அமெரிக்கா - சீனா வர்த்தக போர் பிரச்சனையைத் தொடர்ந்து ஆப்பிள் நிறுவனம் சீனாவில் இருந்து தனது உற்பத்தி தளத்தைப் பல நாடுகளுக்கு இடமாற்றியது. ஆனால் பல நாடுகளில் பெரிய அளவில் விரிவாக்கம் செய்ய முடியவில்லை, ஆனால் இந்தியாவில் கதையே வேற, ஆரம்பம் முதல் வெற்றி தான். இந்த மாபெரும் வெற்றிக்கு அடித்தளம் போட்டது, தமிழ்நாடு அரசின் முயற்சியில் கொண்டு வரப்பட்ட பாக்ஸ்கான் தான்.
இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் பொருட்களின் தயாரிப்பில் கடந்த சில வருடத்தில் பெரிய அளவில் முன்னேற்றம் அடைந்துள்ளது. 2024 ஆம் ஆண்டில் மட்டும் ஐபோன் ஏற்றுமதியின் மதிப்பின் அளவு ரூ.1 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது. முதல் முறையாக 1 லட்சம் கோடி என்ற அளவை தொட்டு உள்ளது, இதில் பெரும் பகுதி தமிழ்நாடு பங்கு வகிக்கிறது.

2024 ஆம் ஆண்டில் இந்தியாவிலிருந்து ஐபோன் ஏற்றுமதி 12.8 பில்லியன் டாலர் (சுமார் ரூ.1.08 லட்சம் கோடி) என்கிற ஒரு புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இது கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் இது 42% அதிகமாகும். 2023ஆம் ஆண்டில் இதன் அளவு 9 பில்லியன் டாலராக இருந்தது.
இதேவேளையில் ஐபோன் தயாரிப்பில் local value addition பங்கீடு 15-20% ஆக உள்ளது, இது இந்தியாவில் ஐபோன் உற்பத்தியை அதிகரிக்க முக்கிய காரணமாக உள்ளது.
ஜனவரி-டிசம்பர் 2024க்கான முதற்கட்ட மதிப்பீடுகளை வெளியிட்ட மத்திய அரசின் தரவுகள் அடிப்படையில், உள்நாட்டு ஐபோன் எகோசிஸ்டத்தின் உற்பத்தி கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் கிட்டத்தட்ட 46% அதிகரித்து 17.5 பில்லியன் டாலர் (சுமார் ரூ.1.48 லட்சம் கோடி) ஆக உயர்ந்துள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இது மாபெரும் வளர்ச்சியாகப் பார்க்கப்படும் வேளையில், ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் தனது உற்பத்தி தளத்தை மேலும் விரிவுபடுத்தத் தயாராக உள்ளது. இதன் மூலம் வரும் காலத்தில் இந்தியாவில் ஆண்டுதோறும் ஐபோன் உற்பத்தி 30 பில்லியன் டாலரை எட்டக்கூடும் என்று தொழில் நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர். இதன் மூலம், உலகளாவிய ஐபோன் உற்பத்தியில் இந்தியாவின் பங்கு தற்போதைய 14% இலிருந்து 26% க்கும் அதிகமாக உயரும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது.
ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் தனது உற்பத்தித் திறனை மேம்படுத்துவது மட்டும் அல்லாமல், இந்தியாவில் ஆப்பிள் நிறுவனம் தனது ரீடைல் விற்பனை வழியமைப்பையும் வேகமாகவும், பெரிய அளவிலும் விரிவுபடுத்தி வருகிறது.
இந்தியாவில் பிரீமியம் ஸ்மார்ட்போன்களுக்கான தேவை அதிகரித்து வரும் வேளையில், இதை மொத்தமாகக் கைப்பற்றும் இலக்குடன் களத்தில் இறங்கியுள்ளது. இந்தியர்களைக் கவர்வதற்காகவே சிறப்பு விளம்பரம், ஆஃபர், டிஸ்கவுன்ட் ஆகியவை அறிவிக்கப்பட்டு உள்ளது.
சீனாவில் வேகமாக வாடிக்கையாளர்களை வேகமாக இழந்து வரும் ஆப்பிள் இந்தியாவை வைத்து ஈடு செய்ய இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. ஆப்பிள் நிறுவனத்திற்கு தற்போது இந்தியா ஐந்தாவது பெரிய சந்தையாக உள்ளது. அமெரிக்கா, சீனா, ஜப்பான், இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக இந்தியா உள்ளது.
2024 ஆம் ஆண்டில் உள்நாட்டு ஐபோன் விற்பனை கணிசமாக அதிகரிக்கும் என்று சந்தை ஆய்வாளர்கள் கணித்துள்ள வேளையில் 1.5 கோடி போன்கள் விற்பனை செய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் 30 பில்லியன் டாலர் மதிப்பிலான ஆப்பிள் தயாரிப்புகளைத் தயாரிக்கும் இலக்கில் தமிழ்நாடு முக்கிய பங்கு வகிக்க உள்ளது. தற்போது சென்னை பாக்ஸ்கான் தொழிற்சாலையில் மட்டும் 42000 ஊழியர்கள் பணியாற்றி வரும் வேளையில், சீனாவில் இருப்பது போலவே பாக்ஸ்கான் சிட்டி அமைக்கும் திட்டத்தை ஆய்வு செய்யப்பட்டு வருகிறது இந்நிறுவனம்.


Click it and Unblock the Notifications