அயோத்தியில் புதிய ராமர் கோயில் திறப்பு விழா நெருங்கி வரும் நிலையில் அந்தப் புனித நகரில் தங்குவதற்கான ஹோட்டல் ரூம் புக்கிங்குகள் திடீரென 70 சதவீதம் அதிகரித்துள்ளது.
இந்தியாவின் சுற்றுலாத்துறை மிகப் பெரிய மாற்றத்தையும் வளர்ச்சியையும் சந்தித்து வருகிறது. ஓயோ ஆப் யூசர்களில் பெரும்பான்மையானவர்கள் புனித தலங்களைச் சுற்றிப் பார்க்க ஆசைப்படுவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. வழக்கமான பீச், ஹில் ஸ்டேஷன்களை விட இப்போது புனித யாத்திரைதான் முக்கிய சுற்றுலாவாக விளங்குகிறது.

அயோத்தியில் புதிய ராமர் கோயில் ஜனவரி 22 ஆம் தேதியன்று பிரதமர் நரேந்திர மோடியால் திறந்து வைக்கப்படுகிறது. இந்த நிலையில் அயோத்தியில் ஹோட்டல் ரூம் புக்கிங் 70 சதவீதம் அதிகரித்துள்ளது. அதேவேளையில் கோவா 50 சதவீதமும் நைனிடால் 60 சதவீதமும் ஹோட்டல் மற்றும் ரிசார்ட்டுகள் புக்கிங்கில் முன்னிலையில் உள்ளன.
இது பற்றி ஓயோ நிறுவனர் ரிதேஷ் அகர்வால் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: சுற்றுலா பயணிகளின் விருப்பங்கள் ஆச்சரியப்படத் தக்க வகையில் மாறியுள்ளது. வழக்கமாக கோடை வாசஸ்தலங்கள், மலை வாசஸ்தலங்கள், பீச்களுக்குத்தான் சுற்றுலாப் பயணிகள் படையெடுப்பர். ஆனால் இப்போது புனித தலங்களுக்குச் செல்வதற்கு மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர்.
இந்திய சுற்றுலாத் துறையில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் புனித தலங்கள் மற்றும் புனித யாத்திரைகள் டூர் பேக்கேஜுக்கு மிக அதிகமான தேவை இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார். அயோத்தியில் புதிய ராமர் கோயில் திறக்கப்படவுள்ளநிலையில் இதுவரை இல்லாத அளவுக்கு அயோத்தியில் ஹோட்டல் ரூம்களுக்கு டிமாண்ட் ஏற்பட்டுள்ளது.
கோயில் திறப்பு விழாவை முன்னிட்டு ஜனவரி 16 முதலே ஆகம பூஜைகள் உள்ளிட்ட சம்பிரதாயங்கள் தொடங்குகின்றன. இதனால் இப்போதே ஹோட்டல்களில் ரூம் பிடிப்பதற்கு பெரும் போட்டி ஏற்பட்டுள்ளது. அயோத்தியில் புதிதாகக் கட்டப்பட்ட மகரிஷி வால்மீகி சர்வதேச விமானநிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமையன்று திறந்து வைத்தார்.
கிட்டத்தட்ட ரூ.15,000 கோடி செலவில் இந்த விமான நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல் ஏகப்பட்ட செலவில் அயோத்தி ரயில் நிலையம் புத்தம் புது மெருகுடன் சீரமைக்கப்பட்டுள்ளது. அதையும் பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
டெல்லி, தர்பங்கா நகரங்களை அயோத்தியுடன் இணைக்கும் வந்தே பாரத் மற்றும் அமிர்த பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களை கொடியசைத்து பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். அயோத்தியில் திறக்கப்படவுள்ள புதிய ராமர் கோயில் உள்ளூர் மற்றும் வெளியூர், வெளிநாட்டு பக்தர்களிடையே பெரும் ஆவலையும் பரவசத்தையும் ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications