அயோத்தி: ராமர் கோயில் திறக்கப்பட்டது பிறகு பொருளாதார நடவடிக்கைகள் அதிகரித்து உத்தரப்பிரதேச மாநிலத்தின் மொத்த ஜிடிபி - யை மாற்றியமைக்கும் மையமாக அயோத்தி உருவாகி வருவது தெரிய வந்துள்ளது.
கடந்த ஜனவரி 22ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அயோத்தியில் ராமர் கோயிலை திறந்து வைத்தார். கோயில் திறக்கப்பட்ட இந்த இரண்டு மாத காலத்தில் அங்கு பொருளாதார நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன.

ராமர் கோயில் திறக்கப்பட்ட பிறகு தினமும் சுமார் 2 லட்சம் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அயோத்திக்கு வருகை தந்த வண்ணம் உள்ளனர். இதன் காரணமாக அயோத்தியின் பொருளாதாரம் வளர்ச்சி அடைந்துள்ளது. குறிப்பாக தனிநபர் வருமானம் அதிகரிக்க வழி வகுத்திருக்கிறது என்கின்றனர் உள்ளூர் மக்கள்.
ஹோட்டல்களில் தங்குவது,கடைகளில் ஷாப்பிங் செய்வது, கோயில்களுக்கு செல்வது, ராமர் கோயில் நினைவாக பொருட்களை வாங்குவது ஆகியவை காரணமாக எப்போதும் மக்கள் கூட்டம் நிறைந்திருக்கும் நகரமாக அயோத்தி மாறி இருக்கிறது.
குறிப்பாக பூ விற்பனை செய்பவர்கள், சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் வழிகாட்டிகள், ஹோட்டல் வைத்திருப்பவர்கள் ஆகியோரின் வருமானம் மூன்று முதல் நான்கு மடங்கு வரை வளர்ச்சி அடைந்துள்ளது.
சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் ஹோட்டல்கள், விருந்தினர் மாளிகைகள் மற்றும் தங்கும் இடங்கள் நான்கு மடங்கு அதிகரித்துள்ளன. இதனால் அயோதியின் பொருளாதாரம் உயர்ந்துள்ளது.
உதாரணமாக ராமாயண ஹோட்டலின் சூர்யா திரிபாதி கூறுகையில், ராமர் கோவில் திறக்கப்பட்டதிலிருந்து அறைகளுக்கான தேவை தொடர்ந்த அதிகரித்து வருகிறது 7000 ரூபாய் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரை சொகுசு அறைகள் கிடைக்கின்றன என்கிறார். கோயிலுக்கு அருகிலேயே 150கும் மேற்பட்ட புதிய ஹோட்டல்கள் மற்றும் தங்கும் விடுதிகள் நிறுவப்பட்டுள்ளதாகவும் கூறுகிறார்.
மேலும் சந்தைகளில் விற்கப்படும் அலங்காரப் பொருட்கள், ராமர் சிலைகள் , நினைவுப்பொருட்கள் ஆகியவற்றின் விற்பனை கணிசமாக அதிகரித்துள்ளது உள்ளூர் வருமானம் மற்றும் வேலை வாய்ப்புகள் உயர்ந்துள்ளன. தனது தினசரி வருமானம் 400 முதல் 500 ரூபாயாக இருந்த நிலையில் தற்போது 2500 ரூபாய் வரை அதிகரித்துள்ளது என அங்கே வியாபாரம் செய்து வரும் ராம்குமார் என்பவர் தெரிவித்துள்ளார்.
தொழிலாளர்கள் கூட்டமைப்பின் தலைவரான சுஷில் ஜெய்ஸ்வால் இந்தியா டுடே விற்கு அளித்த பேட்டியில் ராமர் கோவில் திறக்கப்பட்ட பிறகு சர்வதேச கவனம் திரும்பி இருப்பதால் இங்கு பொருளாதார நடவடிக்கைகள் அதிகரித்து விட்டன குறிப்பாக சொத்துக்களின் மதிப்பு ஐந்து முதல் ஏழு மடங்கு வரை உயர்ந்துள்ளதாக கூறியுள்ளார்.
Story written by: devika


Click it and Unblock the Notifications