2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் முதல் முறையாக போட்டியிட்டு தமிழ்நாடே திரும்பிப் பார்க்கும் வகையில் முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்துவிட்டார் தவெக தலைவர் விஜய். புதிய பதவியில் அமர்ந்ததிலிருந்து அவர் தலைமையிலான அரசு பல்வேறு அதிரடி மாற்றங்களை செய்து வருகிறது. அந்த வகையில் மதுபான கொள்கையிலும் சில மாற்றங்கள் வரத் தொடங்கியுள்ளன.
தமிழ்நாட்டில் மது அருந்துவதற்கான சட்டப்பூர்வ வயது 21. இதை கடுமையாக பின்பற்றவும் தவெக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் கோவில்கள், பள்ளிகள், கல்லூரிகள், தேவாலயங்கள், மசூதிகள், பேருந்து நிலையங்கள் போன்றவற்றுக்கு 500 மீட்டர் தொலைவில் இருக்கும் மது கடைகளை மூடுமாறும் சமீபத்தில் முதல்வர் விஜய் உத்தரவிட்டார். அதன்படி 717 டாஸ்மாக் கடைகள் மக்களுக்கு இடையூறு அளிக்கும் வகையில் இருந்ததாக கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது இந்த 717 கடைகளையும் உடனடியாக மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மதுபான கொள்கையை தீவிரமாக கண்காணிக்க முதல்வர் உத்தரவிட்டிருக்கும் நிலையில், நம் ஊர் இளைஞர்கள் பக்கத்து மாநிலங்களிலும் என்ன மது சட்டங்கள் இருக்கிறது? என்பதைக் கவனிக்கத் தொடங்கியுள்ளனர். ஏனெனில் மாநிலத்திற்கு மாநிலம் மது அருந்துவதற்கான வயது வரம்பு மாறுகிறது. சில மாநிலங்களில் 18 வயது கடந்தாலே போதும். மது அருந்த அனுமதி உண்டு. ஆனால் சில மாநிலங்களில் 25 வயதைக் கடந்தால் தான் மது அருந்தும் அனுமதி வழங்கப்படுகிறது.

18 வயது: கோவா மற்றும் ராஜஸ்தான் போன்ற இடங்களில் 18 வயதைக் கடந்தாலே மது அருந்த அனுமதி வழங்கப்படுகிறது. இவற்றுடன் இமாச்சலப் பிரதேசம், மத்திய பிரதேசம், புதுச்சேரி மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்களிலும் இதே விதி தான் அமலில் உள்ளது.
21 வயது: தமிழ்நாடு, மகாராஷ்டிரா, கர்நாடகா, மேற்கு வங்காளம் மற்றும் உத்தரப் பிரதேசம் போன்ற சில மாநிலங்களில் மது அருந்துவதற்கான சட்டப்பூர்வ வயது 21. இதோடு ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா, ஒடிசா, உத்தரகாண்ட், ஜம்மு காஷ்மீர், லடாக் போன்ற சில யூனியன் பிரதேசங்களும் மது அருந்துவதற்கான வயதை 21-ஆக கடைபிடிக்கின்றன.
மகாராஷ்டிராவில் மட்டும் ஒரு விசித்திரமான சட்டம் உள்ளது. அது என்ன தெரியுமா? அங்கு 21 வயது பூர்த்தியாகிவிட்டால் பீர் மற்றும் ஒயின் குடிக்கலாம். ஆனால் பிற மதுபானங்களான விஸ்கி, ஓட்கா போன்ற மது வகைகளை குடிக்கக்கூடாது. அதற்கு உங்களுக்கு 25 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும்.
சில மாநிலங்கள் 21 வயதை மது அருந்துவதற்கான சட்டப்பூர்வ வயதாகக் கொண்டிருக்கையில், கேரளா மட்டும் 21-ம் இல்லாமல், 25-ம் இல்லாமல் 23 வயதை மது அருந்துவதற்காக சட்டப்பூர்வ வயதாகக் கொண்டிருக்கிறது. அங்கு மது அருந்த வேண்டுமானால் அதற்கு உங்களுக்கு 23 வயது ஆகியிருக்க வேண்டும்.
இந்தியாவிலேயே சில மாநிலங்களில் மது அருந்துவதற்கான வயது வரம்பு இன்னும் அதிகம். மேகாலயா, ஹரியானா, பஞ்சாப், சண்டிகர் போன்ற சில இடங்களில் மது அருந்த வேண்டுமானால் அதற்கு உங்களுக்கு 25 வயது முடிந்திருக்க வேண்டும்.
எனவே டெல்லியில் இருக்கும் இளைஞர்கள் ஓட்டு போடலாம், வேலைக்கு செல்லலாம், ஏன் 25 வயதுக்குள் திருமணம் கூட செய்து கொள்ளலாம். ஆனால் ஒரு காக்டெய்ல் ஆர்டர் செய்ய வேண்டுமானால் கண்டிப்பாக 25 வயதை கடந்திருக்க வேண்டும்.
மதுவிலக்கு அமலில் உள்ள மாநிலங்கள்: மது அருந்துவதற்கு சட்டப்பூர்வ வயதை வகுத்திருக்கும் சில மாநிலங்களுக்கு மத்தியில், ஒரு சில மாநிலங்களில் முழுமையாக மதுவிலக்கு அமலில் உள்ளது. அந்த வகையில் மிசோரம்,பீகார், குஜராத், மணிப்பூர் போன்ற சில இந்திய மாநிலங்கள் மதுவை முழுமையாக தடை செய்துள்ளன. லட்சத்தீவிலும் மதுவுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
ஆனால் குஜராத்திற்கு சுற்றுலாப் பயணிகள் செல்லும் போது சில குறிப்பிட்ட ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களில் மது அருந்தலாம். மேலும் லட்சத்தீவிலும் சுற்றுலா தளங்களை விரிவுபடுத்தும் விதமாக கட்டுப்பாடுகளை தளர்த்தி குறிப்பிட்ட தங்கும் விடுதிகளில் மட்டும் மது வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications