உலகிலேயே 2வது பெரிய சந்தை மதிப்பு கொண்ட நிறுவனமான ஆப்பிள் அமெரிக்காவில் எதிர்கொண்டு உள்ள முக்கிய வழக்கு காரணமாக, அதன் பங்கு மதிப்பு 4.1 சதவீதம் சரிந்து சந்தை மதிப்பு 113 பில்லியன் டாலர் அளவுக்கு ஓரே நாளில் சரிந்துள்ளது.
இதன் மூலம் 2024 ஆம் ஆண்டில் மட்டும் ஆப்பிள் பங்குகள் சுமார் 11 சதவீதம் சரிந்துள்ளது. அமெரிக்க பங்குச்சந்தையில் வியாழக்கிழமை நாஸ்டாக் 100 மற்றும் எஸ் அண்ட் பி 500 ஆகிய இரு குறியீடுகளிலும் ஆப்பிள் 2024ல் மந்தமான வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

ஓரே நாளில் 113 பில்லியன் டாலர் அளவுக்கு சந்தை மதிப்பீட்டு இழப்பை எதிர்கொள்ளும் அளவுக்கு அப்படி ஆப்பிள் அமெரிக்காவில் என்ன வழக்கு எதிர்கொண்டு உள்ளது தெரியுமா..?
அமெரிக்க நீதித்துறை மற்றும் 15 அட்டர்னி ஜெனரல் இணைந்து, ஸ்மார்ட்போன் சந்தையைக் மோணோபோலியாக கட்டுப்படுத்தியதாக ஆப்பிள் நிறுவனத்தின் மீது வழக்கு தொடர்ந்துள்ளன. இதன் மூலம் சிறிய போட்டி நிறுவனங்களைப் பாதிப்படையச் செய்து, ஸ்மார்ட்போன் விலையை உயர்த்தி அதிக லாபம் பார்க்கிறது என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் தற்போதைய அதிபர் ஜோ பைடன் ஆகியோரின் ஆட்சிக் காலத்தில், கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்பபெட், மெட்டா பிளாட்பார்ம்ஸ் மற்றும் ஆமசான்.காம் போன்ற தொழில்நுட்ப பெரு நிறுவனங்கள் மீதும் இதுபோன்ற வழக்குகள் தொடுக்கப்பட்ட நிலையில் தற்போது இப்பட்டியலில் ஆப்பிள் நிறுவனமும் இணைந்துள்ளது.
அமெரிக்க நீதித்துறை துணைச் செயலர் மெரிக் கார்லண்ட் வெளியிட்ட அறிக்கையில் "அமெரிக்க கார்ப்ரேட் நிறுவனங்கள் போட்டித் தடை (antitrust laws) சட்டங்களை மீறுவதால், நுகர்வோர் அதிக விலையை கொடுக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது" என்று தெரிவித்துள்ளார். "இந்த வழக்கை ஆப்பிள் மீது தொடுக்காமல் விட்டுவிட்டால், ஆப்பிள் நிறுவனம் தனது ஸ்மார்ட்போன் சந்தை ஆதிக்கத்தை மேலும் வலுப்படுத்திக் கொள்ளும்" என்றும் அவர் கூறியுள்ளார்.
ஒரு ஐபோனுக்கு அதிகபட்சமாக 1,599 டாலர் வரை கட்டணம் வசூலிக்கும் ஆப்பிள் நிறுவனம், உலகளாவிய ஸ்மார்ட்போன் தயாரிப்பு மற்றும் விற்பனை துறையில் வேறு எந்த நிறுவனத்தையும் விடவும் ஆப்பிள் அதிக லாபம் ஈட்டுகிறது என்று அமெரிக்க நீதித்துறை தெரிவித்துள்ளது.
இது மட்டும் அல்லாமல் ஆப்பிள் நிறுவனம் சாப்ட்வேர் டெவலப்பர்கள் முதல் கிரெடிட் கார்டு நிறுவனங்கள், கூகுள் போன்ற சகபோட்டி நிறுவனங்கள் வரை பல்வேறு வர்த்தக கூட்டாளிகளிடமிருந்து, மறைமுகமாக கட்டணம் வசூலிப்பதாகவும், அதன் மூலம் எவ்விதமான போட்டி இல்லாமல் நுகர்வோர் வாங்கும் பொருட்கள் மீது விலையை உயர்த்தி அதிகப்படியான லாபத்தைப் பார்க்கிறதாகக் குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.
ஆப்பிள் நிறுவனம் இத்தகைய ஒழுங்குமுறை விசாரணையை முதன் முதலாக எதிர்கொள்ளவில்லை. போட்டியாளர்களை ஒடுக்கி அதிக லாபத்தை பெறுவதற்காக இந்த நிறுவனத்தின் மீது பல ஆண்டுகளாக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு வருகின்றன.
அதேவேளையில் ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்புகள் உலகளவில் மிகவும் பிரபலமாகி, மக்களின் அன்றாட வாழ்வின் ஒரு பகுதியாக மாறியுள்ள நிலையில், அதன் அதிகாரத்தைக் கண்டு அதிகாரிகள் கவலைப்படத் தொடங்கியுள்ளனர். சமீபத்தில் ஐரோப்பாவில் ஆப்பிள் நிறுவன தயாரிப்புகளுக்கும், கூகுள் சேவைகளுக்கும் அதிகப்படியான கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்துள்ளது.


Click it and Unblock the Notifications