இந்தியாவில் இருந்து அமெரிக்கா செல்லும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில், விசாவுக்காக விண்ணப்பிக்கும் மக்கள் பெரும் துயருக்கு ஆளாகி வருகின்றனர். இதனால் NRI-களின் பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகளையும், பேரன், பேத்திகளையும் பார்க்க முடியாமல் தவிக்கும் நிலை உருவாக்கியுள்ளது.
இந்திய மக்கள் அமெரிக்கச் செல்ல அடிப்படைத் தேவையான விசாக்களை பெற நீண்ட காலம் காத்திருக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது. கொரோனாவுக்கு பின்பு இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு சுற்றுலா மற்றும் வர்த்தகத்திற்காகச் செல்வோர் எண்ணிக்கை பெரிய அளவில் அதிகரித்தது.

இதனால் B1/B2 விசாக்களை பெற ஒரு வருடத்திற்கும் அதிகமான காலம் உருவானது. இதைச் சரி செய்ய அமெரிக்க அரசு தரப்பில் பல முக்கியமான நடவடிக்கைகளை எடுத்துச் சரி செய்து 100 நாட்கள் வரையில் குறைந்தது. ஆனால் சமீபத்திய தரவுகளின்படி, கொல்கத்தாவில் B1/B2 விசா விண்ணப்பதாரர்கள் 499 நாட்கள் வரை காத்திருக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
2023 ஆம் ஆண்டில், அமெரிக்க அரசு இந்திய விண்ணப்பதாரர்களுக்கு 1.4 மில்லியன் விசாக்களை வழங்கியது, இது ஒரு சாதனை அளவாகும். மேலும், சுற்றுலா விசா நியமனங்களுக்கான காத்திருப்பு காலம் 75% குறைக்கப்பட்டது. இருப்பினும், விண்ணப்பங்களின் அதிகரிப்பு மற்றும் பிற காரணிகளால், காத்திருப்பு காலம் மீண்டும் அதிகரித்துள்ளது.
இந்தியத் தூதரகங்களில் தற்போதைய B1/B2 விசா காத்திருப்பு காலம்:
கொல்கத்தா: 499 நாட்கள்
மும்பை: 427 நாட்கள்
புது தில்லி: 432 நாட்கள்
சென்னை: 486 நாட்கள்
ஹைதராபாத்: 435 நாட்கள்
இந்தியாவில் உள்ள அமெரிக்கத் தூதரகங்களில் B1/B2 விசாக்களுக்கான காத்திருப்பு காலம் இதுதான். இதற்கிடையில், இன்டர்வியூ வைவர் விசிட்டர் விசாக்களுக்கான காத்திருப்பு காலம் டெல்லி மற்றும் கொல்கத்தாவில் சுமார் 13-14 நாட்கள் ஆகும். அதாவது B1/B2 விசா பெறுவதற்கு இன்டர்வியூ தேவையில்லாத பிரிவு.
B1/B2 விசா என்பது அமெரிக்காவிற்கு வணிக நோக்கங்களுக்காக (B1) அல்லது சுற்றுலா, நண்பர்கள் மற்றும் குடும்பத்தைச் சந்தித்தல், மருத்துவ சிகிச்சை, பொது நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக (B2) பயணிக்க அனுமதிக்கும் ஒரு குறுகிய கால விசாவாகும். இது இரண்டு வகையான பயணத்தையும் அனுமதிக்கும் ஒரு இணைப்பு விசா முறையாகும். பயணியின் காரணத்திற்கு ஏற்ப விசா வழங்கும் முறை மாறும்.
விசா காத்திருப்பு காலங்கள் தொடர்ந்து மாறிக்கொண்டே இருப்பதால், அமெரிக்காவில் இருக்கும் உறவினர்களை சந்திக்க இப்போதே விண்ணப்பம் செலுத்துவது நல்லது. எப்போது விசாவுக்கான இண்டர்வியூ கிடைக்கும் என தெரியாத நிலையில் முன்கூட்டியே விண்ணப்பித்து காத்திருப்பு பட்டியலில் இருப்பது நல்லது.
இந்த நிலையில் அடுத்த சில மாதத்தில் அதிபராக பொறுப்பேற்கும் டொனால்டு டிரம்ப் விசா அனுமதி முறையை வேகமாக்கி செயல்படுத்த உத்தரவிட்டால், காத்திருப்பு காலம் குறைந்து இந்தியர்கள் அதிகளவில் அமெரிக்காவுக்கு பறப்பார்கள்.


Click it and Unblock the Notifications