இந்தியாவில் மின்சார இருசக்கர வாகன விற்பனை பிரிவில் ஏத்தர் எனர்ஜி நிறுவனம் முன்னிலையில் இருக்கிறது. தமிழ்நாட்டின் ஓசூரில் தன்னுடைய வாகன உற்பத்தி ஆலையை நிறுவி இந்நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதனிடையே ஏத்தர் எனர்ஜி நிறுவனம் கூடிய விரைவில் மகாராஷ்டிராவிற்கு தன்னுடைய இருசக்கர வாகன உற்பத்தி பிரிவை இடமாற்றம் செய்ய இருப்பதாக ஒரு தகவல் பரவியது.
இதனை மறுத்து இருக்கும் ஏத்தர் எனர்ஜி நிறுவனம் நாங்கள் தமிழ்நாட்டை விட்டு குறிப்பாக ஓசூரை விட்டு எங்கும் செல்லப்போவதில்லை என உறுதிப்பட தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்துள்ள ஏத்தர் எனர்ஜி நிறுவனத்தின் இணை நிறுவனர் தருண் மேத்தா, தமிழ்நாட்டின் ஓசூர் பகுதியில் இருக்கக்கூடிய எங்களுடைய உற்பத்தி ஆலையை நாங்கள் எங்கும் மாற்றப் போவது கிடையாது எனக் கூறியிருக்கிறார்.

2021 ஆம் ஆண்டிலிருந்து ஏத்தர் நிறுவனத்தின் மின்சார இருசக்கர வாகன உற்பத்தி பயணத்தில் ஓசூர் ஆலை முக்கிய பங்கு வகிக்கிறது என அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.
எங்கள் நிறுவனத்தின் புதிய மாடல் இருசக்கர வாகனங்கள் அனைத்தும் இந்த ஆலையில் தான் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன ,இந்த இருசக்கர வாகனங்களுக்கு தேவையான பேட்டரிகளையும் நாங்கள் இங்குதான் உற்பத்தி செய்கிறோம் என அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.
இந்த ஆலையை நாங்கள் ஒருபோதும் விட்டு செல்ல மாட்டோம் என அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். தங்களுடைய ஆய்வு மற்றும் மேம்பாடு குழுவினர் மற்றும் பொறியியல் குழுவினர் எளிமையாக அணுகுவதற்கான ஒரு இடமாக ஓசூர் உற்பத்தி ஆலை இருக்கிறது என அவர் தெரிவித்துள்ளார்.
எங்கள் நிறுவனம் வளர வளர இந்த ஆலையின் உற்பத்தியும் அதிகரிக்கும் அதற்கேற்ற அளவு ஆயிரக்கணக்கில் வேலை வாய்ப்புகளும் உருவாகும் என அவர் கூறியிருக்கிறார். மகாராஷ்டிரா மாநிலத்தில் சத்ரபதி சம்பாஜி நகர் பகுதியில் உற்பத்தி ஆலையை நிறுவ இருக்கிறோம், எதிர்காலத்தில் நாங்கள் கொண்டு வர கூடிய புதிய தயாரிப்புகளை இங்கிருந்து தான் கொண்டு வர இருக்கிறோம் என கூறியிருக்கிறார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் அமையும் இந்த ஆலை எங்களுடைய அடுத்த கட்ட பயணத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது என தெரிவித்துள்ளார். ஓசூரில் இருந்து ஆலையை மகாராஷ்டிராவுக்கு மாற்றவில்லை என மீண்டும் ஒருமுறை கூறி இருக்கும் அவர் எங்களுடைய உற்பத்தி திறனைதான் நாங்கள் அதிகரித்திருக்கிறோம் என தெரிவித்துள்ளார். ஓசூர் ஆலை தொடர்ந்து செயல்படும் அதேவேளையில் மகாராஷ்டிராவிலும் புதிய உற்பத்தி ஆலை நிறுவுகிறோம் என்பதை அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
மகாராஷ்டிராவில் கட்டப்படும் இந்த புதிய உற்பத்தி ஆலை செயல்பாட்டுக்கு வந்து விட்டால் ஓசூர் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய இரண்டு ஆலைகளிலும் ஓர் ஆண்டுக்கு 10 லட்சம் மின்சார இருசக்கர வாகனங்கள் உற்பத்தி செய்யும் திறன் எங்களுக்கு கிடைத்த விடும் என தருண் மேத்தா கூறியிருக்கிறார்.


Click it and Unblock the Notifications