ஆப்பிள் நிறுவனம் என்றாலே ஐபோன்கள் தான் நம் நினைவுக்கு வரும். இந்தியாவில் ஆப்பிள் நிறுவனம் வெறும் ஐபோன்களை விற்பனை செய்யும் நிறுவனமாக மட்டுமல்லாமல், இந்தியாவின் இன்ஜினியரிங் மற்றும் தொழில்நுட்ப திறனை பயன்படுத்தி புது பிஸ்னஸையே நடத்தி வருகிறது.
அமெரிக்காவை சேர்ந்த உலக புகழ்பெற்ற தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள், இந்தியாவில் ஐபோன் தயாரிப்பு மற்றும் விற்பனையில் மட்டும் கவனம் செலுத்தி வந்தது. ஆனால் அண்மை காலமாக இந்தியாவை ஒரு சர்வதேச மென்பொருள் மற்றும் இன்ஜினியரிங் மையமாக மாற்றுவதில் மும்முரமாக இறங்கியுள்ளது.

அண்மையில் ஆப்பிள் நிறுவனம் தாக்கல் செய்த ஒழுங்குமுறை ஆவணங்களின் படி, ஆப்பிள் நிறுவனத்தின் இந்திய துணை நிறுவனமான ஆப்பிள் ஆபரேஷன்ஸ் இந்தியா மிகப்பெரிய நிதி வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. நடப்பு நிதியாண்டில் மென்பொருள் மேம்பாட்டு துறை மூலம் மட்டும் 650 கோடி ரூபாய் வருவாயை ஈட்டியுள்ளது.இதற்கு முந்தைய நிதியாண்டில் இந்த பிரிவில் இருந்து நிறுவனத்திற்கு வருவாயே இல்லாமல் இருந்து ஒரே ஆண்டில் 650 கோடி ரூபாய் அதிகரித்துள்ளது.
ஆப்பிள் ஆபரேஷன்ஸ் இந்தியாவின் ஒட்டுமொத்த வருவாய் 1,400 கோடியை கடந்துள்ளது. இது முந்தைய நிதியாண்டில் வெறும் 318 கோடியாக மட்டுமே இருந்தது. மொத்தமாக நிறுவனத்தின் நிகர லாபம் பல மடங்கு அதிகரித்து 103 கோடி ரூபாயை எட்டியுள்ளது. முந்தைய ஆண்டில் இது 28 கோடி ரூபாயாக மட்டுமே இருந்தது.
இந்நிறுவனத்தின் ஆவணங்களின்படி, ஆப்பிள் ஆபரேஷன்ஸ் இந்தியாவின் மொத்த வணிக நடவடிக்கைகளில் சுமார் 97% பணிகள் ஆப்பிள் நிறுவனத்தின் உலகளாவிய செயல்பாடுகளுக்காகவே பயன்படுத்தப்படுகின்றன. இந்திய ஊழியர்கள் உள்நாட்டு தேவைகளுக்காக மட்டும் அல்லாமல், ஆப்பிள் நிறுவனத்தின் சர்வதேச மென்பொருள் அமைப்புகள் மற்றும் திட்ட மேலாண்மை பணிகளில் நேரடியாக பங்கெடுத்து வருகின்றனர்.
வணிக நிறுவனமான Alt Info-இன் நிறுவனர் மோகித் யாதவ் இது சாதாரண வணிக விரிவாக்கம் அல்ல, ஆப்பிள் நிறுவனம் இந்தியாவை வெறும் ஐபோன் உற்பத்தி மையமாக மட்டும் பார்க்காமல், உலகளாவிய இன்ஜினியரிங் மற்றும் தொழில்நுட்ப மையமாக மாற்ற திட்டமிட்டுள்ளதை இந்த தரவுகள் தெளிவாக காட்டுகின்றன என்கிறார்.
ஐபோன்களை தயாரித்து விற்பனை செய்வதில் தொடங்கி, தற்போது 650 கோடி ரூபாயில் மென்பொருள் உருவாக்கம் மற்றும் உலகளாவிய தொழில்நுட்ப சேவைகள் வரை ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் தனது கால்தடத்தை மிக ஆழமாக பதித்து வருகிறது என கூறுகிறார்.
சந்தை ஆராய்ச்சி நிறுவனமான Tofler தரவுகளின்படி, ஆப்பிள் இந்தியாவின் ஒட்டுமொத்த ஐபோன் விற்பனை வருவாய் 32% அதிகரித்து வரலாற்று சாதனையாக 1,04,607 கோடியை எட்டியுள்ளது. இது முந்தைய ஆண்டு 79,060 கோடியாக மட்டுமே இருந்தது. எனவே ஆப்பிள் நிறுவனம் ஐபோன் உற்பத்தி, விற்பனை மட்டுமில்லாமல் மென்பொருள் சார்ந்த சேவைகளுக்கும் இந்தியாவை முக்கிய மையமாக மாற்றி வருகிறது.


Click it and Unblock the Notifications

