உத்தர பிரதேசம் மாநிலம் பிரயாக்ராஜ் மாவட்டத்தில் அயோத்தியில் ராம்ஜென்ம பூமியில் ராமர் கோயில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. 2020 ஆகஸ்ட் 5ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி ராமர் கோயில் கட்டுமான பணியை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
அது முதல் ராமர் கோயில் கட்டுமான பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 2024 ஜனவரி 22ம் தேதியன்று ராமர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ராமர் கோயில் கட்டுமானத்தின் இறுதி கட்ட பணிகள் இம்மாதம் 31ம் தேதிக்குள் முடிக்கும் வகையில் பணிகள் இரவு பகலாக நடைபெற்று வருகிறது.

ஜனவரி 22ம் தேதி நடைபெறவுள்ள ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவில் பிரதமர் மோடி, ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் மற்றும் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கலந்து கொள்வர். மேலும், ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த சேக்ஷத்ரா அறக்கட்டளையால் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க வருமாறு 8,000 பிரமுகர்களுக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது.
இதில், கிட்டத்தட்ட 6,000 பேர் நாடு முழுவதிலுமிருந்து ஜீயர்கள், மடாதிபதிகள் போன்ற ஆன்மீக பெரியவர்களாக இருப்பர். எஞ்சிய 2,000 பேர் அனைத்து தரப்புகளை சேர்ந்த வி.வி.ஐ.பி.க்களாக இருப்பர் என்று விஷ்வ இந்து பரிஷத்தின் மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்தார்.
தொழிலதிபர்கள் கவுதம் அதானி, முகேஷ் அம்பானி, ரத்தன் டாடா, நடிகர்களில் அமிதாப் பச்சன் மற்றும் அக்சய் குமார், கிரிக்கெட் வீரர்களில் சச்சின் டெண்டுல்கர் மற்றும் விராட் கோலி உள்ளிட்டோருக்கு ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த சேக்ஷத்ரா அழைப்பிதழ் கொடுத்துள்ளது.
1990ல் இருவேறு போலீஸ் துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் உயிரிழந்த 50 கரசேவகர்களின் குடும்பத்தினரும் விழாவுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். அவர்களை அழைத்து வருவது, உணவு மற்றும் தங்குமிடத்தை ஏற்பாடு செய்யும் பொறுப்பை விஎச்பி மேற்கொள்ளும்.
கோயிலுக்கு உயிரை கொடுத்த கரசேவகர்களின் தியாகத்தை எப்படி மறக்க முடியும்? ராமர் பிரதிஷ்டை விழாவில் பங்கேற்க அவர்களின் குடும்பத்தை நாங்கள் அழைத்துள்ளோம். விஎச்பி தொண்டர் தெரிவித்தார்.
ராமர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெறும் போது, இந்தியா முழுவதும் உள்ள மக்கள் தங்கள் அருகிலுள்ள கோயிலுக்கு சென்று பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். இதன் மூலம் அவர்கள் ராமர் சிலை பிரதிஷ்டை விழாவில் கலந்து கொள்வார்கள். இந்த செய்தியை விஎச்பி தொண்டர்கள் நாடு முழுவதும் மக்களிடம் கொண்டு சேர்ப்பார்கள்.
கும்பாபிஷேக விழாவை அரசு ஒளிபரப்பான தூர்தர்ஷன் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது. விழாவுக்கு முந்தைய நாளில் அழைப்பு விடுக்கப்பட்டவர்களுக்கு ஒரு இணைப்பு ஷேர் செய்யப்படும். அந்த லிங்கை பயன்படுத்தி அவர்கள் பதிவு செய்ததும் ஒரு பார் குறியீடு உருவாக்கப்படும், அது அவர்களின் என்ட்ரி பாஸாக செயல்படும் என்று விஎச்பி தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications