70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா (PMJAY) என்ற திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தினை ஆயுஷ்மான் பாரத் திட்டம் என்றும் அழைக்கின்றனர். இந்திய அரசாங்கம் முதியோர்களுக்கு சுகாதார நலன்களை வழங்கும் விதமாக இந்த PMJAY திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் தகுதியான பயனாளிகள் அனைவருக்கும் ரூ.5 லட்சம் மதிப்புள்ள இலவச சிகிச்சை வழங்கப்படுகிறது.
இந்த ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் பயன்பெற தகுதியுள்ள முதியவர்கள் ஆயுஷ்மான் கார்டு பெற விண்ணப்பிக்க வேண்டும். இந்தப் பதிவில் ஆயுஷ்மான் பாரத் கார்டு பெறுவதற்கான செயல்முறை மற்றும் அவற்றை வைத்து சரி செய்து கொள்ளக் கூடிய நோய்களின் பட்டியல் ஆகியவற்றைப் பார்ப்போம்.

ஆயுஷ்மான் பாரத் கார்டை வைத்திருப்பதன் நன்மைகள்: முதியோர்கள் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் மூலம் பல்வேறு நோய்களுக்கு பணம் இல்லாமல் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம். ரூ.5 லட்சம் வரையிலான இலவச மருத்துவ சிகிச்சையை முதியோர்கள் குடும்ப உறுப்பினர்களை நம்பி இருக்காமல் பெற்றுக் கொள்ளலாம்.
இதயம் சார்ந்த நோய்கள், சிறுநீரக நோய்கள், புற்றுநோய், கண் புரை, டெங்கு, சிக்கன்குனியா, மலேரியா, மூட்டு மாற்று சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு கடுமையான நோய்களுக்கு ஆயுஷ்மான் பாரத் யோஜனா திட்டத்தின் கீழ் சிகிச்சை பெறலாம். ஆரம்பத்தில் 1760 வகையான நோய்கள் மட்டுமே இந்தத் திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது. பின்னர் மீண்டும் மறு ஆய்வு செய்யப்பட்டு சுமார் 196 நிபந்தனைகளை அரசு அகற்றியுள்ளது.
மூத்த குடிமக்கள் அறுவை சிகிச்சைக்கும் ஆயுஷ்மான் பாரத் யோஜனா திட்டத்தின் மூலம் பலனைப் பெறலாம். புற்றுநோய்க்கான அறுவை சிகிச்சை, பல்மோனரி வால்வு அறுவை சிகிச்சை, பைபாஸ் சர்ஜரி, நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை, முழங்கால் மற்றும் இடுப்பு மாற்று அறுவை சிகிச்சை, நரம்பியல் அறுவை சிகிச்சை போன்ற சிகிச்சைகளும் பெற்றுக் கொள்ளலாம். இந்த அறுவை சிகிச்சைகள் அரசு மருத்துவமனைகளில் மட்டுமல்லாமல் இத்திட்டத்தின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ள தனியார் மருத்துவமனைகளிலும் கிடைக்கின்றன.
ஆயுஷ்மான் கார்டு பெற விண்ணப்பிப்பது எப்படி?: முதலில் https://pmjay.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ PMJAY இணையதளத்த்திற்குச் செல்ல வேண்டும். ஹோம் பேஜில், 'Am I Eligible' என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுத்து, தகுதியைச் சரிபார்க்க வழிமுறைகளைப் பின்பற்றவும். "14555" என்ற கட்டணமில்லா எண்ணை அழைப்பதன் மூலம் தனிநபர்கள் தங்கள் தகுதியைச் சரிபார்க்கலாம்.
நீங்கள் தகுதி பெறுபவராக இருந்தால்.. அடுத்தபடியாக பொது சேவை மையங்களுக்கு சென்று ஆயுஷ்மான் கார்டு பெற விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் ஆதார் கார்டு, பான் கார்டு, ஓட்டர் ஐடி, ஓட்டுனர் உரிமம் என பல்வேறு அரசாங்க ஆவணங்களை வைத்து விண்ணப்பிக்கலாம். தனிநபர்கள் தங்கள் ஆயுஷ்மான் கார்டை ஆன்லைனில் ட்ராக் செய்து டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
ஒரு குடும்பத்திற்கு எத்தனை பேர் ஆயுஷ்மான் பாரத் கார்டு பெற முடியும்?: 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய அனைத்து நபர்களும் அவர்களின் பொருளாதார நிலையை பொருட்படுத்தாமல் இந்த திட்டத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். ஒரு குடும்ப உறுப்பினர் ஏற்கனவே ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் பயன்பெற்றிருந்தால் அதே குடும்பத்தில் உள்ள 70 வயது அல்லது அதற்கு மேற்பட்டு வயதுடைய எந்த ஒரு முதியவரும் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.


Click it and Unblock the Notifications