ஆப்பிள் - உலகின் மாபெரும் டெக் மற்றும் கன்ஸ்யூமர் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் நிறுவனமாக விளங்குகிறது. ஆப்பிள் தனக்கென தனி அடையாளத்தை கொண்டு உலக நாடுகளில் அதிகப்படியான வருவாயை பெற்று வருகிறது. 2022 ஆம் ஆண்டு தரவுகள் படி ஆப்பிள் நிறுவனத்தின் முக்கிய சந்தையில் டாப் 5 இடத்தில் இந்தியாவே இல்லை..
ஆனாலும் இந்தியாவில் தனது முக்கியமான நிதி சேவைகளை அளிக்க திட்டமிட்டு வருகிறது, அதிலும் குறிப்பாக 2019ல் அறிமுகம் செய்யப்பட்ட கிரெடிட் கார்ட் சேவைகளை அளிக்க திட்டமிட்டு உள்ளது.

அமெரிக்காவில் மட்டுமே இருக்கும் இந்த சேவை, தனது அதிகமாக வருமானத்தை அளிக்கும் ஐரோப்பா, சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளை விட்டுவிட்டு, மிகவும் சிறிய அளவிலான கிட்டதட்ட 5 சதவீதம் மட்டுமே சந்தை பங்கீட்டை கொண்ட இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. இந்திய மக்களிடம் தற்போது செலவு செய்வதற்கான பணம் அதாவது disposable income அளவுகள் பெரிய அளவில் உயர்ந்துள்ளது.
2023 ஆம் ஆண்டில் ஆப்பிள் இந்தியாவில் 6 பில்லியன் டாலர் வருமானத்தை பெற்றுள்ளது, இது முந்தைய ஆண்டை காட்டிலும் 50 சதவீதம் அதிகமானது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் மும்பை, டெல்லியில் தனது அதிகாரப்பூர்வ கடைகளை திறப்பதற்கு முன்பு பதிவான வருவாய் அளவீடு இது, இதனால் 2024 ஆம் நிதியாண்டில் 10 பில்லியன் டாலர் அளவீட்டை எட்டினாலும் வியப்படைய தேவையில்லை.
பொதுவாகவே ஆப்பிள் பொருட்களின் விலை மிகவும் அதிகம், இதனால் 100ல் 98 பேர் கட்டாயம் கிரெடிட் கார்டு அல்லது ஈஎம்ஐ வாயிலாக தான் பெறுவார்கள். இவ்விரண்டுக்கும் ஆப்பிள் பெரும் தொகையை கிரெடிட் கார்டு அளிக்கும் வங்கிகளுக்கும் ஈஎம்ஐ சேவை அளிக்கும் நிறுவனங்களுக்கு பிராசசிங் கட்டணம் அளிக்க வேண்டும்.
இந்த முக்கிய செலவுகளை கட்டுப்படுத்த ஆப்பிள் தனது சொந்த கிரெடிட் கார்டு மற்றும் BNPL திட்டத்தை அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ளது. ஆப்பிள் இந்த கிரெடிட் கார்டு சேவைகளை co-branded card வாயிலாக அளிக்க உள்ளது. தற்போது ஹெச்டிஎப்சி உடன் இதற்காக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இதேபோல் ஆப்பிள் - ஹெச்டிஎப்சி இணைந்து ரூபே கிரெடிட் கார்டு கொடுத்தால் UPI பேமெண்ட் துறையிலும் ஆப்பிள் இறங்கும் ஒரு வாய்ப்பை பெறும். ஏற்கனவே ஆப்பிள் இந்திய கிரெடிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டுகளை தனது தளத்தில் பயன்படுத்துவதை நிறுத்தியுள்ளது.
பேமெண்ட் செய்ய வேண்டுமெனில் ஆப்பிள் ஐடி-யில் பணத்தை டெபாசிட் செய்து பேமெண்ட் செய்ய வேண்டும். இது பெரிய தலைவலியாக இருக்கும் வேளையில் இந்த ஆப்பிள் - ஹெச்டிஎப்சி இணைந்து வழங்கும் co-branded கிரெடிட் கார்டு மூலம் இந்த பிரச்சனையை எளிதாக சரி செய்யமுடியும்.
ஒரு கிரெடிட் கார்டு மூலம் ஐபோன் விற்பனை முதல் UPI பேமெண்ட் வரையில் அனைத்து சேவைகளையும் அளிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. இந்தியாவில் ஆப்பிள் தனது ஆரம்பக்கட்ட வளர்ச்சியிலேயே நிதியியல் சேவை அறிமுகம் செய்தால் இந்திய வாடிக்கையாளர்கள் உடனான இணைப்பு மிகவும் சிறப்பாக இருக்கும்.
ஆப்பிள் - ஹெச்டிஎப்சி மத்தியிலான பேச்சுவார்த்தை முக்கிய கட்டத்தை அடையவில்லை, இதேவேளையில் தற்போது ஆப்பிள் செயல்பாடுகள் அனைத்தும் சந்தை கணிப்புகளாகும். ஆப்பிள் நிறுவனத்தின் முழுமையான திட்டம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் இன்னும் வெளியாகவில்லை.


Click it and Unblock the Notifications