உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுவரும் புதிய ராமர் கோயில் முடியும் தருவாயில் இருக்கிறது. இந்த நிலையில் அயோத்தி நகரில் ஏராளமான வசதிகளை மத்தியில் ஆளும் பிரதமர் நரேந்திர மோடியின் அரசும், உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் அரசும் அமைத்து வருகின்றன.
வரலாற்றுச் சிறப்பு மிக்க அயோத்தி நகரில் பாரம்பரிய கலாசாரத்துடன் நவநாகரிக வசதிகளும் இருக்க வேண்டும் என இரு அரசுகளும் உறுதி பூண்டுள்ளன. பொதுமக்கள் போக்குவரத்தை அதிகரிப்பதற்காக புதிய விமான நிலையம் அமைக்கப்படுகிறது. அத்துடன் சரயு நதியில் புதுமையான நீர்வழி மெட்ரோவையும் உத்தரப் பிரதேச அரசு அமைத்து வருகிறது.

டிசம்பர் 25 ஆம் தேதியன்று சரயு நதி மெட்ரோவும், டிசம்பர் 30 ஆம் தேதியன்று புதிய விமான நிலையமும் திறக்கப்படவுள்ளன. இதற்கு முன்னர் கேரள மாநிலத்தின் கொச்சியில் நாட்டின் முதல் நீர்வழி மெட்ரோவை பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு ஏப்ரலில் தொடங்கி வைத்தார். சரயு நதி மெட்ரோவில் சூரிய ஒளியில் செயல்படும் அதிநவீன வசதிகள் கொண்ட அலங்காரப் படகுகள் இயக்கப்பட உள்ளன. இதில் ஒரேநேரத்தில் 50 பேர் பயணிக்கலாம்.
சாலைகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைப்பதோடு இந்த நீர்வழி மெட்ரோ பயண நேரத்தையும் கணிசமாக குறைக்கும். சரயு நதியில் உள்ள குப்தார் படித்துறை, ராம்கி பைடி ஆகிய இடங்களுக்கு இடையே மெட்ரோ இயக்கப்படுகிறது. இதன் மூலம் அயோத்தியில் ஆன்மிக சுற்றுலா நடைபெறும்.
2024 ஜனவரி 22ஆம் தேதியன்று புதிய ராமர் கோயில் திறக்கப்படும் சூழ்நிலையில் அனைத்து ஏற்பாடுகளும் துரிதமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சரயு நதி நீர்வழி மெட்ரோவை பிரதமர் நரேந்திர மோடி ஜனவரி 22 ஆம் தேதியன்று தொடங்கி வைப்பார் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.
சரயு மெட்ரோவுக்கு மக்களிடையே இருந்து வரும் வரவேற்புக்கு ஏற்ப கூடுதலாக வசதிகள் அடங்கிய படகுகள் பின்னர் செய்யப்படும் எனத் தெரிகிறது. ஆறுகள் அல்லது கடல்கள் போன்ற நீர்வழிகளைப் பயன்படுத்தி நகர்ப்புற அல்லது கடலோரப் பகுதிகளில் மாற்றுவழி போக்குவரத்து மாடலாக நீர் மெட்ரோக்கள் கருதப்படுகின்றன.
பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட நவீன படகுகள், ஒரு நகரத்துக்குள் அல்லது வெவ்வேறு பகுதிகளுக்கு இடையே இரண்டு அல்லது பல புள்ளிகளை இந்த மெட்ரோக்கள் இணைக்கும்., நீர்நிலைகள் வழியாக பயணிகளை கொண்டு செல்ல பயன்படும். வாட்டர் மெட்ரோவின் நோக்கம் சாலைகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பது மட்டுமல்லாமல் பயண நேரத்தைக் குறைப்பதும் ஆகும். நீர்நிலைகளால் பிரிக்கப்பட்ட இரண்டு வெவ்வேறு இடங்களை இணைக்கவும் இது உதவுகிறது.


Click it and Unblock the Notifications