நம் நாட்டில் பணக்காரர்கள் அதிகம் கொண்ட நகரங்கள் பட்டியலில் மும்பை முதலிடத்தில் உள்ளது. இந்தியாவின் பைனான்சியல் தலைநகரான மும்பையில் 328 தொழில் அதிபர்கள் உள்ளனர். இரண்டாவது இடத்தில் 199 பேருடன் தலைநகர் டெல்லி உள்ளது. நாட்டின் ஐ.டி. மையமான பெங்களூரு 100 தொழிலதிபர்களுடன் 3வது இடத்தை பிடித்துள்ளது.
பெங்களூருவில் வசிக்கும் பெரிய கோடீஸ்வரர்கள் பெயரை சொல்ல சொன்னால், இன்போசிஸ் நாராயண மூர்த்தி, விப்ரோவின் அசிம் பிரேம்ஜி, பயோகான் நிறுவனத்தின் தலைவர் கிரண் மஜூம்தார் போன்றவர்களின் பெயரை டக்கென்று யாரும் சொல்வார்கள். இவர்களில் ஒருவர் தான் பெங்களூர் நகரத்தின் பெரிய பணக்காரராக இருப்பார் என்று நினைப்போம்.

ஆனால் பெங்களூரில் இவர்களை காட்டிலும் ஒரு பெரிய கோடீஸ்வரர் இருக்கிறார். பெங்களூருவில் மிகப்பெரிய பணக்காரர் RMZ Corp குழுமத்தின் தலைவர் அர்ஜூன் மெண்டா. இவரின் சொத்து மதிப்பு சுமார் ரூ.37,000 கோடியாகும்.
அதேசமயம் நாராயண மூர்த்தியின் சொத்து மதிப்பு ரூ.35,000 கோடி, அசிம் பிரேம்ஜி மற்றும் கிரண் மஜூம்தார் ஆகியோரின் சொத்து மதிப்பு முறையே ரூ.30,000 கோடி மற்றும் ரூ.17,000 கோடி தான். RMZ Corp நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிறுவனர்களில் ஒருவரான அர்ஜூன் மெண்டா தற்போது எட்டியுள்ள உயரத்தை எளிதாக அடைந்து விடவில்லை.
1933ல் சிந்து மாகாணத்தில் உள்ள ஷிகர்பூரில் அர்ஜூன் மெண்டா பிறந்தார். இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையின் போது, அர்ஜூன் மெண்டா கடுமையான இன்னல்களை எதிர்கொண்டனர். பல தசாப்தங்களாக சேர்த்து வைத்த சொத்துக்களை அனைத்தையும் விட்டுவிட்டு இந்தியாவுக்கு தப்பியோடி வர வேண்டியிருந்தது.
அர்ஜூன் மெண்டா குடும்பம் அகதியாக சென்னைக்கு குடிபெயர்ந்தனர். வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் அவர்களை கைவிடவில்லை. அர்ஜூன் மெண்டா காரக்பூர் ஐ.ஐ.டி.யில் உற்பத்தி தொழில்நுட்பத்தில் பட்டம் பெற்றார். படித்த முடித்தவுடன் மகிந்திரா அண்ட் மகிந்திரா நிறுவனத்தில் தொழில்துறை பொறியாளராக தனது தொழில்முறை பயணத்தை தொடங்கினார். பின்னர் கேப்ரியல் இந்தியா லிமிடெட்டில் உற்பத்தி மேலாளராக பணியாற்றினார்.
ஒரு கட்டத்தில் வேலை அவருக்கு சலிப்பை ஏற்படுத்தியது, சொந்த தொழில் செய்வோம் என்ற ஆசை ஏற்பட்டது. இதனையடுத்து 1980களில் ரியல் எஸ்டேட் வர்த்தகத்தில் ஈடுபட முடிவு செய்து RMZ Corp நிறுவனத்தை தொடங்கினார். ரியல் எஸ்டேட் வர்த்தகம் அவரின் அசுர வளர்ச்சிக்கு வழிவகுத்தது.
பெங்களூருவில் உள்ள தி மில்லினியா மற்றும் ஆர்.எம்.இசட். இன்பினிட்டி, டெல்லியில் உள்ள ஆர்.எம்.இசட். இன்பினிட்டி, சென்னையில் ஆர்.எம்.இசட். ஒன் பாரமவுண்ட் மற்றும் ஹைதராபாத்தில் உள்ள ஸ்கைவியூ ஆகியவை அதன் முக்கிய திட்டங்களில் அடங்கும். 1990ல் அர்ஜூன் மெண்டா, மெண்டா அறக்கட்டளையை நிறுவினார். இந்த அறக்கட்டளை ஆண்டுதோறும் சுமார் 700 பேருக்கு ஸ்காலர்ஷிப்ஸ் வழங்குகிறது.


Click it and Unblock the Notifications