இந்திய ஐடி துறையில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தது மட்டும் அல்லாமல் வெறும் சமையல் எண்ணெய் தயாரிப்பில் இருந்த சாம்ராஜ்ஜியத்தை ஐடி துறைக்கு இழுத்துக் கொண்டு வந்து, தலைமுறை தாண்டி தொடர்ந்து வளர்ச்சி பாதையில் வைத்திருக்கிறார் அசிம் பிரேம்ஜி.
அசிம் பிரேம்ஜி தற்போது விப்ரோ-வில் நேரடியாக நிர்வாக பணிகளில் முடிவுகளை எடுக்காவிட்டாலும், விப்ரோ நிர்வாக குழுவில் ஆதிக்கம் செலுத்தி வருகிறார். தற்போது அசிம் பிரேம்ஜி-யின் முழு ஃபோகஸ்-ம் தனது சொந்த முதலீட்டு நிறுவனம் மீது தான்.

விப்ரோ சாம்ராஜ்ஜியத்தின் எதிர்காலத்திற்காக வலிமையான அடித்தளத்தை அமைத்து வருகிறார் அசிம் பிரேம்ஜி. சுமார் 10 பில்லியன் டாலர் மதிப்பிலான முதலீட்டை நிர்வாகம் செய்து வருகிறது பிரேம்ஜி இன்வெஸ்ட் நிறுவனம்.
இந்த முதலீட்டு நிறுவனம் தற்போது செயற்கை நுண்ணறிவு (AI) துறை நிறுவனங்களில் அதிக அளவில் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. அதே நேரத்தில், தனது சொந்த செயற்கை நுண்ணறிவு முதலீட்டு கருவிகளை (AI Tools) மேம்படுத்துவதற்கான பணிகளிலும் ஈடுபட்டு வருகிறது.
இந்தியாவின் முன்னணி பெரிய சொத்து மேலாண்மை நிறுவனங்களில், தனியார் ஈக்விட்டி முதலீடுகளுக்காகச் செயற்கை நுண்ணறிவு கருவிகளைப் பயன்படுத்திய முதன்மை நிறுவனங்களில் ஒன்றாக பிரேம்ஜி இன்வெஸ்ட் திகழ்கிறது.
சமீபத்தில் ஜியோ பைனான்சியல் மற்றும் பிளாக்ராக் இணைந்து உருவாக்கிய ஜியோ பிளாக்ராக் கூட்டணி மூலம், பிளாக்ராக் நிறுவனத்தின் பிரபல முதலீட்டு மென்பொருளான Aladdin-ஐ இந்திய சந்தையில் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது. கிட்டத்தட்ட இதேபோன்ற கருவியை தான் அசிம் பிரேம்ஜி தனது சொந்த முதலீட்டுக்காக உருவாக்கியுள்ளார்.
2017ஆம் ஆண்டில் பிரேம்ஜி இன்வெஸ்ட் நிறுவனத்தின் நிர்வாக பங்குதாரர் மற்றும் முதலீட்டுத் தலைமை அதிகாரியாகப் பொறுப்பேற்ற பிறகு அளித்த முதல் பேட்டியில் டி.கே.குரியன் அவர்கள், "பொதுச் சந்தை முதலீடுகளுக்காக செயற்கை நுண்ணறிவு அளவியல் மாதிரியை (AI quant model) உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறோம்" என்று கூறியுள்ளார்.
"பல மடங்கு லாபம்" (exponential returns) ஈட்டியுள்ள இந்தச் சொத்து மேலாண்மை நிறுவனம், செயற்கை நுண்ணறிவு துறையில் மேலும் அதிகமாக முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
BlackRock Inc. மற்றும் SoftBank Group Corp போன்ற உலகளாவிய முதலீட்டு நிறுவனங்கள், சந்தை வாய்ப்புகளை அடையாளம் காண ரியல்டைம் தரவு பகுப்பாய்வுக்காகச் செயற்கை நுண்ணறிவை நம்பியுள்ளன. இதேபோல் பிரேம்ஜி இன்வெஸ்ட் நிறுவனம் தனது முதலீட்டுக்காகச் சொந்தமாக ஒரு ஏஐ டூலை கண்டுபிடித்துள்ளது.
பிரேம்ஜி இன்வெஸ்ட் நிறுவனம் AI துறையில் தொடர்ந்து முதலீடு செய்யவும் திட்டமிட்டுள்ளன. பிரேம்ஜி இன்வெஸ்ட் நிறுவனம் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு செயற்கை நுண்ணறிவு கருவிகளை உருவாக்கும் பணிகளைத் தொடங்கியது.
இதற்காக 14 AI பொறியாளர்களை பணியில் அமர்த்தியுள்ளதாக குரியன் தெரிவித்தார். அதே சமயத்தில், இந்த புதிய தொழில்நுட்ப துறையில் முயற்சிக்கும் நிறுவனங்களுக்கும் நிதி திரட்டுவதற்கு அவர்கள் உதவி செய்து வருகின்றனர்.
உலகளவில் 10,000க்கும் மேற்பட்ட நிறுவனங்களை 600க்கும் மேற்பட்ட அளவுகோல்களைக் கொண்டு ஆராய்வதற்கு ஏஐ டூல்கள் உதவுகிறது. இதன் மூலம், முதலீட்டு வாய்ப்புகளை எளிதாக அடையாளம் காண முடிகிறது.
பன்னாட்டு மாபெரும் முதலீட்டு நிறுவனங்களுக்கு இணையாக பிரேம்ஜி இன்வெஸ்ட் நிறுவனம் ஏஐ டூல்ஸ் வைத்து முதலீடு செய்ய துவங்கியுள்ளது. இது இந்திய முதலீட்டுச் சந்தையில் முக்கியமான மாற்றமாகப் பார்க்கப்படுகிறது.
பிரேம்ஜி இன்வெஸ்ட் நிறுவனம் இதுவரையில் தரவு மேலாண்மை மென்பொருள் நிறுவனமான Cohesity Inc., லண்டனை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் நிறுவன தொழில்நுட்ப சேவை தளமான Holistic AI, இதை தொடர்ந்து Ikigai மற்றும் Pixis போன்ற ஏஐ துறை நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளது.


Click it and Unblock the Notifications