ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்கள், ஐபேட்கள் மற்றும் மேக் கணினிகளுக்கு உலகம் முழுவதும் தனித்துவமான வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். ஆப்பிள் நிறுவனம் தங்கள் போன்கள் அல்லது கணினிகளில் எந்த மாற்றம் கொண்டு வந்தாலும் அது உலகளவில் கூர்ந்து கவனிக்கபடும். போட்டி நிறுவனங்களும் கூட இதனை பின்பற்ற தொடங்கும். அந்த வகையில் தங்களுடைய கணினி வடிவமைப்பில் பெரிய மாற்றத்தை ஆப்பிள் கொண்டு வருவதாக தெரிகிறது.
ஆப்பிள் நிறுவனம் M4 மேக் மினி என்ற பெயரில் சிறிய அளவிலான கணினியை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆப்பிள் நிறுவனத்தை பொறுத்தவரை தன்னுடைய ஐபோன் மாடலின் அளவுகளை ஒவ்வொரு ஆண்டும் பெரிதுபடுத்திக் கொண்டே போகிறது. ஆனால் தங்களுடைய கணினி என வரும்போது ஆப்பிள் நிறுவனம் அவற்றின் அளவை சிறிதாக்கி வருகிறது. ப்ளூம்பெர்க் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி அடிப்படையில் ஆப்பிள் நிறுவனம் தங்களுடைய சிறிய அளவிலான மேக் கணினியை வெளியிடப் போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சிறிய அளவிலான மேக் மினி கணினி நவீன M4 மற்றும் M4 புரோ ஆகிய சிப்களை கொண்டிருக்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த சிறிய அளவிலான கணினி பயன்பாட்டுக்கு வரும் பட்சத்தில் ஆப்பிள் நிறுவனம் தங்களுடைய கணினி வடிவமைப்பில் கிட்டத்தட்ட 2010 ஆம் ஆண்டுக்கு பிறகு செய்யக்கூடிய மிகப்பெரிய மாற்றமாக இது இருக்கும் என சொல்லப்படுகிறது. மேக் மினியை பொறுத்தவரை ஆப்பிள் டிவி அளவுக்கு இருக்கும் என சொல்லப்படுகிறது. தற்போது ஆப்பிள் டிவியின் அளவு என்பது 1.4 இன்ச் ஆகும்.
ஆப்பிள் நிறுவனம் மேக் மினி கணினி மாடல்களில் டைப் சி போர்ட் மற்றும் பவர் கேபிள்கள் மற்றும் எச்டிஎம்ஐ போர்ட் ஆகியவற்றை கொண்டு பரிசோதனை செய்ததாக நிறுவனத்தை சார்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர். மேக் மினி எனப்படும் சிறிய கணினியானது 2 வகைகளில் விற்பனைக்கு வர இருக்கிறது. இதன் அடிப்படை மாடல் M4 சிப்பினை கொண்டிருக்கும். இது கிட்டத்தட்ட ஐபேட் ப்ரோவை போலவே இருக்கும் என சொல்லப்படுகிறது. இரண்டாவது மாடல் M4 புரோ சிப்களுடன் நவீன அம்சங்களை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
இந்த சிறிய கணினியின் அடிப்படை மாடல் இந்த மாத இறுதியில் இருந்தே பல்வேறு விற்பனையாளர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட இருப்பதாக தெரிய வருகிறது. இதன் ஹை என்ட் மாடல் அக்டோபர் மாதத்தில் இருந்து விற்பனைக்கு வரும் என சொல்லப்படுகிறது. ஆப்பிள் நிறுவனம் நடப்பாண்டிலேயே தங்களுடைய ஐபோன் 16 சீரிஸ் ஃபோன்களை அறிமுகம் செய்யவும் திட்டமிட்டுள்ளது.
Written by: Devika


Click it and Unblock the Notifications