இந்திய மக்களை மட்டும் அல்லாமல் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்த ராமர் கோயில் திறப்பு பல கணிப்புகளையும், சந்தை ஆய்வுகளையும் உருவாக்க வழிவகுத்துள்ளது. இதில் முக்கியமான ஒரு ஆய்வில் அயோத்தி கோயில் மூலம் உத்திர பிரதேச மாநிலத்தின் பொருளாதாரம் 4 லட்சம் கோடி வரையில் உயரும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது.
மேலும் இந்தியாவில் இருக்கும் மக்கள் அயோத்திக்கு எப்படி, எப்போது போகலாம் எனத் திட்டமிட்டு வரும் வேளையில்.. அயோத்திக்குச் சென்றதால் ஒரு புதுமணத் தம்பதி விவாகரத்து வேண்டும் என நிற்கின்றனர்.

கோவாவில் தேனிலவுக்குச் செல்வதாக உறுதியளித்த கணவன் அயோத்தி மற்றும் வாரணாசிக்கு அழைத்துச் சென்றுள்ளார் எனக் குற்றம்சாட்டி, போபால் பெண் ஒருவர் தனது கணவரிடமிருந்து விவாகரத்துக் கோரியுள்ளார்.
இந்த வழக்கு வெள்ளிக்கிழமை போபால் குடும்ப நீதிமன்றத்தை அடைந்தது என ஃப்ரீ பிரஸ் ஜர்னலில் தெரிவித்துள்ளது. இந்தத் தம்பதியினர் இந்து புனித யாத்திரை தலங்களுக்குத் தங்களின் பயணத்தை முடித்து வீடு திரும்பிய 10 நாட்களுக்குப் பிறகு வழக்குப் பதிவாகியுள்ளதாகத் தெரிகிறது.
அந்தப் பெண் விவாகரத்து மனுவில், தனது கணவர் ஐடி துறையில் வேலை செய்து நன்றாகச் சம்பாதிப்பதாகக் கூறியுள்ளார். தானும் நல்ல சம்பளத்தில் வேலை செய்து வருகிறேன். இதனால் தேனிலவுக்கு வெளிநாடு செல்வது அவர்களுக்குப் பெரிய விஷயமாக இல்லை.
ஆயினும் தனது கணவர் தனது பெற்றோரைக் கவனிக்க வேண்டும் என்று கூறி தேனிலவுக்கு வெளிநாடு செல்ல மறுத்துவிட்டதாக அந்தப் பெண் தனது மனுவில் கூறுகிறார். வெளிநாட்டுத் திட்டத்திற்கு மாறாக, இந்தியாவில் உள்ள ஒரு இடத்தைப் பார்க்க வேண்டும் என்றார்.
கோவா மற்றும் தென்னிந்தியாவில் சில இடங்களுக்குச் செல்ல மனைவி ஒப்புக்கொண்டார். இருப்பினும், கணவர் தன்னிடம் எவ்விதமான முன்னறிவிப்பும் செய்யாமல் அயோத்தி மற்றும் வாரணாசிக்கு விமான டிக்கெட்டுகளைப் பதிவு செய்துள்ளார்.
இவர்களின் பயணத்திற்கு ஒரு நாள் முன்பு, ஜனவரி 22 ஆம் தேதி நடந்த ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவிற்கு முன்னதாகத் தனது தாயார் அயோத்தி நகருக்குச் செல்ல விரும்புவதால், அனைவரும் அயோத்திக்குச் செல்வதாக அவர் அவளிடம் கூறினார். அந்தப் பெண் அப்போது குறை கூறாமல் பயணத்தைத் தொடர்ந்தார்.
பயணம் முடித்துத் திரும்பிய அந்தப் பெண் தனது கணவரிடமிருந்து விவாகரத்து கோரி குடும்பநல நீதிமன்றத்தை அணுகினார். தன்னை விடத் தனது கணவர் தனது குடும்ப உறுப்பினர்களை அதிகம் கவனித்துக் கொள்வதாகவும் அவர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications