டெல்லி : ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் தன்னுடைய தொழிலை விரிவாக்கம் செய்யும் விதமாக மேலும் 4 விற்பனை நிலையங்களை திறக்க இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன்படி புனே ,பெங்களூரு ,டெல்லி என்.சி.ஆர் மற்றும் மும்பை ஆகிய நகரங்களில் ஆப்பிள் நிறுவனம் தன்னுடைய நேரடி விற்பனை நிலையங்களை திறக்கிறது.
ஆப்பிள் நிறுவனம் கடந்த 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இந்தியாவில் தன்னுடைய நேரடி விற்பனை நிலையங்களை திறந்தது.
மும்பை மற்றும் டெல்லி ஆகிய நகரங்களில் ஆப்பிள் நிறுவனத்தின் நேரடி விற்பனை நிலையங்கள் திறக்கப்பட்டன. இங்கே விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் தன்னுடைய நேரடி விற்பனை நிலையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. அதன்படி பெங்களூரு ,புனே, டெல்லி என்.சி.ஆர் மற்றும் மும்பை ஆகிய நகரங்களில் கடைகள் அமைக்கப்பட உள்ளன.

ஆப்பிள் நிறுவனம் முதன்முறையாக மேட் இன் இந்தியா திட்டத்தின் கீழ் இந்தியாவிலேயே ஐபோன் 16 ப்ரோ மற்றும் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் ஆகிய மாடல் ஃபோன்களை தயாரித்துள்ளது. அந்த ஃபோன்களை தங்களுடைய நேரடி விற்பனை நிலையங்கள் மூலம் இந்திய வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளது. அது மட்டும் இன்றி இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஐபோன் 16 ப்ரோ மற்றும் ப்ரோ மேக்ஸ் மாடல்கள் வெளிநாடுகளிலும் விற்பனை செய்யப்பட உள்ளன.
ஆப்பிள் நிறுவனம் கடந்த 2017 ஆம் ஆண்டு இந்தியாவில் தன்னுடைய ஐபோன் உற்பத்தியை தொடங்கியது. தற்போது இந்த நிறுவனம் இந்தியாவில் 3000 ஊழியர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கியுள்ளது. ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 16 சீரிஸ் மாடல்களில் உள்ள அனைத்து வகையான ஃபோன்களையும் இந்தியாவிலேயே தயாரித்து வருகிறது. கடந்த செப்டம்பர் 6ஆம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 16 ப்ரோ மற்றும் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் ஆகிய மாடல் ஃபோன்களை அறிமுகம் செய்தது.
ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் கூடுதலாக நேரடி விற்பனை நிலையங்களை திறக்க உள்ளது. அடுத்த ஆண்டுக்குள் இந்த கடைகள் திறக்கப்படும் என சொல்லப்படுகிறது. மத்திய அரசு வழங்கும் உற்பத்தி இணைக்கப்பட்ட நிதி உதவி திட்டத்தின் கீழ் பயன்பெற வேண்டும் என்பதற்காக பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்களும் தங்களுடைய உற்பத்தி ஆலைகளை இந்தியாவிலேயே நிறுவி வருகின்றன. அந்த வகையில் ஆப்பிள் நிறுவனமும் இந்தியாவிலேயே உற்பத்தி ஆலையை நிறுவியதோடு கடந்த ஆண்டு முதன்முறையாக நேரடி விற்பனை நிலையங்களையும் திறந்தது இதன் மூலம் இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் தொழில் வளர்ச்சி அடைந்திருப்பதாக சொல்லப்படுகிறது.
Written by: Devika


Click it and Unblock the Notifications