ஸ்மார்ட்போன், டேப்லெட் என்றால் அனைவருக்கும் பிடித்த அல்லது வாங்கியாக வேண்டும் என்ற இலக்கு கொண்டு இருக்கும் ஒரு பிராண்ட் ஆப்பிள். இந்நிறுவன தயாரிப்புகளின் விலை அதிகமாக இருப்பது பெரும் குறையாக இருந்தாலும், இதன் தரம் மிகவும் சிறப்பானது, உயர்தரமானது.
ஆனால் கடந்த சில வருடங்களாக ஆப்பிள் தனது வர்த்தகத்தையும், பிராண்ட் மதிப்பையும் பிற நிறுவனங்களிடம் இழந்து வருகிறது. சீனாவின் ஹூவாய் பிராண்டை தடை செய்தது மூலம் சில ஆண்டு தப்பித்து வந்த ஆப்பிள் சமீப காலமாக சாம்சங், ஒன்பிளஸ், போன்ற பிராண்டுகளுடன் இழந்து வருகிறது.

ஆப்பிள் மீண்டும் ஆதிக்க நிலையை அடையவேண்டும் என்பதற்காக அடுத்தடுத்து பல திட்டங்களை கையில் எடுத்திருக்கும் வேளையில், ஆப்பிள் நிறுவனத்தின் 2024 ஆம் ஆண்டின் முதல் ஹார்டுவேர் லான்ச் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடந்தது. இதை Let Loose Event 2024 என்ற பெயரில் பெரிய அளவில் நடந்தது மட்டும் அல்லாமல் பலரையும் கவர்ந்தது.
இந்த நிகழ்ச்சியில் இரண்டு புதிய ஐபேட்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இதேபோல் ஆப்பிள் பென்சில் ப்ரோ அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
iPad Air 2024: புதுப்பிக்கப்பட்ட ஐபேட் ஏர் இப்போது இரண்டு அளவுகளில் கிடைக்கிறது- 11 இன்ச் மற்றும் ஒரு புதிய 13 இன்ச் மாடல். லேப்டாப் திரையைப் போன்ற அதன் தோற்றத்தை வலுப்படுத்தும் வகையில், முன்பக்க கேமரா லேண்ட்ஸ்கேப் பார்வைக்கு மாற்றப்பட்டுள்ளது.
உட்புறத்தில், ஐபேட் ஏர் முந்தைய M1 ஐ மாற்றும் வகையில் M2 சிப்புக்கு மேம்படுத்தப்பட்டுள்ளது, இது செயல்திறனில் கணிசமான மேம்பாடு இருக்கும். கூடுதலாக, அடிப்படை சேமிப்புத்திறன் 64GB இல் இருந்து 128GB ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
11-இன்ச் ஐபேட் ஏரின் தொடக்க விலை ₹59,900 (Wi-Fi only) ஆகும், அதே நேரத்தில் Wi-Fi மற்றும் செல்லுலார் இணைப்பு கொண்ட 11-இன்ச் மாடல் ₹74,900 முதல் தொடங்குகிறது. இரண்டு பதிப்புகளும் அடுத்த வாரம் முதல் இந்தியாவில் கிடைக்கும்.
iPad Pro 2024: புதிய ஐபேட் ப்ரோ இந்த முறை மிகப்பெரிய மாற்றத்தை செய்துள்ளது. எப்போதும் இருப்பதை காட்டிலும் மெல்லிய டிசைனை பெற்றுள்ளது. புதிய OLED டிஸ்ப்ளே மற்றும் ஆப்பிளின் சமீபத்திய M4 சிப் ஆகியவை இதில் அடங்கும்.
11-இன்ச் மாடல் இப்போது 5.3 மிமீ மட்டுமே தடிமன் கொண்டது, 13-இன்ச் வெர்ஷன் 5.1 மிமீ என கூடுதல் மெல்லியதாக உள்ளது. இதோடு டேண்டம் OLED தொழில்நுட்பத்தை ஐபேட் ப்ரோவில் அறிமுகப்படுத்தியதை அடுத்து, உலகின் மிகவும் மேம்பட்ட டிஸ்ப்ளே என்று கூறிக்கொள்ளும் "Liquid Ultra Retina" என்ற சொல்லை ஆப்பிள் உருவாக்கியுள்ளது.
M4 சிப் சேர்க்கப்படுவதன் மூலம், சில ஆப்பிள் மேகேபுக் மாடல்களை விட ஐபேட் ப்ரோ மிகவும் சக்தி வாய்ந்த கருவியாக விளங்கும். மேம்படுத்தப்பட்ட செயல்திறனுடன், ஐபேட் ப்ரோவின் பின்புற கேமராவில் இப்போது டாக்குமென்ட் ஸ்கேனிங்கிற்கு ஏற்ற Adaptive Flash அம்சம் உள்ளது. முன்பக்க கேமரா 12MP லென்ஸுக்கு மேம்படுத்தப்பட்டுள்ளது, இது Face ID ஐ ஆதரிக்கிறது.
Apple Magic Keyboard: மேஜிக் கீபோர்டு மறுவடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது, இது மெல்லியதாகவும், முந்தைய மாடலை விட அதிக செயல்பாடு கொண்டதாகவும் உள்ளது. இந்த புதிய மேஜிக் கீபோர்டு பார்க்க பார்க்க ஒரு பாரம்பரிய மாக்புக் கீபோர்டு போல் இருப்பதால், ஐபேட் ப்ரோவை 2-in-1 லேப்டாப் ஆக மாற்றுகிறது.
இந்தியாவில், 11-இன்ச் வைஃபை மாடலுக்கான ஐபேட் ப்ரோ ₹99,900 முதல் தொடங்குகிறது, 13-இன்ச் வைஃபை + செல்லுலார் பதிப்பு ₹1,49,900 ஆகும். அமெரிக்காவில், விலைகள் $999 முதல் தொடங்குகின்றன.
மேஜிக் கீபோர்டு 11-இன்ச் மாடலுக்கு 29900 ரூபாயிலும், 13 இன்ச் மாடலுக்கு 33,900 ரூபாய் விலையிலும் விற்கப்படுகிறது.
Apple Pencil Pro: மேம்படுத்தப்பட்ட சென்சார்கள் மற்றும் புதிய ஜெஸ்சர்ஸ் அடிப்படையிலான செயல்பாடுகளை வழங்கும் மேம்பட்ட ஸ்டைலஸ் ஆன Apple Pencil Pro ஐயும் ஆப்பிள் நேற்றைய நிகழ்வில் அறிமுகம் செய்துள்ளது. Apple Pencil உரிய பிரஷ் டிப்-ல் பல புதிய மேம்பாடுகளையும், மாற்றங்களையும் கொண்டு வந்துள்ளது. Apple Pencil Pro அமெரிக்காவில் 129 டாலருக்கு விற்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications