நாக்பூர்: யோகா குருவுக்கு சொந்தமான பதஞ்சலி நிறுவனம் நாக்பூர் நகரில் மிகப்பெரிய உணவு மற்றும் மூலிகை பூங்காவை திறந்து இருக்கிறது. நாக்பூரின் மிகன் பகுதியில் நிறுவப்பட்டுள்ள இந்த மூலிகை பூங்காவை திறக்கும் நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, மகாராஷ்ட்ரா முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னவிஸ், பதஞ்சலி நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் ஆச்சார்யா பாலகிருஷ்ணா மற்றும் பாபா ராம்தேவ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஆலையை திறந்து வைத்து நிகழ்ச்சியில் பேசிய யோகா குரு ராம்தேவ் இந்த ஆலை ஒரு நாளைக்கு 800 டன்கள் ஆரஞ்சு ஜூஸ் தயாரிப்பதற்கான திறன் கொண்டது என தெரிவித்துள்ளார். இங்கே உற்பத்தி செய்ய தயார் செய்யப்படும் ஆரஞ்சு ஜூஸ் நூறு சதவீதம் இயற்கையானது என்றும் எந்த ஒரு பிரசர்வேட்டிவும் அல்லது சர்க்கரையும் இதில் சேர்க்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த நாட்டு மக்களுக்கு உடல் ஆரோக்கியத்தை வழங்கக்கூடிய ஒரு பானமாக இந்த ஆரஞ்சு ஜூஸ் இருக்கும் என்றும் விவசாயிகளுக்கு வளத்தை வழங்கக்கூடிய ஒரு தொழிலாக இது மாறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஆரஞ்சு பழத்தின் தோளிலிருந்து எண்ணெய் எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். இந்த உற்பத்தி ஆலையில் 1500 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட இருப்பதாகவும் ஏற்கனவே அதில் 1000 கோடி ரூபாயை முதலீடு செய்து விட்டதாகவும் பாபா ராம்தேவ் தெரிவித்துள்ளார் .
ஆசியாவின் மிகப்பெரிய ஜூஸ் மற்றும் உணவு பதப்படுத்தல் ஆலை இது என அவர் கூறியுள்ளார். இந்த ஆலையை பயன்பாட்டுக்கு கொண்டு வந்த போது அதில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்கள் அனைவருமே ஆரஞ்சு மாலைகளை அணிந்திருந்தனர். தங்களுடைய ஆலை பூஜ்ஜிய கழிவு என்ற அடிப்படையில் செயல்பட இருக்கிறது என கூறியுள்ளார்.
இங்கே உற்பத்தி செய்யப்படும் ஆரஞ்சு மற்றும் பிற பொருட்களின் தரம் உலக தரத்தில் இருக்கும் என்றும் உலகம் முழுவதும் இந்த பொருட்கள் விற்பனைக்கு செல்ல இருக்கின்றன என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் இந்த ஆலையில் ஆரஞ்சு மட்டும் இல்லாமல் எலுமிச்சை ,நெல்லிக்காய் , மாதுளம் பழம், கொய்யாப்பழம், திராட்சை, கேரட், மாங்காய் உள்ளிட்டவற்றில் இருந்தும் ஜூஸ்கள் எடுத்து விற்பனை செய்யப்படும் என கூறியுள்ளார்.
இந்த ஆலையின் மூலம் உள்ளூர் பொருளாதாரம் உயரும் என்றும் விவசாயிகளின் வருமானம் அதிகரிக்கப்படும் என்றும் தெரிகிறது. விவசாயிகளிடமிருந்து நேரடியாக பழங்கள் கொள்முதல் செய்யப்படும் என்றும் இதன் மூலம் தரகர்களுக்கு செல்ல வேண்டிய கமிஷன் தொகை நேரடியாக விவசாயிகளையே சென்று சேர்ந்து விடும் என்றும் பதஞ்சலி நிறுவனம் தெரிவித்துள்ளது.
Story Written : devika


Click it and Unblock the Notifications