சென்னை: இந்தியாவின் 13 நகரங்களில் வீட்டு வாடகைகளின் மதிப்பு 7.4 சதவீதம் உயர்ந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேஜிக் பிரிக்ஸ் நிறுவனம் சார்பாக இந்தியாவின் 13 முக்கிய நகரங்களில் ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் வீட்டு வாடகைகளின் நிலவரம் குறித்த முக்கியமான ஒரு அறிக்கை வெளியாகி உள்ளது. இதில் சராசரியாக அனைத்து நகரங்களிலும் 7.4 சதவீதம் என்ற அளவில் வீட்டு வாடகை மதிப்பு உயர்ந்திருப்பது தெரியவந்துள்ளது. இதுவே கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்துடன் ஒப்பிட்டால் 17 . 1 சதவீதம் அதிகம் என்கிறது மேஜிக் பிரிக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை.
கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவு வீட்டு வாடகைகளின் மதிப்பு உயர்ந்துள்ளது என இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. இதில் சென்னை தான் முதலிடத்தில் இருக்கிறதாம். ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில் சென்னையில் வீட்டு வாடகை மதிப்பு சராசரியாக 22.2 சதவீதம் உயர்ந்துள்ளதாம். டெல்லியில் 11.4 சதவீதம், தானேவில் 10.9 சதவீதம், நவி மும்பையில் 9.9 சதவீதம், ஹைதராபாத்தில் 9.8 சதவீதம் என வீட்டு வாடகை மதிப்பு உயர்ந்துள்ளது.

சென்னை, பெங்களூரு, டெல்லி, தானே, மும்பை ஆகிய பகுதிகளில் வேலை வாய்ப்புகள் அதிகரித்து பலரும் அங்கே வருகை தருவதால் வாடகை வீடுகளின் தேவை உயர்ந்துள்ளது, இதுவே வீட்டு வாடகை மதிப்பு அதிகரிப்பதற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் கடந்த ஆண்டு இதே ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்துடன் ஒப்பிடும்போது நடப்பு ஆண்டில் 37.4 சதவீதம் என வீட்டு வாடகை மதிப்பு உயர்ந்துள்ளது. இதுவே பெங்களூருவில் 22.9 சதவீதம் என உயர்வு கண்டுள்ளது.
பல்வேறு நிறுவனங்களும் கொரோனா பெருந்தொற்று காலத்தின் போது ஊழியர்களை வீட்டில் இருந்து பணிபுரிய அனுமதி தந்தன . ஆனால் தற்போது வீட்டிலிருந்து வேலை செய்வது மற்றும் ஹைபிரிட் மாடல்களுக்கு நிறுவனங்கள் முற்றுப்புள்ளி வைத்து வருகின்றன. இதனால் ஊழியர்கள் கட்டாயம் அலுவலகத்தில் சென்று வேலை செய்ய வேண்டிய நிலைக்கு ஆளாகியுள்ளனர். எனவே அவர்கள் தங்களுடைய சொந்த ஊர்களில் இருந்து நகரங்களுக்கு மீண்டும் இடம்பெயர தொடங்கியுள்ளனர்.
இதன் காரணமாகவே வீட்டு வாடகைகளில் தேவை அதிகரித்து இருப்பதாக மேஜிக் பிரிக்ஸ் நிறுவனம் கூறுகிறது. கடந்த ஆண்டு பெங்களூர் போன்ற ஒரு நகரில் சராசரியாக இரண்டு படுக்கை அறை கொண்ட ஒரு வீட்டின் வாடகை 35 ஆயிரம் ரூபாயாக இருந்து நடப்பு ஆண்டில் அது 45 ஆயிரம் ரூபாய் என உயர்ந்திருக்கிறது என ரியல் எஸ்டேட் துறை சார்ந்த நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. டிமாண்ட் , சப்ளை இடையிலான இடைவெளி நீங்கிவிட்டால் இந்த நிலை மாறும் என்கின்றனர்.
Written by: Devika


Click it and Unblock the Notifications