இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனமான விப்ரோ தலைவரான அசிம் பிரேம்ஜி சமீபத்தில் தனது மகன்களான ரிஷாத் பிரேம்ஜி மற்றும் தாரிக் பிரேம்ஜி ஆகியோருக்கு மிகப்பெரிய மதிப்பிலான பரிசை வழங்கியுள்ளார். அசிம் பிரேம்ஜி இந்தியாவின் பெரும் பணக்காரர்களில் ஒருவர் மட்டும் அல்லாமல் நாட்டின் மிகப்பெரிய நன்கொடையாளர்.
மக்களுக்கும், மக்களின் நலனுக்கும் பெரிய அளவில் உதவி செய்து வரும் அசிம் பிரேம்ஜி தனது இரு மகன்களுக்குத் தனது கட்டுப்பாட்டில் இருக்கும் விப்ரோ பங்குகளில் சுமார் 1 கோடிக்கும் அதிகமான பங்குகளைப் பரிசாகக் கொடுத்துள்ளார். இந்தப் பங்குகளின் மதிப்பு 60.12 மில்லியன் டாலர் எனக் கூறப்படுகிறது. இதன் இந்திய ரூபாய் மதிப்பு சுமார் 500 கோடி ரூபாய்.

அப்பாக்கள் மகன்களுக்குக் கிப்ட் கொடுப்பது என்பது பெரிய விஷயம் இல்லை என்றாலும் 500 கோடி ரூபாய்க்குக் கிப்ட் கொடுப்பது பெரிய விஷயம் தான். கடைசியாக உங்க அப்பா உங்களுக்குக் கொடுத்த கிஃப்ட் என்ன..? கமெண்ட் பண்ணுங்க.
அசிம் பிரேம்ஜி தனது இரு மகன்களுக்குச் சுமார் 1 கோடிக்கும் அதிகமான விப்ரோ பங்குகளைப் பரிசாகக் கொடுத்த நிலையில், விப்ரோவில் அசிம் பிரேம்ஜியின் பங்கு இப்போது சுமார் 215.5 மில்லியன் பங்குகளாக உள்ளது. இதன் மூலம் அசிம் பிரேம்ஜி-யிடம் மொத்த பங்கு இருப்பு 4.3 சதவீதத்தில் இருந்து 4.12 சதவீதமாகக் குறைந்துள்ளது.
மேலும் அசிம் பிரேம்ஜி மகன்களான ரிஷாத் மற்றும் தாரிக் ஆகியோர் தலா 51 லட்சம் பங்குகளைப் பெற்றது மூலம், விப்ரோ நிறுவனத்தில் இவரது பங்கு இருப்பு 0.03 சதவீதத்தில் இருந்து 0.13 சதவீதமாக உயர்ந்துள்ளது.

இந்தப் பரிமாற்றத்தில் சுமார் 10.23 மில்லியன் பங்குகளை 489 ரூபாய் விலையில் ஜனவரி 20ஆம் தேதி பரிமாற்றம் செய்யப்பட்டதாகப் பங்குச்சந்தையில் விப்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. இதன் மூலம் அசிம் பிரேம்ஜி குடும்பம் தற்போது மொத்தமாக 4.43 சதவீத பங்குகளை வைத்துள்ளனர். இதில் அசிம் பிரேம்ஜி மனைவி யாஸ்மின் 0.05 பங்குகளை வைத்துள்ளார்.
மேலும் விப்ரோ நிறுவனத்தின் ப்ரோமோட்டர் குரூப் முதலீட்டாளர்கள் சுமார் 72.9 சதவீத பங்குகளை வைத்துள்ளனர். இன்று காலை வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையில் விப்ரோ பங்குகள் 0.10 சதவீத உயர்வில் 478.50 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்பட்டது.


Click it and Unblock the Notifications