இந்தியாவில் சுய தொழில் புரிபவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. பலரும் தங்களால் இயன்ற தொழிலை செய்து வாழ்க்கையில் எப்படியாவது முன்னேறி விட வேண்டும் என துடிக்கின்றனர். அந்த வகையில் சிறு தொழில் செய்பவர்களுக்கெல்லாம் சமூக வலைத்தளங்களும், அமேசான் , பிளிப்கார்ட் போன்ற இ காமர்ஸ் தளங்களும் மிகப்பெரிய வாய்ப்பு உருவாக்கி தந்துள்ளன.
அந்த வகையில் பலரும் இன்ஸ்டாகிராம் ,பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் தங்கள் தொழிலுக்கென ஒரு பக்கத்தை உருவாக்கி அதன் மூலம் வாடிக்கையாளர்களை ஈர்த்து தங்களுடைய பொருட்களை விற்பனை செய்கின்றனர்.

சிலர் பிளிப்கார்ட், அமேசான் உள்ளிட்ட தளங்களோடு பதிவு செய்து கொண்டு தங்களின் பொருட்களை உலகமெங்கும் கொண்டு சேர்க்கின்றனர். அப்படி திருப்பூரில் வெறும் ஐந்து ஊழியர்களுடன் தொடங்கப்பட்ட ஒரு தொழில் தற்போது 500க்கும் மேற்பட்ட ஊழியர்களுடன் செயல்பட்டு வருகிறது.
Ardeur இந்த பெயரை பிளிப்கார்ட் உள்ளிட்ட தளங்களில் நாம் அதிகம் கண்டிருப்போம். ஆண்களுக்கான ஆடைகளை விற்பனை செய்யும் ஒரு பிராண்ட் தான் இது. திருப்பூரை அடிப்படையாக கொண்டு செயல்பட்டு வருகிறது. மன்சூர் கான் என்பவர் தான் இதன் உரிமையாளர். பொதுவாக திருப்பூரில் தயாரிக்கப்படும் ஆடைகள் தான் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு குறிப்பிட்ட பிராண்டுகளின் பெயரில் மீண்டும் நம்மிடமே அதிக விலைக்கு விற்கப்படுகிறது.
இந்நிலையில் தான் திருப்பூரை சேர்ந்த இந்த நிறுவனம் ஆண்களுக்கான பிரீமியம் ரக ஆடை தயாரிப்பில் முன்னணி நிறுவனமாக வளர்ந்துள்ளது. கடந்த 2007 ஆம் ஆண்டு மன்சூர் கான் என்பவர் Ardeur என்ற இந்த நிறுவனத்தை தொடங்கினார். வெறும் நான்கு பொருட்களுடன் ஐந்து ஊழியர்களை மட்டுமே கொண்டு அவர் இந்த நிறுவனத்தை தொடங்கினார். ஆண்களுக்கான டீசர்ட்டுகள், ஷர்ட்டுகள் மற்றும் ஷார்ட்ஸ், ஜாக்கர்ஸ் உள்ளிட்ட ஆடைகளை விற்பனை செய்து பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ளது.
தற்போது இந்த நிறுவனம் 1500 பொருட்களையும் , ஆன்லைன் தளங்களில் விற்பனை செய்கிறது. இதனால் திருப்பூரில் இந்த நிறுவனம் இயங்கி வரும் பகுதியில் 500க்கும் மேற்பட்டோர் வேலை வாய்ப்பினை பெற்றுள்ளனர். கடந்த 2018 ஆம் ஆண்டு தான் இந்த நிறுவன முதல் முறையாக பிளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்ய தொடங்கியதாம்.
தற்போது நாடு முழுவதும் மட்டுமின்றி இந்தியாவை கடந்தும் இவரது நிறுவன தயாரிப்புகள் விற்பனை செய்யப்படுகின்றன. தரம் மற்றும் நியாயமான விலை ஆகியவை காரணமாக இந்நிறுவனம் பெரிய அளவில் வளர்ந்திருக்கிறது. பிளிப்க்கார்டே இதனை பெருமிதமாக தங்களின் சமூகவலைதள பக்கங்களில் பகிர்ந்துள்ளது.


Click it and Unblock the Notifications