அமெரிக்காவுக்கு சென்றுள்ள பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீர், புளோரிடாவில் உள்ள டாம்பாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் இந்தியாவுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எதிர்காலத்தில் இந்தியா உடனான போரில் பாகிஸ்தானுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் அணு ஆயுதங்களை பயன்படுத்த தயங்க மாட்டோம் என்று கூறியுள்ளார்.
மேலும், இந்தியாவின் மிக முக்கியமான பொருளாதார ஆதாரங்களில் ஒன்றான முகேஷ் அம்பானியின் ஜாம்நகரில் உள்ள ரிலையன்ஸ் இயந்திர எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை எங்களில் எதிர்கால இலக்காக மாறலாம் என்றும் எச்சரித்துள்ளார். மேலும், "இந்தியா சிந்து நதிகள் மீது அணை கட்டினால், அது கட்டப்பட்டும் வரை நாங்கள் காத்திருப்போம். இதனால் நீர்வரத்து பாதிக்கப்பட்டால், இந்தியாவின் உள்கட்டமைப்புகளை அழிப்போம்" என்று பேசியுள்ளார்.

அவர் மேலும் பேசுகையில், நாங்கள் ஒரு அணுசக்தி நாடு. போரில் நாங்கள் அழிகிறோம் என்ற நிலை வந்தால், உலகின் பாதியை அழித்துவிடுவோம் என்று கூட அவர் பேசியதாக சொல்லப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் மொபைல் போன்கள் மற்றும் டிஜிட்டல் சாதனங்கள் அனுமதிக்கப்படவில்லை. ஆனால், பலர் அந்த விவரங்களை ஊடகங்களுக்கு பகிர்ந்துள்ளனர்.
அசிம் முனீரின் இந்த கருத்துக்கள், பாகிஸ்தானில் ஜனநாயகம் இல்லை என்பதையும், அங்கு ராணுவம் தான் அனைத்தையும் கட்டுப்படுத்துகிறது என்பதையும் எடுத்துரைப்பதாக இருக்கிறது. பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீர், காஷ்மீருக்கு உரிமை கோருவதாகவும், அதனைத் தொடர்புடையதாகவும் பலமுறை பேசியுள்ளார். குறிப்பாக பஹல்காம் தாக்குதலுக்கு சில நாட்களுக்கு முன்பு அவர் இதேபோல ஒரு கருத்தை தெரிவித்திருந்தார். பின்னர் அதற்கேற்ப அந்த தாக்குதல் நடந்தது.
மத்திய அரசு அதிகாரிகள் இதுகுறித்து கூறுகையில், முனீர் முன்பே "இந்துக்களும் முஸ்லிம்களும் ஒன்றாக வாழ முடியாது" என்று சொல்லி இருந்ததாகவும், தற்போது மீண்டும் அதே கருத்தை முன்வைத்து இருப்பதாகவும் தெரிவித்தனர். இதை பயங்கரவாத நடவடிக்கைகள் நடைபெறுமாறு ஒரு எச்சரிக்கை எனவும், இதை எளிதாகப் புறக்கணிக்க முடியாது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், அமெரிக்காவின் ஆதரவால் பாகிஸ்தான் ராணுவம் அதிகமான தைரியம் பெறிவிட்டதாகவும், அடுத்தடுத்த காலங்களில் அங்கு அரசியல் நிலவரம் மாறி ராணுவம் நேரடியாக ஆட்சி நடத்தக்கூடும் என தெரிவித்துள்ளனர். குறிப்பாக, அசிம் முனீர் பாகிஸ்தான் தலைவர் பதவியை கைப்பற்ற வாய்ப்பும் இருக்கலாம் என்றும் கூறியுள்ளனர்.
முனீரின் பேச்சுக்கள் தெற்காசியாவில் அணு சக்தி சமநிலையை பாதிக்கும் விதமாக இருப்பதாகவும், அணு ஆயுதம் வைத்திருக்கும் நாடு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இல்லாமல் ராணுவ கட்டுப்பாட்டில் இருப்பது சிக்கலான நிலையை உருவாக்கும் எனவும் குறிப்பிட்டனர். அணு ஆயுதத்தைக் கையாளும் ராணுவம் இத்தகைய கருத்துக்களை வெளிப்படுத்துவது கவனிக்க வேண்டிய ஒன்று" என்று மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications