சென்னை: இந்தியாவில் கடந்த சில வருடங்களாக வெளிநாட்டு நிறுவனங்கள் தங்களுடைய குளோபல் கேபிலிட்டி சென்டர்கள் (GCC) அமைத்து வருகிறது. இந்தியாவில் அதிகப்படியான திறன் வாய்ந்த ஊழியர்கள் இருக்கும் காரணத்தால் வெளிநாட்டு நிறுவனங்கள் ஒப்பந்த அடிப்படையில் தனது தொழில்நுட்ப திட்டத்தை ஐடி சேவை நிறுவனங்களுக்கு அளிப்பதைக் காட்டிலும் சொந்தமாக அலுவலகத்தை அமைத்து டெக் சேவையை மேம்படுத்த முடிவு செய்துள்ளது.
இதனால் முக்கியமான தொழில்நுட்பத்தில் திறமையான ஊழியர்களுக்குத் தேவையும் அதிகரித்துள்ள மட்டும் அல்லாமல் சம்பளமும் தாறுமாறாக வழங்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் தற்போது டிசிஎஸ், இன்போசிஸ் போன்ற IT சேவை நிறுவனங்களை விட GCC நிறுவனங்கள் அதிக சம்பளம் வழங்குகின்றன என்று TeamLease Digital நிறுவனத்தின் ஆய்வறிக்கை கூறுகிறது.

GCC நிறுவனங்கள், IT சேவை நிறுவனங்களைக் காட்டிலும் அனைத்து மட்டத்திலும் முக்கிய தொழில்நுட்ப பணிகளுக்குக் குறைந்தது 12-20 சதவீதம் அதிக சம்பளம் வழங்குகின்றன.
உதாரணமாக சாஃப்ட்வேர் டெவலப்பர் பணிகளுக்கு GCC நிறுவனங்கள் ரூ. 9.7 லட்சம் ஆண்டு வருமானம் (LPA) வழங்குகின்றன. இது 8 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்டவர்களுக்கு ரூ. 43 லட்சம் வரை அதிகரிக்கிறது. அதே பணியிடத்தில் IT சேவைத் துறை ரூ. 5.7 லட்சம் மட்டுமே சம்பளமாக வழங்கப்படுகிறது இது எட்டு ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்துடன் இருப்பவர்களுக்கு அதிகப்படியாக ரூ. 17.9 லட்சம் அளிக்கப்படுகிறது.
இதேபோல் ஜிசிசி நிறுவனத்தில் அளிக்கப்படும் சம்பளம் அதிகமாக இருக்கும் இதேவேளையில் திறன் தேவையும் அதிகமாக உள்ளது. மேலும் டிசிஎஸ், இன்போசிஸ் போன்ற நிறுவனத்தில் வேலையில் சேர்வது போல் ஜிசிசி-யில் எளிதாக இருக்காது என்பது ஐடி ஊழியர்களின் கருத்து.
இந்தியாவில் தற்போது 1,600 GCC நிறுவனங்கள் ஏற்கனவே 16.6 லட்சத்திற்கும் அதிகமான ஐடி ஊழியர்கள் பணியில் உள்ளனர். அடுத்த ஐந்து-ஆறு ஆண்டுகளில் மேலும் 800 புதிய GCC நிறுவனங்கள் அமைக்கப்பட உள்ளன. இது இந்தியாவின் உலகளாவிய தொழில்நுட்ப மையமாகத் திகழும் திறனை அதிகரிக்கும்.
கோயம்புத்தூர், திருச்சி, கொல்கத்தா, அகமதாபாத், வடோதரா போன்ற இரண்டாம் நிலை நகரங்களிலும் ஜிசிசி-க்கள் வர துவங்கியுள்ளது. இந்த இடங்களில் வேலைவாய்ப்பை அதிகரிக்கும்.
ஜிசிசி-க்களில் தற்போது PyTorch, AWS, DevOps, NLP, Kubernetes, Hyperledger Fabric, Blockchain, Tableau, SQL மற்றும் ServiceNow போன்ற திறன்களுக்கான தேவை அதிகரித்து வருகின்றன.
2020 முதல் 2024 வரை, செயற்கை நுண்ணறிவு (AI), மெஷின் லேர்னிங் (ML), பிளாக்செயின் தொழில்நுட்பம், IoT, ரோபாட்டிக் செயல்முறை ஆட்டோமேஷன் (RPA), எட்ஜ் கம்ப்யூட்டிங் மற்றும் குவாண்டம் கம்ப்யூட்டிங் போன்ற தொழில்நுட்பங்களில் முன்னேற்றம் அடைந்தது. இதற்கு பைத்தான், R, டென்சார்ஃப்ளோ மற்றும் PyTorch போன்ற அடிப்படை கருவிகளாக உள்ளது.
2024 ஆம் நிதியாண்டில் இந்தியாவின் தொழில்நுட்ப சந்தையின் மதிப்பு 254 பில்லியன் டாலராக உள்ளது. இது ஆண்டுக்கு ஆண்டு 3.8% வளர்ச்சியையும் 56 லட்ச டெக் ஊழியர்களையும் கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications