இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளர் யார் என்பது தான் கிரிக்கெட் உலகில் தற்போது பரவலாக பேசப்படும் விஷயமாக இருக்கிறது. தற்போது தலைமை பயிற்சியாளராக இருக்கும் ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் இந்த ஜூன் மாதத்துடன் முடிவடைகிறது.
இந்நிலையில் அடுத்த தலைமை பயிற்சியாளரை தேடும் பணியில் பிசிசிஐ ஈடுபட்டுள்ளது. தலைமை பயிற்சியாளருக்கான தகுதிகள் என்னென்ன? ஊதியம் என்ன ? போன்ற தகவல்களை காணலாம்.

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருப்பவருக்கு பெரிய பொறுப்பும் அழுத்தமும் இருக்கிறது. இவர்கள் பெரும்பாலான நாட்கள் வீரர்களுடன் தங்கி அல்லது வீரர்கள் செல்லும் நாட்டுக்கு சென்று பயிற்சி அளிக்க வேண்டிய நிலை இருக்கிறது. இதற்கு ஏற்ற வகையில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் பல்வேறு சலுகைகளையும் வசதிகளையும் அவர்களுக்கு செய்து தருகிறது.
ஆண்கள் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளரின் பதவிக்காலம் 3.5 ஆண்டுகளாகும். புதிதாக தேர்வு செய்யப்படும் பயிற்சியாளர் 2024 ஜூலை 1ஆம் தேதி தொடங்கி 2027 டிசம்பர் 31ஆம் தேதியுடன் முடிவடையும்.
இந்திய கிரிக்கெட் அணியை நிர்வகிப்பது மற்றும் குறிப்பாக அனைத்து வகையான கிரிக்கெட் ஃபார்மட்டுகளுக்கும் ஏற்றவாறு வீரர்களுக்கு பயிற்சி அளித்து அவர்களை தயார் செய்வது உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளும் பணிகளும் நிறைந்த ஒரு வேலை தான் பயிற்சியாளர் பணி. எனவே இதற்கென தகுதிகள் உள்ளன.
கிரிக்கெட் விளையாட்டில் போதிய அனுபவம் கொண்டவராக இருக்க வேண்டும் குறைந்தபட்சம் 30 டேஸ்ட் போட்டிகளில் விளையாடிய அனுபவம் தேவை அல்லது 50 ஒரு நாள் போட்டிகளிலும் விளையாடி இருக்க வேண்டும் அல்லது ஐபிஎல் அணி போன்ற ஒரு அணிக்கு தலைமை பயிற்சியாளராக இருந்திருக்க வேண்டும்.
பிசிசிஐயின் லெவல் 3 சான்றிதழை பெற்றவராக இருக்க வேண்டும், 60 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்
பயிற்சியாளருக்கான குறிப்பிட்ட ஊதியம் என்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இருந்தாலும் அவரது திறமை மற்றும் அனுபவம் உள்ளவற்றை அடிப்படையாகக் கொண்டு ஊதியம் நிர்ணயம் செய்யப்படுகிறது.
ஆண்டுக்கு 10 கோடி ரூபாய் வரை ஊதியம் கிடைக்கலாம் என சொல்லப்படுகிறது.
கிரிக்கெட் அணி எங்கெல்லாம் செல்கிறதோ அங்கெல்லாம் பயிற்சியாளரும் செல்ல வேண்டி இருப்பதால் அவர்களுக்கு தேவையான அனைத்துமே பிசிசிஐ தரப்பில் செய்து தரப்படுகிறது.
தங்குமிடங்கள் மற்றும் போக்குவரத்து செலவுகளையும் பிசிசிஐ ஏற்கிறது. குறிப்பாக போட்டிகள் அல்லது தொடர்களின் போது பயிற்சியாளருக்கு டெய்லி அலவென்ஸ் வழங்கப்படுகிறது. ஒரு நாளைக்கு 250 டாலர்கள் அதாவது 20,814 ரூபாய் என்ற அளவில் பயிற்சியாளருக்கு அலவென்ஸ் கிடைக்கும்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications