இணையத்தில் தினமும் ஏதாவது ஒரு சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி வைரலாகி வருவது வாடிக்கையாகி உள்ளது. இருப்பினும் தற்போது வைரலாகி உள்ள ஒரு வீடியோ கொஞ்சம் தனித்துவமானது.
ஒரு ஆட்டோ டிரைவர் யுபிஐ பணப்பரிமாற்ற சேவையை பாராட்டி பேசியிருப்பது தான் அதற்கு முக்கிய காரணம். யுபிஐ எப்படி தனது வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தியது என்பது குறித்தும், யுபிஐ-ஆல் தனது வருமானம் எப்படி அதிகரித்துள்ளது என்பது குறித்தும் அந்த வீடியோவில் அவர் பேசியுள்ளார்.

கவுதம் கோவித்ரிகர் என்ற பல் மருத்துவர் ஆட்டோவில் பயணம் செய்துள்ளார். அப்போது அந்த ஆட்டோ டிரைவர் யுபிஐ பணபரிமாற்ற சேவையை வாழ்க்கையை மாற்றும் வசதி என்று புகழ்ந்து பேசியுள்ளார். இதனையடுத்து அவரிடம் யுபிஐ-ஐ புகழ்ந்து பேசியதற்கான காரணத்தை கவுதம் கோவித்ரிகர் கேட்டுள்ளார்.
அதற்கு ஆட்டோ டிரைவர் யுபிஐ-ஆல் தான் அடைந்த பலன்களை தெரிவித்துள்ளார். இதனை கவுதம் கோவித்கர் வீடியோவாக எடுத்தார். பின்பு பல் மருத்துவர் தனது எக்ஸ் கணக்கில், ஆட்டோ டிரைவர் மராத்தியில் யுபிஐ பணபரிமாற்ற சேவையை புகழ்ந்து பேசிய வீடியோவை பதிவேற்றம் செய்து இருந்தார்.
அந்த வீடியோவில் ஆட்டோ டிரைவர், எனது வங்கி கணக்கில் நிலையான இருப்பு உள்ளது. மாதாந்திர செலவுகளை முன்கூட்டியே திட்டமிட இது என்னை அனுமதிக்கிறது. முன்பு வருவாய் அனைத்தும் கையில் பணமாக இருந்தபோது, நான் அற்பமான சில செலவுகளை செய்வேன்.
இப்போது நான் பணத்தை சேமிக்கிறேன். UPI இருப்பதால் மக்கள் மற்றவர்களை காட்டிலும் என்னை அதிகமாக தேர்வு செய்வதால் எனது வருமானமும் அதிகரித்துள்ளது. யுபிஐ அறிமுகத்துக்கு பிறகு சில்லரை தொடர்பாக வாடிக்கையாளர்களுடன் எந்த சண்டையும் இல்லை என்று பேசியுள்ளார்.
கடந்த 20ம் தேதி இந்த வீடியோவை கவுதம் கோவித்ரிகர் ஷேர் செய்து இருந்தார். அன்று முதல் 2 லட்சத்துக்கும் அதிகமாக பார்க்கப்பட்டுள்ளது. ஆட்டோ டிரைவரின் கருத்தை பலரும் ஒப்புக் கொண்டுள்ளனர். மேலும் பல பயனர்கள் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.
கடந்த 4 வாரங்களாக என் பர்ஸில் பணம் இல்லை, யுபிஐ மூலம் எல்லாம் இடங்களிலும் பணம் செலுத்துகிறேன். சில பிச்சைக்காரர்களுக்கு பணம் கொடுக்க முடியாமல் போகும்போதுதான் மட்டுமே கொஞ்சம் கையில் பணம் எடுத்து செல்லாததற்காக வருத்தம் படுவேன் எனறு ஒருவர் தெரிவித்து இருந்தார்.
மற்றொருவர், நானும யுபிஐ-ன் பெரிய ரசிகன். நான் எப்போதும் பர்ஸை எடுத்து செல்ல வேண்டியது இல்லை. சில்லரை மாற்றுவது பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. இது பணம் செலுத்துவதை மிகவும் எளிதாக்கியுள்ளது என்று தெரிவித்துள்ளார். மேலும் ஒருவர் நேர்மையான மற்றும் வடிகட்டப்படாத கருத்து என்று தெரிவித்து இருந்தார்.


Click it and Unblock the Notifications