தமிழ்நாட்டில் வேகமாக வளர்ச்சி அடைந்து வரக்கூடிய ஒரு நகரமாக ஓசூர் இருக்கிறது. 500க்கும் அதிகமான தொழில் நிறுவனங்கள், 3000க்கும் அதிகமான சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் இங்கே செயல்படுகின்றன. வேலைவாய்ப்பு, உற்பத்தி என அனைத்து பிரிவுகளிலும் ஓசூர் வளர்ச்சி அடைந்து வருகிறது.
ஓசூரில் சர்வதேச விமான நிலையம் அமைக்க வேண்டும் என்பதற்காக தமிழ்நாடு அரசு பல்வேறு பணிகளையும் முன்னெடுத்து இருக்கிறது. ஓசூர் அருகே பேரிகை - பாகலூர் பகுதியில் விமான நிலையம் அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்து மத்திய அரசின் முதல் கட்ட அனுமதிக்காக விரிவான திட்ட அறிக்கையை தமிழ்நாடு அரசு அனுப்பி வைத்தது. ஆனால் அருகிலேயே இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் லிமிடெட் நிறுவனத்திற்கு சொந்தமான ஹேர் ஸ்பேஸ் இருப்பதை காரணமாக கூறி மத்திய அரசு ஓசூர் விமான நிலைய திட்டத்தை நிராகரித்தது.

விரைவில் தமிழ்நாட்டில் தேர்தல் வர இருப்பதாலும் மத்திய அரசின் அனுமதி இதுவரை கிடைக்காததாலும் தமிழ்நாடு அரசு ஓசூர் விமான நிலைய திட்டத்திற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகளை சற்றே நிறுத்தி வைத்திருக்கிறது. ஓசூர் விமான நிலைய திட்டத்தை செயல்படுத்த சுமார் 3000 ஏக்கர் நிலம் தேவை. இதில் 800 ஏக்கர் நிலம் ஏற்கனவே அரசின் வசம் இருக்கிறது. மீதமுள்ள இடத்தை தான் அரசு கைப்பற்ற வேண்டும்.
நிலம் கையகப்படுத்தும் அதிகாரியாக கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரை அரசு ஏற்கனவே நிர்ணயம் செய்து பணிகளை தொடங்கி விட்டது. இந்த சூழலில் ஏர்ஸ்பேஸை காரணமாக கூறி மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகம் ஓசுர் விமான நிலைய திட்டத்தை நிராகரித்துவிட்ட நிலையில் தமிழ்நாடு அரசு விரிவான திட்ட அறிக்கையில் தொழில்நுட்ப ரீதியிலான மாற்றங்களை ஏற்படுத்தி ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் லிமிடெட் நிறுவனத்திற்கு உட்பட்ட ஏர் ஸ்பேஸ் பாதிக்காத வகையில் ஓசூர் விமான நிலையத்தை எப்படி இயக்குவது என்பது தொடர்பான தகவல்கள் அடங்கிய புதிய அறிக்கையை மத்திய அரசு அனுப்புவதற்கு தயாராகி வருகிறது.
இந்த புதிய அறிக்கையில் ஓசூர் விமான நிலையம் ஓசூருக்கு மட்டுமல்ல பெங்களூரு நகருக்கும் ஒரு முக்கியமான விமான நிலையமாக மாறும் என்ற தகவல்களும் இடம்பெறக் கூடிய வகையில் விரிவான திட்ட அறிக்கையில் மாற்றம் செய்யப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்திருப்பதாக டெக்கன் ஹெரால்டு செய்தி குறிப்பிடுகிறது.
இதுவரை ஓசூர் விமான நிலைய திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்காமல் இருப்பதால் நிலம் கையகப்படுத்தும் பணிகளை வேகப்படுத்தாமல் பொறுமையாக மேற்கொள்ள முடிவு செய்திருப்பதாக கிருஷ்ணகிரி மாவட்ட அதிகாரிகள் தெரிவித்து இருக்கின்றனர். சில இடங்களில் விவசாயிகள் விமான நிலையத்திற்கான இடங்களை கொடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். எனவே அவர்களிடமும் அரசு விரிவான பேச்சு வார்த்தை நடத்த வேண்டிய அவசியம் இருக்கிறது.
விமான நிலைய திட்டத்திற்காக 2979 ஏக்கர் நிலத்தை அரசு கைப்பற்றி ஆக வேண்டும் . இதில் விவசாய நிலங்களும் அடங்கும் , நிலம் கையகப்படுத்த வேண்டிய 12 கிராமங்களில் 10 கிராமங்கள் ஓசூர் தாலுகாவிலும் , 2 கிராமங்கள் சூளகிரி தாலுகாவிலும் அமைந்திருக்கின்றன. ஓசூரில் விமான நிலையம் அமைக்கும் முடிவில் அரசு உறுதியாக நிற்கிறது, அனைத்து சிக்கல்களையும் சரி செய்து பணிகளை தொடங்க முடிவு செய்திருப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications