மும்பை: ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் தங்களின் நேரடி விற்பனை கடைகளை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது. சர்வதேச அளவில் ஸ்மார்ட்போன்களுக்கான இரண்டாவது பெரிய சந்தை இந்தியா ஆகும்.
எனவே ஸ்மார்ட்போன் பிராண்டுகள் பலவும் இந்தியாவை குறி வைத்து புது புது மாடல்களை அறிமுகம் செய்கின்றன. அந்த வகையில் ஆப்பிள் நிறுவனமும் இந்திய சந்தையை கைப்பற்றுவதற்காக பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

தற்போது ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் நொய்டா ,பெங்களூரு மற்றும் புனே ஆகிய இடங்களில் தங்களுடைய நேரடி விற்பனை கடைகளை திறப்பதற்கு திட்டமிட்டுள்ளது. ஆப்பிள் நிறுவனம் ஏற்கனவே கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் டெல்லி மற்றும் மும்பையில் நேரடி விற்பனை கடைகளை திறந்தது.
கடைகள் திறந்து ஓராண்டு முடிவடைந்த நிலையில் ஆப்பிள் நிறுவனம் நொய்டா மற்றும் பெங்களூரு ,புனே ஆகிய இடங்களில் உள்ள ஷாப்பிங் மால்களில் கடைகளை திறப்பதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்துள்ளது .
எக்கனாமிக் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியின் அடிப்படையில் கடந்த ஆண்டு ஆப்பிள் நிறுவனம் டெல்லி மற்றும் மும்பை ஆகிய நகரங்களில் நேரடியாக தங்களது விற்பனை கடைகளை திறந்ததன் மூலம் இந்தியாவில் ஐபோன்களின் விற்பனை கணிசமாக அதிகரித்துள்ளது.
ஓராண்டு காலத்தில் இந்த இரண்டு கடைகளின் மூலம் கிடைத்த விற்பனை வருவாய் என்பது 190 முதல் 210 கோடி ரூபாயாக உள்ளது என தெரிய வந்துள்ளது. இந்த கடைகளில் மாதாந்திர சராசரி விற்பனை என்பது 16 முதல் 17 கோடி ரூபாயாக உள்ளது என தி எக்கனாமிக் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவை பொறுத்தவரை ஆப்பிள் நிறுவனத்திற்கு சொந்தமான ஐபோன்கள் மற்றும் ஐபாட்கள் உள்ளிட்டவை வழக்கமாக ஈ காமர்ஸ் தளங்கள் மற்றும் பிற செல்போன் விற்பனை கடைகளில் மட்டுமே கிடைத்து வந்தது. ஆனால் கடந்த ஆண்டு முதல் முறையாக ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் தங்களது நேரடி விற்பனை கடைகளை திறந்தது.
இதன் மூலம் இந்திய வாடிக்கையாளர்கள் நேரடியாக ஆப்பிள் நிறுவன சாதனங்களை, அவர்களின் விற்பனை நிலையங்களுக்கே சென்று பார்வையிட்டு ஒரு புதிய அனுபவத்தை பெற முடிகிறது.
நேரடி விற்பனை கடைகளை திறந்த பிறகு இந்தியாவில் ஆப்பிள் நிறுவன ஃபோன்களின் விற்பனை என்பது அதிகரித்துள்ளது. அது மட்டும் இன்றி வார இறுதி நாட்களில் இந்த கடைகளுக்கு வருபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அண்மைக்காலமாக ஆப்பிள் நிறுவனம் இந்தியா மீதான தனது கவனத்தை அதிகப்படுத்தியுள்ளது.
விரைவில் இந்தியாவில் ஆப்பிள் விஷன் ப்ரோ ஹெட்செட்டை அறிமுகம் செய்ய ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்தியாவின் பிரதான நகரங்களில் ஆப்பிள் நிறுவனத்தின் நேரடி விற்பனை கடைகள் இருப்பது வருவாயை மேலும் அதிகரிக்க செய்யும் என ஆப்பிள் நிறுவனம் எதிர்பார்க்கிறது.
Story written by: Devika


Click it and Unblock the Notifications