12ஆம் வகுப்பில் கலை மற்றும் காமர்ஸ் பிரிவுகளில் பயின்ற மாணவர்களும் இனி விமானிகளாக மாறக்கூடிய வகையில் விமான போக்குவரத்து துறை ஆணையரகம் குறிப்பிட்ட சில மாற்றங்களை கொண்டு வர திட்டமிட்டுள்ளது.
இந்தியாவில் 12ஆம் வகுப்பில் இயற்பியல் மற்றும் கணித பாடங்களை படித்திருப்பவர்கள் மட்டுமே சிபிஎல் எனப்படும் கமர்ஷியல் பைலட் லைசென்ஸ் (commercial pilot license) என்ற விமானிக்கான உரிமத்தை பெறுவதற்கு விண்ணப்பம் செய்ய முடியும். அதாவது 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் அறிவியல் பாடப் பிரிவை எடுத்து அதில் கணிதம் மற்றும் இயற்பியல் படிப்புகளை படித்திருப்பவர்கள் மட்டுமே விமானியாவதற்கான படிப்பில் சேர்வதற்கு விண்ணப்பம் செய்ய முடியும்.

1990களில் இருந்து இந்தியாவில் இந்த நடைமுறை அமலில் இருக்கிறது. அதற்கு முன்பு வரை பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே பைலட் பயிற்சிக்காக விண்ணப்பம் செய்து அவர்களால் உரிமம் பெற முடியும். 1990களின் மத்தியில் தான் கட்டாயம் அவர்கள் 12-ம் வகுப்பு முடித்திருக்க வேண்டும், அதில் இயற்பியல் மற்றும் கணிதம் ஒரு பாடமாக இருக்க வேண்டும் என்ற விதிமுறை கொண்டுவரப்பட்டது.
இந்த நிலையில் இது ஒரு தேவையற்ற விதிமுறை எனவும் வேறு எந்த நாட்டிலும் இப்படி கணிதம் மற்றும் இயற்பியல் படித்திருந்தால் தான் கமர்ஷியல் பைலட் உரிமத்தை பெற முடியும் என்ற விதிமுறை இல்லை என்றும் இண்டிகோ விமான சேவை நிறுவனத்தின் முன்னாள் துணைத் தலைவரும் விமானியமான கேப்டன் சக்தி லம்பா தெரிவித்துள்ளார். விமானிகளாக பயிற்சி பெற வருபவர்களுக்கு தேவையான அடிப்படை கணிதம் மற்றும் இயற்பியல் பாடங்கள் அவர்களின் இடைநிலைப்பள்ளி பாடங்களிலேயே வந்து விடுகிறது என அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.
ஒரு நபர் பைலட் ஆக வேண்டும் என்றால் அதற்கு அவர் 12 ஆம் வகுப்பில் படித்த கணிதமும் இயற்பியலும் தான் உதவுகிறது என்பது சரியான விதிமுறை கிடையாது இது காலம் சென்ற விதிமுறை என கேப்டன் சக்தி லம்பா கூறுகிறார் . இந்தியாவில் பிரைவேட் பைலட் லைசென்ஸ் (private pilot license) எனப்படும் தனியார் பைலட் உரிமங்கள் பெற விண்ணப்பம் செய்பவர்களிடம் இதுபோல கணிதம் மற்றும் இயற்பியல் படித்திருக்க வேண்டும் என கேட்கப்படுவது கிடையாது, ஆனால் கமர்ஷியல் பைலட்டுக்கு மட்டும் ஏன் இவ்வாறு கேட்கப்படுகிறது என தொடர்ந்து ஒரு சர்ச்சை நீடித்து வருகிறது.
இது நியாயமற்ற நடைமுறை என விமானிகளுக்கான பயிற்சி பள்ளிகள் நடத்தும் நிறுவனங்கள் கூறி வருகின்றன. அறிவியல் அல்லாத கலை மற்றும் காமர்ஸ் உள்ளிட்ட பிரிவுகளில் 12ஆம் வகுப்பை முடித்தவர்கள் விமானியாக வேண்டும் என எண்ணினால் அவர்களுக்கான வாய்ப்பினை இந்த விதிமுறை மறுக்கிறது என கூறி வருகின்றன .
இந்தியாவில் தற்போது பயிற்சி பெற்ற விமானிகளுக்கான தேவை அதிகரித்து வருகிறது. எனவே தான் விமான போக்குவரத்து ஆணையரகம் கூடிய விரைவில் விமானி படிப்புகளுக்கான தகுதிகளை மாற்றி அமைக்க திட்டமிட்டுள்ளது. இதன்படி பன்னிரண்டாம் வகுப்பில் அனைத்து பாடப்பிரிவுகளை எடுத்து படித்தவர்களும் பைலட் படிப்புக்கு விண்ணப்பம் செய்யலாம் என விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது.


Click it and Unblock the Notifications