டிசம்பர் 2019-ல், "அடுத்த வருடம் பாருங்கள், ஒரு வைரஸ் வரும். அந்த வைரஸுக்கு பயந்து ஒட்டு மொத்த உலகமும், தன் வழக்கமான செயல்பாடுகளை குறைத்துக் கொள்ளும்.
வியாபாரங்கள் எல்லாம் படு பாதாளத்துக்குப் போகும், கம்பெனிகள் எல்லாம் பொருளை விற்பனை செய்ய முடியாமல் முழிப்பார்கள்..." எனச் சொல்லி இருந்தால், யார் இது சுத்தப் பைத்தியக் காரத்தனமாக பேசுகிறானே எனச் சொல்லி இருப்பார்கள்.
ஆனால் இப்போது உலகம் அப்படித் தான் இயங்கிக் கொண்டு இருக்கிறது. உண்மையாகவே வியாபாரங்கள் படு பாதாளத்தில் தான் இருக்கிறது.
ஆட்டோமொபைல்
இந்த கொரோனா வைரஸ் உலகத்தை ஆட் கொள்வதற்கு முன்பே, இந்தியாவில், ஆட்டோமொபைல் சந்தை மண்ணை கவ்விக் கொண்டு இருந்தது நினைவிருக்கலாம். கடந்த 2019-ம் ஆண்டில் இருந்தே மாருதி சுசூகி போன்ற பெரிய கம்பெனிகளே பயங்கரமாக விற்பனைச் சரிவைச் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
காரணங்கள்
பாரத் ஸ்டேஜ் 4-ல் இருந்து பாரத் ஸ்டேஜ் 6 ரக எமிஷன் கட்டுப்பாடுகளுக்கு மாறியது, பெட்ரோல் டீசல் விலை ஏற்றம், இன்சூரன்ஸ் பிரீயம் அதிகரித்தது, எலெக்ட்ரிக் வாகனங்கள் தொடர்பாக மத்திய அரசிடம் இருந்து ஒரு தெளிவான கருத்து அல்லது வழிகாட்டுதல் வராமல் இருந்தது என பல காரணங்களைச் சொல்லலாம்.
கொரோனா
இப்போது, ஒட்டு மொத்த உலகத்தையும் கொரோனா வைரஸ் பிடித்து பேயாட்டம் ஆடிக் கொண்டு இருக்கிறது. இதனால், உலகம் முழுக்க ஆட்டோமொபைல் வாகன உற்பத்தியே தேங்கத் தொடங்கி இருக்கிறது. அதே போல இன்னொரு பக்கம், மக்கள் தங்கள் அன்றாட செலவுகளைச் செய்து கொள்ள பணத்தை சேமித்து வைக்கத் தொடங்கி இருக்கிறார்கள்.
ரெசசன்
சேமித்து வைப்பதைக் கூட ஒரு பக்கம் வைத்துவிடுங்கள். இன்று பார்த்துக் கொண்டிருக்கும் வேலை, இந்த கொரோனா வைரஸ் ஷட் டவுனுக்குப் பின் இருக்குமா..? என்கிற கேள்வியே பலருக்கு எழுந்து இருக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இது போக கோடிக் கணக்கான பேர் தங்கள் வேலையை இழக்கலாம் என சர்வதேச தொழிலாளர் அமைப்பு (International Labor Organization) வேறு சொல்லி இருக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
விற்பனை சரிவு
இப்படி பல காரணங்கள் ஒன்று சேர்ந்து, பல ஆட்டோமொபைல் கம்பெனிகளின் விற்பனையை தரை தட்ட வைத்து இருக்கிறது. அதில் முதல் மற்றும் பலமான அடி வணிக வாகனங்களுக்குத் தான் விழுந்து இருக்கிறது. அசோக் லேலண்டின் மார்ச் 2020 விற்பனை, கடந்த மார்ச் 2019 விற்பனை உடன் ஒப்பிட்டால் சுமார் 90 % விற்பனை சரிந்து இருக்கிறது.
எண்ணிக்கை
அதாவது அசோக் லேலண்ட் நிறுவனம் கடந்த மார்ச் 2019-ல் 21,535 வாகனங்களை விற்றது. ஆனால் இந்த மார்ச் 2020-ல் வெறும் 2,179 வாகனங்களைத் தான் விற்று இருக்கிறார்களாம்.
உள்நாட்டு விற்பனை மார்ச் 2019-ல் 20,521 ஆக இருந்தது. இந்த மார்ச் 2020-ல் 1,787 ஆக சரிந்து இருக்கிறது. இது 91 % சரிவு.
வாகனங்கள் ரகம்
மீடியம் & ஹெவி வணிக வாகனங்களில் உள்நாட்டு விற்பனை மார்ச் 2019-ல் 15,235 ஆக இருந்தது, இந்த மார்ச் 2020-ல் 1,498 ஆக சரிந்து இருக்கிறது. இது 90% சரிவு.
அதே போல லைட் வணிக வாகனங்களை எடுத்துக் கொண்டால் மார்ச் 2019-ல் 5,286 ஆக இருந்த விற்பனை இந்த மார்ச் 2019-ல் வெறும் 289 வாகனங்கள் தான் விற்று இருக்கிறார்களாம். இது 95 % சரிவு.
மாருதி சுசூகி இந்தியா
இந்தியாவின் மிகப் பெரிய கார் கம்பெனியான மாருதி சுசூகி இந்தியா, கடந்த மார்ச் 2019-ல் 1,58,076 வாகனங்களை விற்றார்களாம். ஆனால் இந்த மார்ச் 2020-ல் வெறும் 83,792 வாகனங்களைத் தான் விற்று இருக்கிறார்களாம். ஆக சுமார் 47 சதவிகிதம் விற்பனை சரிந்து இருக்கிறது.


Click it and Unblock the Notifications