மும்பை: ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவரான முகேஷ் அம்பானி ஃபோர்ப்ஸ் வெளியிட்ட 2024 ஆம் ஆண்டின் 100 இந்திய பணக்காரர்கள் பட்டியலில் நடப்பு ஆண்டிலும் முதலிடத்தை தக்க வைத்துள்ளார். முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பில் கடந்த ஓராண்டு காலத்தில் மட்டும் 27.5 பில்லியன் டாலர்கள் வரை கூடுதலாக சேர்ந்துள்ளது.
இதன் மூலம் முகேஷ் அம்பானியின் மொத்த சொத்து மதிப்பு 119.5 பில்லியன் டாலர்கள் என அதிகரித்துள்ளது. அந்த வகையில் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி 13ஆவது இடத்தில் இருக்கிறார்.

கடந்த 9ஆம் தேதி ஃபோர்ப்ஸ் தளம் வெளியிட்ட இந்தியாவின் 100 பணக்காரர்கள் பட்டியலை பார்க்கும்போது மொத்தமாக இந்த நூறு பணக்காரர்களின் செல்வம் 1 ட்ரில்லியன் டாலர்கள் என்ற அளவை கடந்து விட்டது. முதன்முறையாக இந்திய பணக்காரர்களின் மொத்த சொத்து மதிப்பு இந்த அளவினை கடந்து இருப்பதாக ஃபோர்ப்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டில் இந்தியாவின் முதல் 100 பணக்காரர்களின் செல்வம் 40 சதவீதம் உயர்ந்துள்ளது. அதாவது 1.1 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்கள் என்ற அளவை எட்டியுள்ளது. இது கடந்த 2023 ஆம் ஆண்டு 799 பில்லியன் டாலர்களாக மட்டுமே இருந்தது.
இந்திய பணக்காரர்களின் சொத்து மதிப்பு உயர்வதற்கு மிக முக்கிய காரணமாக இருந்தது இந்திய பங்குச் சந்தையின் செயல்பாடு என சொல்லப்படுகிறது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் கடந்த ஓராண்டு காலத்தில் 30% உயர்ந்துள்ளது.
இதன் காரணமாக பெரும்பாலான இந்திய பணக்காரர்களின் சொத்து மதிப்பும் அதிகரித்துள்ளது. குறிப்பாக முதல் 100 பணக்காரர்களில் 58 பேர் கூடுதலாக 1 பில்லியன் டாலர்களை தங்களுடைய செல்வத்தில் சேர்த்துள்ளனர். அதானி குழுமத்தின் தலைவரான கௌதம் அதானி 116 பில்லியன் அமெரிக்க டாலர்கள் சொத்து மதிப்போடு இந்திய பணக்காரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்திருக்கிறார்.
இவர் கடந்த ஓராண்டு காலத்தில் மட்டும் கூடுதலாக 48 பில்லியன் டாலர்கள் சொத்தினை சேர்த்து இருக்கிறார். இது அம்பானியை விட அதிகமாகும். கடந்த ஆண்டின் தொடக்கத்தில் ஹிண்டன்பர்க் அறிக்கையால் அதானி குழுமத்துக்கு சொந்தமான நிறுவனங்களின் பங்குகள் பெரிய சரிவை கண்டன.
ஆனால் அவை அதிலிருந்து மீண்டு வந்து அதானிக்கு பெரிய அளவில் கைகொடுத்துள்ளன. ஃபோர்ப்ஸின் 100 இந்திய பணக்காரர்கள் பட்டியலில் சாவித்திரி ஜிண்டால் 43.7 பில்லியன் டாலர் மதிப்புடன் மூன்றாவது இடத்தில் இருக்கிறார். ஷிவ நாடார் 4ஆவது இடத்தையும், திலீப் சாங்வி 5ஆவது இடத்தையும் , ராதாகிஷன் தமானி 6ஆவது இடத்தையும் பிடித்துள்ளனர்.
Written by: Devika


Click it and Unblock the Notifications