இந்தியாவின் முன்னணி கனரக வாகன உற்பத்தியாளரான அசோக் லேலண்ட் நாட்டின் மொத்த தேவையின் பெரும் பகுதியைச் சென்னை மற்றும் ஓசூர் தொழிற்சாலை மூலம் தீர்த்து வரும் வேளையில், சமீபத்தில் மாற்று எரிபொருள் இன்ஜின் கொண்ட வாகனங்களைத் தயாரிக்கும் பணியில் தற்போது இறங்கியுள்ளது. இதற்காக ஓசூரில் தனிப்பட்ட முதலீட்டையும் அசம்பிளி செயினையும் உருவாக்கியுள்ளது.
அசோக் லேலண்ட், தனது எலக்ட்ரிக் டிரக்குகள் உற்பத்தியை அதிகரிக்க முடிவு செய்துள்ளது. இதன் மூலம் வர்த்தக வாகனங்களின் முன்னணி உற்பத்தியாளரான இந்நிறுவனம், இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான வளர்ந்து வரும் தேவையைப் பூர்த்தி செய்ய தயாராகி வருகிறது.

இந்த நிறுவனம் தனது ஓசூர் ஆலையில் நடுத்தர மற்றும் பெரிய எலக்ட்ரிக் டிரக்குகள் உற்பத்தி செய்ய புதிய உற்பத்தி லைனை நிறுவுகிறது என்பது தான் தற்போதைய முக்கிய அப்டேட் ஆகும். அதன் மூலம் ஓசூர் அசோக் லேலண்ட் தொழிற்சாலையில் கூடுதல் வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்தில் அசோக் லேலண்ட், பில்லியன் எலக்ட்ரிக் மொபிலிட்டியிடமிருந்து 180 எலக்ட்ரிக் டிரக்குகளை டெலிவரி செய்யும் ஆர்டரை பெற்றது. இந்தியாவின் மிகப்பெரிய ஈ-டிரக் ஆர்டர் இது என்பதாலும், இதன் மூலம் கிடைக்கும் வர்த்தகம், இந்தியாவில் உருவாகும் வர்த்தகம் ஆகியவைற்றை பூர்த்தி செய்ய புதிய உற்பத்தி விரிவாக்கம் செய்யப்பட்டு உள்ளது.
அசோக் லேலண்ட் பல்வேறு நிறுவனங்களுடன் கூடுதல் ஆர்டர்களைப் பெறுவதற்கான பேச்சுவார்த்தைகளிலும் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதன் மூலம் இந்தியா பெரிய எலக்ட்ரிக் டிரக் வாகனங்களின் பயன்பாடும், வர்த்தகமும் அதிகரிக்கும் என்பது உறுதியாகியுள்ளது.
அசோக் லேலண்ட் நிறுவனம் ஏற்கனவே பில்லியன் எலக்ட்ரிக் மொபிலிட்டியிடமிருந்து 150 கோடி ரூபாய் மதிப்பிலான ஆர்டரில் இருந்து டிரக்குகளை டெலிவரி செய்வதை தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த ஆர்டரில் 135 BOSS எலக்ட்ரிக் இண்டர்மீடியேட் கமர்சியல் வாகனங்கள் (ICVs) மற்றும் 45 Avtr 55-டன் எலக்ட்ரிக் டிராக்டர்கள் உள்ளன.
அசோக் லேலண்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஆகிய ஷெனு அகர்வால் கூறுகையில், இது இந்தியாவில் எலக்ட்ரிக் டிரக்குகளுக்கான மிகப்பெரிய ஒற்றை ஆர்டர்களில் ஒன்றாக இருக்கலாம்.
7 முதல் 10 டன் வரையிலான சுமை திறன் கொண்ட BOSS டிரக்குகள் 200 கிலோமீட்டருக்கும் அதிகமான பயண ரேஞ்ச் வழங்குகின்றன. Avtr 55-டன் எலக்ட்ரிக் டிராக்டர்கள் 300-kWh பேட்டரி பேக் மற்றும் 220-kW மோட்டரால் இயக்கப்படுகின்றன.
எலக்ட்ரிக் டிரக் உற்பத்தியை ஆதரிக்க, அசோக் லேலண்ட் தனது ஓசூர் தொழிற்சாலையில் தனித்துவமான அசெம்பிளி லைனை நிறுவுகிறது. இந்த அசெம்பிளி லைனில் எலக்ட்ரிக் டிரக்-கள் மட்டும் அல்லாமல் மாற்று எரிபொருள் டிரக்குகளை உற்பத்தி செய்யவும் பயன்படுத்தப்படும்.
இந்த அசெம்பிளி லைன் இந்த நிதியாண்டின் இறுதியில் செயல்பாட்டில் இருக்கும் என்றும், ஆண்டுக்கு 5,000 வாகனங்கள் ஆரம்பத்தில் தயாரிக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அசோக் லேலண்டின் EV கிளையான சுவிட்ச் மொபிலிட்டி தற்போது ஓசூர் ஆலையில் சிறிய எலக்ட்ரிக் வணிக வாகனங்களை உற்பத்தி செய்கிறது. புதிய உற்பத்தி அசம்பிளி லைன் அசோக் லேலண்டின் இந்திய எலக்ட்ரிக் வாகன சந்தையில் தனது ஆதிக்கத்தை மேலும் வலுப்படுத்தும்.


Click it and Unblock the Notifications