அர்ஜென்டினாவின் ஜனாதிபதி Javier Milei அடுத்த சில மாதங்களில் 70,000 அரசு ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் திட்டத்தை அறிவித்து, அந்நாட்டின் மக்களின் தூக்கத்தைக் கெடுத்துள்ளார். ஜேவியர் மிலி "செயின்சா-பாணி" அணுகுமுறையைக் கையாண்டு அந்நாட்டின் செலவுகளைக் கடுமையாகக் குறைக்கும் திட்டத்தைக் கையில் எடுத்துள்ளதாக ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளார்.
ஜேவியர் மிலி அர்ஜென்டினா நாட்டை டாலர் தேசமாக மாற்றுவதாக அறிவித்தும், அந்நாட்டின் பொருளாதார போக்கை மாற்ற அர்ஜென்டினா பீசோ நாணயத்தை பயன்பாட்டில் இருந்து நீக்கிவிட்டு அமெரிக்க டாலரை அதிகாரப்பூர்வ நாணயமாக மாற்றுவதாக கூறி ஆட்சியை 2023ல் பிடித்தவர்.

இதன் மூலம் அர்ஜென்டினா ஏற்றுமதி செய்யும் தானியங்கள் மற்றும் லித்தியம் உலோக வர்த்தகத்திற்கு டாலரில் பணத்தை பெறும்.
இதேபோல் அர்ஜென்டினா நாட்டை டாலர் தேசமாக மாற்ற அந்நாட்டின் மத்திய வங்கியை மூடவும் வாக்குறுதி கொடுத்துள்ளார். டாலர் தேசமாக மாறுவது இது முதல் நாடு இல்லை, இதற்கு முன்பு இக்வேடார், எல் சால்வடோர் போன்ற நாடுகள் மாறியுள்ளது என்பதால் அர்ஜென்டினா மக்களே இவரை வரவேற்று அந்நாட்டின் பிரதமர் இருக்கையில் அமரவைத்தனர்.
இந்த நிலையில் மார்ச் 26 அன்று நடந்த ஒரு பொது நிகழ்வில் பேசிய ஜேவியர் மிலி, அர்ஜென்டினாவில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் பொதுப் பணிகளை நிறுத்துவது, அரசின் நிதி செலவுகளை குறைப்பது மற்றும் 200,000க்கும் மேற்பட்ட சமூக நலத் திட்டங்களை முடக்குவது, ஊழல் என்று முத்திரை குத்துவது போன்ற முக்கியமான திட்டத்தையும் முடிவையும் அறிவித்தார்.
Javier Milei அறிவித்துள்ள 70,000 அரசு ஊழியர்களை பணிநீக்கம் என்பது அர்ஜென்டினாவின் 3.5 மில்லியன் அதாவது 35 லட்சம் பொதுத்துறை பணியாளர்களில் ஒரு சிறு பகுதியை மட்டுமே. ஆனாலும் ஜேவியர் மிலே அந்நாட்டின் சக்திவாய்ந்த தொழிலாளர் சங்கங்களின் எதிர்ப்பை சந்திக்க நேரிடும்.
தொழிலாளர் சங்கங்களின் எதிர்ப்பும், போராட்டமும் அவரது அரசுக்கும், பதவிக்கும் ஆபத்தை ஏற்படுத்தவும் வாய்ப்பு உள்ளது. ஒரு தொழிற்சங்கம் Javier Milei அறிவித்த அதே நாளில், மார்ச் 26 அன்று வேலைநிறுத்தத்தை தொடங்கியது.
மேலும் டிசம்பரில் Javier Milei பதவியேற்றதில் இருந்து அர்ஜென்டினாவின் தனியார் துறை தொழிலாளர்கள் அதிகப்படியான ஊதியச் சரிவை எதிர்கொண்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications