நடப்பு ஆண்டு தொடக்கம் முதலே தங்கம் மற்றும் வெள்ளி ஆகிய இரண்டு விலைமதிப்பற்ற உலோகங்களின் விலைகளும் கடுமையான ஏற்றத்தை சந்தித்து வருகின்றன. கடந்த காலங்களில் ஒரு கிலோ வெள்ளி சுமார் ரூ.95,000 என்ற அளவில் இருந்த நிலையில், அதன் விலை தற்போது கிட்டத்தட்ட ரூ.1,80,000 ஐ எட்டியுள்ளது.
அதாவது, ஒரு வருடத்திற்குள் வெள்ளி விலை சுமார் 70% வரை உயர்ந்துள்ளது. உலகப் பொருளாதார நிலைமை மிகவும் நிச்சயமற்றதாக மாறிவிட்டதால், முதலீட்டாளர்கள் தங்களுக்குப் பாதுகாப்பான புகலிடமாகத் தங்கம் மற்றும் வெள்ளியை நோக்கி அதிக அளவில் தங்கள் முதலீடுகளைத் திருப்பி வருகின்றனர். இதன் விளைவாக, வெள்ளி தற்போது முதலீட்டாளர்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்த சூழலில், சர்வதேச சந்தையில் வெள்ளிக்கு பற்றாக்குறை நிலவுவதால், இந்தியாவில் உள்ள bullion மற்றும் commodities சந்தைகள் கடுமையான குழப்பத்தை சந்தித்து வருகின்றன. இதன் விளைவாக, டிசம்பர் மாதத்திற்கான எதிர்கால வர்த்தக விலையை விட சாதாரண சந்தை விலை 20% அதிகமாக உள்ளது.
இந்த சந்தை அபாயத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, இந்தியாவின் மிகப்பெரிய commodities சந்தையான எம்.சி.எக்ஸ் (MCX), வெள்ளி ஒப்பந்தங்களுக்கான மார்ஜினை 1.5% அதிகரித்துள்ளது. கடந்த திங்கட்கிழமை வரை 11.5% ஆக இருந்த இந்த மார்ஜின், செவ்வாய்க்கிழமையான நேற்று முதல் உயர்த்தப்பட்டுள்ளது.
விலை உயர்வுக்கு என்ன காரணம்..?
வெள்ளியின் இந்த திடீர் விலை உயர்வுக்கு பல உலகளாவிய காரணிகள் உள்ளதாக Aspect Bullion நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி தர்ஷன் தேசாய் கூறியுள்ளார். ரஷ்யா-உக்ரைன் மற்றும் இஸ்ரேல்-ஹமாஸ் போர்கள் போன்ற உலகளாவிய அரசியல் பதற்றங்கள் முதலீட்டாளர்களைப் பாதுகாப்பான புகலிடமாக வெள்ளியை நோக்கித் தள்ளுகின்றன.
அதேபோல், சூரிய மின்சக்தி, மின்சார வாகனங்கள் மற்றும் குறைக்கடத்திகள் போன்ற வேகமாக வளர்ந்து வரும் தொழில்களில் வெள்ளிக்கான தேவை அதிகரித்துள்ளது. பல ஆண்டுகளாக குறைந்த விலை விற்பனையானதால், வெள்ளியை உற்பத்தி செய்த சில சுரங்கங்கள் லாபமற்றவை என கருதி மூடப்பட்டன. இது தற்போதுள்ள தேவைக்கும், விநியோகத்திற்கும் இடையே மிக பெரிய இடைவெளியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், உலகளாவிய வர்த்தகர்களிடையே வெள்ளிப் பரிமாற்றம் செய்யப்படும் இடத்தில், வெள்ளியை வாடகைக்கு எடுப்பதற்கான வட்டி விகிதங்கள் ஒரு வாரத்திற்கு முன்பு 5%க்கும் குறைவாக இருந்த நிலையில், தற்போது சுமார் 39% ஆக உயர்ந்துள்ளன.
உள்நாட்டுச் சந்தையில், ஒரு கிலோ வெள்ளியின் சந்தை விலை சுமார் ரூ.1.9 லட்சம் என்ற அளவில் வர்த்தகமானது. ஆனால், எம்.சி.எக்ஸ்-ல் டிசம்பர் மாத எதிர்கால வர்த்தக விலை சுமார் ரூ.1.62 லட்சம் என்றே இருந்தது. இந்த 20% வேறுபாடு குறித்து மெஹ்தா ஈக்விட்டிஸ் நிறுவனத்தின் ராகுல் கலந்த்ரி கூறுகையில், சந்தையில் உள்ள சில்லறை வர்த்தகர்களிடையே வெள்ளிக்கான அதிகப்படியான உடனடித் தேவை நிலவுவதுதான் இதற்கு முக்கிய காரணம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
அதே சமயம், எம்.சி.எக்ஸ்-ல் பெரிய வர்த்தகர்கள், நகைக்கடைக்காரர்கள் மட்டுமே உள்ளனர். மேலும், எம்.சி.எக்ஸ் வர்த்தகத்தில் எதிர்காலத்தில் டெலிவரியும் செய்யப்படும். ஆனால், சில்லறை சந்தையில் தீபாவளி மற்றும் திருமணக் காலம் போன்ற காரணங்களுக்காக உடனடியாக வெள்ளி வாங்குவோர் தேவை அதிகமாக உள்ளது.
தற்போது உயரும் விலை இன்னும் 10 நாட்களுக்குள் இயல்பு நிலைக்குத் திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால், பண்டிகை காலத்தின் உற்சாகம் குறைந்தவுடன் வெள்ளியின் தேவையும் குறைந்துவிடும் என்று கலந்த்ரி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications