற்றும் நோக்கத்துடன் ஆப்பிள் தற்போது உதிரிபாகங்கள் உற்பத்தி கட்டமைப்பை மேம்படுத்தவும், விரிவாக்கம் செய்யவும் திட்டமிட்டு உள்ளது.
இதற்காக ஆப்பிள் நிறுவனமும், முக்கிய சப்ளையர்கள் நிறுவனங்களும் இதுகுறித்து மத்திய நிதியமைச்சகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. ஆனால் இதற்காக எவ்விதமான வரி சலுகையும் இல்லை எனவும் தெரிகிறது, கிட்டத்தட்ட இதே நிலையில் தான் டெஸ்லா-வும் உள்ளது.

டெஸ்லா தனது சப்ளையர்களை இந்தியாவுக்கு அழைத்து உதிரிபாகங்களை தயாரித்தாலும் அதற்கு எவ்விதமான வரியும் கிடைக்காது, ஆனால் எலான் மஸ்க் டெஸ்லா கார்களுக்கு வரி சலுகை கேட்டு வருகிறார். இதற்கான முடிவை மத்திய அரசு இன்னும் அறிவிக்கவில்லை.
ஜூலை மாதம் ஆப்பிள் மற்றும் மத்திய நிதியமைச்சக அதிகாரிகள் மத்தியில் நடந்த சிறப்பு கூட்டத்தில் பேசுகையில் தற்போதைய உற்பத்தி, சப்ளை செயின், ஏற்றுமதி அளவுகள் குறித்து விவரிக்கப்பட்டது. இதே கூட்டத்தில் ஆப்பிள் தனது உதிரிபாகங்கள் தயாரிப்புக்கான தொழிற்சாலையை இந்தியாவுக்கு கொண்டு வருவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.

இதன் மூலம் ஆப்பிள் சீனாவை மொத்தமாக கைகழுவ திட்டமிட்டு உள்ளதாக தெரிகிறது. அமெரிக்காவின் ஆப்பிள் நிறுவனத்தின் மொத்த ஐபோன் தயாரிப்பில் தற்போது 7 சதவீதத்தை இந்தியாவில் இருந்து தயாரிக்கிறது. இதை அதிகரிக்கவும், மேம்படுத்தவும் திட்டமிட்டு வருகிறது. ஆப்பிள் விரைவில் ஐபோன் 15 தயாரிப்பை இந்தியாவில் துவங்க உள்ளது.


Click it and Unblock the Notifications