ஆப்பிள் நிறுவனம் தங்களுடைய ஐபோன்களில் பெரும்பகுதியை சீனாவில் உற்பத்தி செய்து ஒருங்கிணைத்து தான் அமெரிக்காவில் இறக்குமதி செய்து விற்பனை செய்து வருகிறது. அண்மையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரியை உயர்த்தியிருக்கிறார்.
இதன் காரணமாக ஆப்பிள் நிறுவனம் சீனாவில் இருந்து ஐபோன்களை இறக்குமதி செய்வதற்கு முன்பை விட தற்போது அதிக தொகையை செலவிட வேண்டி இருக்கும். இந்த நிலையில் ஆப்பிள் நிறுவனம் இந்த கூடுதல் வரி சுமையை வாடிக்கையாளர்கள் மீது திணிக்க இருக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதாவது ஆப்பிள் நிறுவனம் வரி சுமையை சமாளிக்க ஐபோன்களின் விலையை உயர்த்தலாம் என சொல்லப்படுகிறது.

ஆனால் இவ்வாறு ஐபோன்களின் விலையை உயர்த்துவதன் மூலம் கணிசமான அளவு வாடிக்கையாளர்களை இழக்கக்கூடும் என்பதால் வேறு வழிகளில் இந்த பிரச்சனையை சமாளிப்பதற்கு ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டு இருக்கிறது. இதன்படி தங்களுடைய ஐபோன்கள் உற்பத்தி மற்றும் விநியோகத்திற்காக பெருமளவில் சீனாவை மட்டுமே சார்ந்து இருக்காமல் உற்பத்தியை பல்வேறு நாடுகளுக்கும் பரவலாக்க வேண்டும் என ஆப்பிள் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
அந்த வகையில் ஆப்பிள் நிறுவனத்திற்கு சீனாவுக்கு அடுத்தபடியாக ஐபோன்களை உற்பத்தி செய்து வழங்கக்கூடிய நம்பகமான நாடுகளில் ஒன்றாக இந்தியா இருக்கிறது. தற்போதைக்கு ஆப்பிள் நிறுவனத்திற்கு தேவையான ஐபோன்கள் உற்பத்தி மற்றும் ஒருங்கிணைப்பில் 15 சதவீதம் இந்தியாவில் தான் நடைபெறுகிறது. இந்தியாவில் தமிழ்நாட்டில் இருக்கும் ஃபாக்ஸ்கான் மற்றும் டாடா நிறுவன ஆலைகளில் தான் இந்த பணிகள் நடைபெறுகின்றன.
இந்த 15 சதவீதம் என்ற அளவை நடப்பு ஆண்டில் 25 சதவீதமாக உயர்த்துவதற்கு ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அதாவது சர்வதேச அளவில் தங்கள் நிறுவனத்திற்கு தேவையான 25 சதவீத ஐபோன்களை இந்தியாவில் உற்பத்தி செய்வது என ஆப்பிள் நிறுவனம் முடிவு செய்து இருக்கிறதாம். முன்னதாக ஆப்பிள் நிறுவனம் ஏப்ரல் 5ஆம் தேதி பரஸ்பர வரி நடைமுறைக்கு வருவதற்கு முன்பாகவே இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டு இருந்த ஐபோன்களை துரிதமாக அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்து கொண்டது.
மார்ச் மாதத்தின் கடைசி வாரத்தில் மட்டும் மூன்று நாட்களில் ஐந்து விமானங்களில் இந்தியாவில் இருந்து உற்பத்தி செய்யப்பட்ட ஐபோன்கள் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு இருக்கின்றன. டிரம்பின் வரிவிதிப்பு நடவடிக்கை அமெரிக்காவை சேர்ந்த டெக் நிறுவனங்களுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது என இதன் மூலம் தெரிய வருகிறது.
இதற்கிடையே ஐபோன்களின் விலை உயரக்கூடும் என்ற தகவல் பரவியதால் அமெரிக்காவில் மக்கள் அதிக அளவில் ஐபோன்களை வாங்கி குவித்து வருவதாக ப்ளூம்பெர்க் நிறுவனம் செய்து வெளியிட்டுள்ளது. அமெரிக்காவில் செயல்பட்டு வரக்கூடிய ஆப்பிள் நேரடி விற்பனை நிலையங்களில் எல்லாம் மக்கள் கூட்டம் அலைமோதுகிறதாம்.
ஆப்பிள் நிறுவனத்திற்கு ஐபோன்கள் விற்பனையில் மிக முக்கியமான சந்தை அமெரிக்கா தான். எனவே வாடிக்கையாளர்கள் மீது இந்த வரிச் சுமையை திணிக்காத வகையில் பல்வேறு வழிமுறைகளை கையிலெடுக்க திட்டமிட்டுள்ளது. அதாவது தற்போதைக்கு ஐபோன்களின் விலையை உயர்த்தாது என சொல்லப்படுகிறது.


Click it and Unblock the Notifications