இந்தியா பாகிஸ்தான் இடையிலான போர் பதற்றம் அதிகரித்திருக்கும் நிலையில் சமூக வலைத்தளங்களில் பல்வேறு போலியான செய்திகள் வலம் வந்த வண்ணம் இருக்கின்றன. ஏடிஎம்கள் இயங்காது, பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடு என போலியான தகவல்கள் பரவும் நிலையில் மக்கள் அவற்றை நம்ப வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
அடுத்த இரண்டு மூன்று நாட்களுக்கு நாடு முழுவதும் ஏடிஎம்கள் இயங்காது என ஒரு தகவல் வாட்ஸ் அப் செயலி வாயிலாக பரவி வருகிறது. இந்நிலையில் இது ஒரு போலியான செய்தி என பிஐபி தெரிவித்துள்ளது. தன்னுடைய எக்ஸ் பக்கம் வாயிலாக இந்த செய்தியை பகிர்ந்துள்ள பிஐபி, சமூக வலைத்தளங்கள் வாயிலாக இந்தியாவில் அடுத்த இரண்டு மூன்று நாட்களுக்கு ஏடிஎம் இயந்திரங்கள் செயல்படாது என ஒரு போலியான ஒரு செய்தி பரவி வருகிறது. இது உண்மை கிடையாது, இது முற்றிலும் போலியானது. நாடு முழுவதும் வழக்கம் போல ஏடிஎம் இயந்திரங்கள் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் இது போன்ற சமூக ஊடகங்கள் வாயிலாக வரக்கூடிய எந்த ஒரு செய்தியையும் அதன் நம்பகத்தன்மையை அறியாமல் யாரிடமும் பகிர வேண்டாம் என பிஐபி சார்பாக கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறது. அரசாங்கம் சார்பாக அதிகாரப்பூர்வமாக வெளியிடக்கூடிய தகவல்களை மட்டுமே மக்கள் பகிர வேண்டும் என்று அவற்றை மட்டுமே நம்ப வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா பாகிஸ்தான் இடையிலான போர் பதற்றம் தொடர்பாக பல்வேறு தவறான செய்திகளும் தகவல்களும் வாட்ஸ் அப், பேஸ்புக் உள்ளிட்ட செயலிகள் வாயிலாக பகிரப்பட்டு வருகின்றன. இந்த சூழலில் தான் சமூக வலைத்தளங்கள் வாயிலாக படிக்கும் செய்திகளை நம்பகமான ஆதாரத்திலிருந்து வந்திருக்கிறது என்பதை கவனிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முன்னதாக போர் பதற்றம் காரணமாக பெட்ரோல், டீசல் உள்ளிட்டவற்றை மக்கள் வாங்கி குவிப்பதாக தகவல் வெளியானது. பெட்ரோல் நிலையங்கள் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதை போலவும் வீடியோக்கள் படங்கள் வெளியாகின. இந்த சூழலில் இந்துஸ்தான் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் நாடு முழுவதும் போதுமான அளவு பெட்ரோல் டீசல் மற்றும் எல்பிஜி எரிவாயுக்களின் கையிருப்பு இருக்கிறது எனவும் நாடு முழுவதும் பெட்ரோல் நிலையங்களும் எல்பிஜி நிலையங்களும் சீரான முறையில் செயல்பட்டு வருகிறது என்றும் கூறியுள்ளது.
மக்கள் பதற்றம் கொள்ள வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டிருக்கிறது. ஐஓசிஎல் தன்னுடைய சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் நாடு முழுவதும் போதுமான அளவு எண்ணெய் எரிபொருள் கையிருப்பு இருக்கிறது மக்கள் அச்சமடைய வேண்டாம். நம்முடைய நிலையங்கள் அனைத்தும் சீரான முறையில் செயல்பட்டு வருகின்றன. பதற்றம் காரணமாக யாரும் இவற்றை வாங்கி வைக்க வேண்டிய தேவை இல்லை என கூறியுள்ளது.


Click it and Unblock the Notifications