நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஜூலை 23 அன்று தாக்கல் செய்த 2024 முதல் 2025-ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் ஆயுஷ்மான பாரத் - பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா (PM-JAY) திட்டத்திற்கு கடந்த ஆண்டை விட 10 சதவீத கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் ஆயுஷ்மான பாரத் யோஜனா திட்டத்தின் மூலம் பயனடையும் பயனாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பங்களுக்கு PM-JAY திட்டம் ஒரு வரப்பிரசாதமாக பார்க்கப்படுகிறது.
சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையின் பட்ஜெட் ரூ.87,656 கோடியாக உள்ளது. இது முந்தைய ஆண்டில் ஒதுக்கப்பட்ட ரூ.77,625 கோடியில் இருந்து 12.92% அதிகமாகும்.

சுகாதார ஆராய்ச்சித் துறைக்கு ரூ.3,302 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டில் ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ.2,893 கோடியிலிருந்து 14% அதிகரிப்பாகும்.
கூடுதலாக, ஆயுஷ்மான் பாரத்-பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா (PM-JAY), திட்டத்திற்கு கடந்த ஆண்டில் ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ.6,800 கோடியிலிருந்து ரூ.7,300 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
எதிர்பாராத நோய்களின் போது மருத்துவச் செலவுகள் சற்று அதிகமாக இருக்கும். முன்னெச்சரிக்கையாக பலர் உடல்நலக் காப்பீட்டைத் தேர்ந்தெடுத்தாலும், எல்லோராலும் அதை வாங்க முடியாது. இந்த விஷயத்தை உணர்ந்து, இந்திய அரசாங்கம் 2018-ஆம் ஆண்டில் "ஆயுஷ்மான் பாரத் யோஜனா" திட்டத்தை அறிமுகப்படுத்தியது.
இந்த தேசிய பொது சுகாதார காப்பீட்டு திட்டத்தின் நோக்கம், இந்தியாவில் குறைந்த வருமானம் உள்ளவர்களுக்கு இலவச சுகாதார காப்பீடு வழங்குவதாகும். தற்போது, இந்த திட்டம் சுமார் 55 கோடி மக்கள் மற்றும் 12 கோடி குடும்பங்களுக்கு பயனளிக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது.
டிசம்பர் 20, 2023 நிலவரப்படி, சுமார் 28.45 கோடி ஆயுஷ்மான் பாரத் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் 2023-ஆம் ஆண்டில் மட்டும் 9.38 கோடி வழங்கப்பட்டுள்ளது. தற்போது, இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை மருத்துவ சிகிச்சைக்காக ஒரு குடும்பத்திற்கு ஆண்டுக்கு ரூ. 5 லட்சம் கவரேஜ் வழங்கப்படுகிறது.
தேர்தலுக்கு முன் இந்த ஆண்டு பிப்ரவரியில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டில், ஆயுஷ்மான் பாரத் யோஜனா திட்டத்திற்கு ரூ. 7,500 கோடி ஒதுக்கினார்.
இடைக்கால பட்ஜெட்டில் ஆயுஷ்மான பாரத் திட்டத்தின் கீழ் ஆஷா மற்றும் அங்கன்வாடி தொழிலாளர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு சுகாதாரக் கவரேஜ் நீட்டிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் ரூ.7,300 கோடி PM-JAY திட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் PM-JAY திட்டத்திற்கு ரூ. 6,800 கோடி ஒதுக்கப்பட்டது.
இந்த அதிகபட்ச ஒதுக்கீடு காரணமாக ஆயுஷ்மான் பாரத் கார்டு மூலம் காப்பீடு பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். இதனால் சாமானிய மக்கள் தங்கள் மருத்துவச் செலவுக்கு கடன் வாங்கி நிதிச் சுமையில் சிக்காமல் இருக்க முடியும். தற்போது ஆயுஷ்மான் பாரத் யோஜனா திட்டத்தின் கீழ் கவரேஜ் அதிகரிப்பது போன்ற எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.


Click it and Unblock the Notifications