ஆன்லைன் ஆட்டோ டாக்சி சேவை தளமான ரேபிடோ (Rapido) செவ்வாய்க்கிழமை ஆட்டோ சேவைகளுக்கான மென்பொருள்-ஒரு-சேவை என்ற SaaS மாடலை அறிமுகப்படுத்தியது. Rapido பெயரை கேட்டாலே கொதிக்கும் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு இந்தத் திட்டம் கட்டாயம் பலன் அளிக்கும் எனத் தெரிகிறது.
Rapido தளம் கமிஷன் அடிப்படையிலான அக்ரிகேட்டர் மாடலில் இயங்கி வரும் வேளையில், இப்புதிய திட்டம் மூலம் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு வாழ்நாள் முழுவதும் ஜீரோ கமிஷன் கட்டமைப்பை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு SAAS மாடலை அறிமுகம் செய்துள்ளது.

Rapido நிறுவனத்தின் இணை நிறுவனரான பவன் குண்டுபள்ளி இப்புதிய SAAS மாடல் குறித்துப் பேசுகையில், Rapido பிளாட்பாரம் ஆட்டோ ஓட்டுநர்களிடம் இருந்து தினசரி உள்நுழைவு கட்டணமாக (login fee) ரூ.9 முதல் ரூ.29 வரையிலான தொகை வசூலிக்கப்படும்.
அதற்கு ஆட்டோ ஓட்டுநர்கள் எந்தவொரு கமிஷனும் செலுத்தாமல், டிமாண்டின் அடிப்படையில் தினமும் வரம்பற்ற சவாரிகளைப் பெறுவார்கள். தற்போது ஒவ்வொரு சவாரிக்கும் Rapido கமிஷன் பெறும் வேளையில், இனி கமிஷன் இல்லாமல் சவாரிகளை வழங்கும்.
ரேபிடோ தற்போது தினமும் 5 லட்சம் ஆட்டோ சவாரிகளைச் செய்கிறது, SaaS மாடலின் அறிமுகத்துடன் இத்தளத்தில் இல்லாத ஆஃப்லைன் ஆட்டோ ஓட்டுநர்களையும் அதன் பிளாட்ஃபார்மில் எளிதாக இணைக்கும் ஒரு கட்டமைப்பை கொண்டு வந்துள்ளது Rapido.
மேலும் Rapido இணை நிறுவனர் பவன் குண்டுபள்ளி கூறுகையில், நாடு முழுவதும் தினமும் கிட்டத்தட்ட இரண்டு கோடி ஆட்டோ சவாரிகள் நடக்கின்றன. ஆனால் நாட்டின் மொத்த ஆன்லைன் ஆட்டோ சவாரிகளின் எண்ணிக்கை வெறும் 20 லட்சத்திற்கும் குறைவு. இது 10 சதவீத்திற்கும் குறைவாக உள்ளது, இதனால் இப்பிரிவில் அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது எனக் கூறினார்.
டிசம்பர் மாதம் ராபிடோ SaaS அடிப்படையிலான தனது டாக்ஸி சேவையை டெல்லி, பெங்களூரு மற்றும் ஹைதராபாத் ஆகிய மூன்று நகரங்களில் அறிமுகப்படுத்தி அதன் சலுகைகளை விரிவுபடுத்தியது. இப்போது ரேபிடோ சேவைகள் 35 க்கும் மேற்பட்ட நகரங்களில் உள்ளது.
Rapido மூன்று சக்கர வாகனப் பிரிவில், Uber, Ola மற்றும் ONDC-தளத்தில் இயங்கும் நம்ம யாத்ரி ஆகியவற்றுடன் போட்டிப்போட்டு வருகிறது. இரு சக்கர வாகன பிரிவில், சில நகரங்களில் Ola மற்றும் Uber உடன் போட்டியிடுகிறது.
நம்ம யாத்ரி அதேபோன்ற ஜீரோ கமிஷன் சேவைகளை ஜனவரி 16 அன்று டெல்லியில் அறிமுகப்படுத்தியது. 2020ல் அறிமுகமான இந்நிறுவன சேவைகள் கொச்சியில் தொடங்கப்பட்டு பெங்களூரு, கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் உட்பட ஏழு நகரங்களில் இப்போது இயங்கி வருகிறது.


Click it and Unblock the Notifications