இந்திய பார்மா துறை நிறுவன பங்குகள் புதன்கிழமை வர்த்தகத்தில் பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது. நிஃப்டி பார்மா குறியீடு 2%க்கும் அதிகமாக சரிந்தது. இந்த சரிவுக்கு முக்கிய காரணம், அரவிந்தோ பார்மாவின் பங்கு விலையில் ஏற்பட்ட கடும் சரிவு தான். அரவிந்தோ பார்மாவின் பங்கு விலை 9.5% வரை குறைந்து, ரூ. 1,053.45ஐ எட்டியது. பார்மா நிறுவன பங்குகளில் இதுவே அதிகபட்ச சரிவாக உள்ளது.
நிஃப்டி பார்மா குறியீடு 2 சதவீதம் சரிய முக்கிய காரணமாக இருப்பது டொனால்டு டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 25% வரி விதிக்கப்போவதாக அறிவித்தது மூலம் இந்திய பார்மா பங்குகள் சரிவு சந்தித்துள்ளது. அதிகப்படியான வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய பார்மா பங்குகளில் செய்துள்ள முதலீட்டை விற்றுள்ளனர்.

அமெரிக்க சந்தைக்கு அதிக அளவில் மருந்துகளை ஏற்றுமதி செய்யும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இந்த புதிய வரி விதிப்பால் செலவுகள் அதிகரிக்கும் மற்றும் வர்த்தக பாதிப்புகள் ஏற்படும் என்ற கவலை இந்திய மருந்து உற்பத்தியாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வரியின் காரணமாக அமெரிக்க சந்தையில் கிடைக்கும் வருவாய் குறையும்.
அரவிந்தோ பார்மா பங்குகளை தாண்டி டாக்டர் ரெட்டிஸ் லேபாரட்டரீஸின் பங்குகள் 5.8% குறைந்து ரூ. 1,128.90 ஆகவும், ஜைடஸ் லைஃப் சயின்ஸின் பங்குகள் 4.8% ஆகவும் குறைந்தன. இந்தியாவின் மிகப்பெரிய மருந்து தயாரிப்பாளரான சன் பார்மாவின் பங்குகள் 3.2% குறைந்து ரூ. 1,647.35 ஆக இருந்தது.
சன் பார்மா பங்குகள் பிஎஸ்இ சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி 50 பெஞ்ச்மார்க்கில் அதிக இழப்பை சந்தித்த பங்குகளின் பட்டியலில் ஒன்றாகும். லுபின், க்ளென்மார்க் பார்மா மற்றும் சிப்லா உள்ளிட்ட மற்ற முக்கிய மருந்து நிறுவனங்களும் இழப்பைச் சந்தித்தன. லுபின் 4% ஆகவும், க்ளென்மார்க் பார்மா 2.7% ஆகவும், சிப்லா 2.2% ஆகவும் குறைந்தன.
டொனால்டு டிரம்ப் சமீபத்தில் அறிவித்த ரெசிப்ரோக்கல் வரி விதிப்பு அச்சுறுத்தல், மருந்துகள் மட்டுமல்லாமல், வாகனங்கள் மற்றும் செமிகண்டக்டர் சிப்களையும் இலக்கு வைத்துள்ளது. இது உலகளாவிய வர்த்தக பதற்றத்தை அதிகரித்துள்ளது. இந்த வரிகள் அமல்படுத்தும் தேதி அறிவிக்கப்படவில்லை என்றாலும், ஏப்ரல் மாத துவக்கம் முதல் நடைமுறைக்கு வரலாம்.
தற்போது அமெரிக்காவில் பயன்படுத்தப்படும் ஜெனரிக் மருந்துகளில் கிட்டத்தட்ட 40% இந்தியாவிலிருந்துதான் வருகிறது. பார்மா துறையில் இருக்கும் நிறுவனங்கள் ஏற்கனவே இந்தியாவிலும், உலகளவிலும் மருந்து மீதான விலை நிர்ணயம் மற்றும் அதிகப்படியான ஒழுங்குமுறை கண்காணிப்பு ஆகியவற்றின் மூலம் பெரும் அச்சுறுத்தலை எதிர்கொண்டு வருகிறது. இந்த நிலையில் அமெரிக்க அரசின் 25 சதவீத வரி என்பது பெரிதும் கவலை அளிக்க கூடிய விஷயமாக உள்ளது.


Click it and Unblock the Notifications